முயல் மட்டுமா செத்தது? காதலும்தான்!

சூரியன் மறைந்து இருள் பரவத் தொடங்கிவிட்டது. வீதியில் விளக்குகள்கூட மங்கலாக தூரம் ஒன்று என்ற ரீதியில் அழுது வடிந்து கொண்டிருந்தது. அது ஒரு காட்டுப் பகுதியின் ஊடாக உள்ள ஒரு வீதி, சுதர்சன் உற்சாகமாக கார் ஓடிக்கொண்டிருந்தான். அருகில் அவனுடைய அன்பு மனைவி, சினிமா பாடலை ரசித்தவண்ணம் கண்மூடி பாடலுடன் தானும் சேர்ந்து மெதுவாக பாடிக்கொண்டிருந்தாள்.

சுதர்சன் கடைக்கண்ணால் மனைவியைப் பார்த்தான், சுமதி அழகான பெண், அறிவுடன் கூடிய அமைதியான பெண், சுதர்சனும் சுமதியும் இணைபிரியாத தம்பதியர்கள். ஆதர்ச தம்பதியர்கள் என்று நட்பு வட்டாரத்தில் பேசப்பட்டார்கள். அவன் தன் மனைவியிடம் கோபமாக என்றுமே நடந்து கொண்டதில்லை. சுமதியும் ஒரு தடவை கூட தன் கணவனை எதிர்த்து கதைத்திருக்கமாட்டாள். சுதர்சனின் எண்ணங்கள் அவனது காதல் மனைவியை சுற்றி வட்டமிட்டது. அவன் ஒரு அலுவலகத்தில் பெரிய பதவியில் வேலை பார்த்துக் கொண்டிருந்தான். சுமதியும் வேலை பார்த்த பெண்தான், திருமணத்தின் பின் கணவனின் வேண்டுகோளிற்கிணங்க வேலைக்குப் போவதை நிறுத்திவிட்டாள். வீட்டிலேயே அவனுடைய நோய்வாய்ப்பட்ட பெற்றோரை கவனித்துக்கொண்டு, வீட்டு நிர்வாகத்தையும் திறம்பட நடத்திவந்தாள். வீட்டு வேலைகள் செய்ய வேலைக்காரர்கள் இருப்பதினால் அவளுக்கு எந்தவித சிரமமும் இருக்கவில்லை. மாலை வேளையில் கோவில், பீச், ஷாப்பிங் என்று சுற்றி வருவார்கள். வார விடுமுறையில் கொஞ்சம் தூரமான இடங்களுக்கு சுற்றுலா செல்வார்கள். அவர்களைப் பொறுத்தவரை வாழ்க்கை என்பது ஒரு வசந்தமாக பூத்துக் குலுங்கியது அன்றும் ஒரு வார விடுமுறை நாள்தான், அவர்கள் ஒரு பயணம் புறப்பட்டு இருந்தார்கள்.

காட்டின் ஊடாக அமைக்கப்பட்ட வீதியினூடாக காரில் சென்று கொண்டிருந்தனர், வீதியில் அவர்களுடைய கார் மட்டும்தான் ஓடிக்கொண்டிருந்தது. திடீரென சுதர்சன் பிரேக் போட்டு காரை நிறுத்தினான், என்னவெனச் சுமதியும் கண்களாலேயே வினவினாள்! முயல் ஒன்று அடிபட்டுவிட்டது, என்று சொன்னபடியே அவன் கீழே இறங்கினான். சுமதியும் கீழே இறங்கினாள், முயல் இறந்தபடி கார் முன்னே கிடந்தது. இது முதலிலேயே இறந்துபோன முயல் போன்று இருக்கின்றது. யாரோ காரின் முன்னே வீசியது போல் அல்லவா இருக்கின்றது. தனக்குள்ளேயே அவன் சொல்லிக்கொண்டான் அப்போது அங்கு ஒரு மனிதன் வந்தான். என்ன விஷயம்? என்ன நடந்தது? என வினாவியபடி வந்த அவன் சுதர்சன் உடன் கதைத்துக் கொண்டிருந்தான். அவனின் பார்வை சுமதி பக்கம் பார்க்கும் போது அசௌகரியமாக இருப்பது போன்று சுமதி உணர்ந்தாள். சுதர்சனும் அவ்வாறே உணர்ந்ததால், காரின் உள்ளே போய் அமரும்படி கண்ஜாடை காட்டினான். அதன்படி அவளும் உள்ளே போய் அமர்ந்து கொண்டாள். அந்த மனிதனிற்கு அந்த நிகழ்வு பிடிக்கவில்லை. அவனுடைய குரலில் ஏற்றம் இருந்தது, கோபம் கொப்பளித்தது, இருவருக்குள்ளும் வார்த்தைகள் தடித்தன, கைகலப்பு ஏற்பட்டது சுமதி பயந்தாள், கணவனை வந்து காரில் ஏறும்படி சத்தமாக கத்தினாள். ஆனால் நடந்தது வேறு விதமாக இருந்தது, மிகவும் பயங்கரமாக இருந்தது, கண்சிமிட்டும் நேரத்தில் அவன் சுதர்சனை தள்ளி விழுத்திவிட்டு, காரில் ஏறி டிரைவர் சீட்டில் இருந்து உள்பூட்டுப் போட்டுப் பூட்டிக் கொண்டான். நடந்த விபரீதத்தை சுமதி பின்புதான் புரிந்துகொண்டாள் அவளால் இறங்கி வெளியில் செல்ல முடியாமல் உள் பூட்டு போடப்பட்டு இருப்பதை உணர்ந்தாள்.

அவள் என்னதான் சத்தம் போட்ட போதும் எந்த சத்தமும் வெளியில் கேட்கவில்லை. கார் கண்ணாடியை அடித்தாள், எதுவும் முடியவில்லை. வந்தவனை தாக்க முயற்சித்தாள், காருக்குள் இருந்த அவன் சுமதியின் கன்னத்தில் ஓங்கி ஒரு அறை விட்டான், சுமதி குருவிக் குஞ்சைப்போல் அடங்கி ஒடுங்கி விட்டாள். வெளியில் இருக்கும் சுதர்சனால் எதுவும் செய்ய முடியவில்லை. போனை காருக்குள் வைத்து விட்டு இறங்கிவிட்டான், அதனால் யாருக்கும் தொலைபேசியில் தொடர்பு ஏற்படுத்தி உதவியும் கேட்கமுடியவில்லை. அடர்ந்த இருளில் உள்ளே என்ன நடக்கின்றது என்றும் தெரியவில்லை. கார் கண்ணாடியை உடைத்து விடலாம் என்றால், அவன் கை கால்கள் நடுங்கின, வந்திருப்பவன் முரடன், அவனுடன் சண்டை செய்யக்கூடிய தைரியம் தன்னிடம் இல்லை என்பதை உணர்ந்தான். தாங்கள் இரண்டு பேர் இருப்பதனால் அவன் ஒருவன்தானே அவனை எப்படியும் சமாளிக்கலாம் என்றாலும், தான் ஆண்! தன்னாலேயே முடியவில்லை என்றால், மனைவி மட்டும் எப்படி துணிவாக இருப்பாள்? என்று எண்ணினான். ஆனால் சுமதி தன் கணவன் தன்னை காப்பாற்றுவான், என்று எதிர்பார்த்துக் காத்திருந்தாள். ஏதாவது மரக்கட்டையை கையிலெடுத்து கார் கண்ணாடியை உடைத்து உள்ளே வந்து விடுவார் என்று எதிர்பார்த்தாள். அப்படி அவர் வரும் போது, தானும் வீரத்தோடு போராடி அவனை வீழ்த்தி விட வேண்டும் என மனக்கணக்கு போட்டு இருந்தாள். ஆனால் எல்லாம் கற்பனை ஆகிப் போய்விட்டது. அவளுடைய கணவனும் கையாலாகாதவனாக காரின் பின்புறமும் முன்புறமும் ஓடிக்கொண்டிருந்தான். ஆனால் உள்ளே வருவதற்கான எந்தவித முயற்சியையும் எடுக்கவில்லை என்பதை பார்த்து அவளுடைய  அந்த இரவு அவளிற்கு நரகமாக்கிக் கொண்டிருப்பதை எண்ணி வருந்தினாள். சில பல நிமிடத் துளிகள் நீடித்தன…

வந்தவனும் சுமதியை விட்டு விட்டு, காருக்குள் இருக்கும் போன், பணம், நகைகள் போன்றவற்றை எடுத்துக் கொண்டு இறங்கினான். போகும்போது முயலையும், எடுத்துக்கொண்டு போகின்றான். இறந்த முயலைக் எடுத்து, தோளின் மேலே போட்டு, நடைபோட்டு சென்றான் அந்த முரடன். நடப்பவற்றை அவதானித்தபடி இருந்த சுதர்சன், உடனடியாக செயற்பட ஆரம்பித்தான். காரினுள்ளே வந்து இருந்தவண்ணம், மனைவியை பார்த்தான்.

அவள் ஆடைகளை சரி செய்த வண்ணம், அழுதபடி இருந்ததைப் பார்த்து, “என்ன நடந்தது என்று?” கரகரப்பான குரலில் கணவன் கேட்டதைப் பார்த்து சுமதி திகைத்துப் போனாள். “எப்படி இருக்கின்றாய்? என்று கேட்பீர்கள் என்று நினைத்தேன். ஏன் ஒரு மாதிரியாக கதைக்கிறீங்க?” என்று சுமதி கேட்டாள் “அது இருக்கட்டும், இங்க இதுவரைக்கும் என்ன நடந்தது?” என்று குற்றம் சாட்டுவதைப்போல் சுதர்சன் அவளைப் பார்த்து கேட்டான். “ஏன் உங்களுக்கு ஏதும் தெரியாதா?” பதிலுக்கு அவளும் வினாவினாள். கோபத்தின் உச்சிக்கே போய்விட்டான் சுதர்சன் “நான் ஆம்பிள அப்படித்தான் கேட்பன், கேள்விக்கு மட்டும் பதில் சொல்லு!” திகைத்துப் போனாள் சுமதி நிமிர்ந்து அவனைப் பார்த்து, “ஆம்பிளையா? உங்கள் ஆம்பள தனத்தை வந்த முரடனிடம் ஏன் காட்டவில்லை? அந்த மனிதனின் முகத்தில் நான் என் நகத்தால் கீறியபோது, அவன் ரத்தத்தைத் துடைத்துவிட்டு பின், என்னை அடித்தான். அப்போது இந்த ஆம்பளையின் கைகள் எனக்கு உதவிக்கு வரும் என்று எதிர்பார்த்தேன். ஆனால் நீங்க எந்த முயற்சியும் எடுக்கவில்லை. என் உயிர் காதலி, என் உயிர் காதலி, என்று சொல்லுவீங்களே? அந்த காதல் செத்துவிட்டதா? ஆனால் இப்போ உங்க மேல வைத்த நம்பிக்கை மட்டுமல்ல, உங்கள் மேல் வைத்த காதலும் செத்துவிட்டது!” என்று சொல்லிவிட்டு காரை விட்டு இறங்கி விட்டாள்.

“சுமதி” என அழைக்க எண்ணிய சுதர்சன் தன்னைக் கட்டுப்படுத்திக் கொண்டான். நான் ஆம்பிள, லேசுல பணிந்து போகக் கூடாது. எவ்வளவு நேரம் வெளியில குளிரில் நிற்பாள்? தானாக வருவாள் என்று எண்ணினான். ஆனால் எதிர்ப்பக்கம் இருந்து வந்த பஸ்சை மறித்து, அதில் அவள் ஏறி சென்று விட்டாள். தப்பு செய்து விட்டேனோ? என எண்ணிய படி, அவன் காரை ஸ்டார்ட் செய்தான்.  காரும் ஸ்டார்ட் ஆகவில்லை. அவனுடைய வாழ்வும் அதே இடத்தில் நின்று விட்டது.

சுதர்சனின் வாழ்வும் காரும் நடுத்தெருவில் நின்றது. கணவனை திரும்பிக்கூட பார்க்காமல், அவள் சென்று கொண்டே இருந்தாள். வாழ்க்கையில் காதல் மட்டுமல்ல ஆணித்தரமான நம்பிக்கையும் தேவை என்பதை சுதர்சன் அன்று புரிந்தானோ? இல்லையோ? வாசித்துக் கொண்டிருக்கும் நீங்கள் புரிந்துகொண்டீர்கள் என்றால் உங்களுடைய வாழ்க்கை வசந்தமாக இருக்கும்.

எழுத்து,
மங்கை அரசி.

தனிமைப்படுத்தப்பட்டேன்

எவ்வளவு நேரம் தான் ஜன்னல் ஊடாக வெளி நிலத்தை பார்ப்பது? வெறிச்சோடிய வீதி, வாகன ஓட்டமில்லாது இரைச்சலும் இல்லை. எந்த நேரத்திலாவது ஒன்றிரண்டு வாகனம் ஓடினாலும் வீதியில் நிசப்தம் குடிகொண்டிருந்தது. காக்கை குருவிகள் மட்டும் அங்கொன்றும் இங்கொன்றுமாக பறந்தன. சலிப்புடன் ஜன்னலை விட்டு வீட்டினுள் வந்து புத்தகங்களை புரட்டினேன், ஏற்கனவே படித்த புத்தகங்கள் தான் அவை. பத்திரிகையை விரித்தேன் நான் வாசிக்காத வரிகள் எதுவும் இல்லை. திரும்பவும் ஜன்னல் ஊடாக நோட்டமிட்டேன், மாலை நேரத்தில் பந்து விளையாடும் பையன்கள் வரவே இல்லை, காலையில் பத்திரிகையை போட்ட பையனை நான் ஆசையோடு பார்த்ததை நினைவு கூர்ந்தேன். காதலிக்க தொடங்கினாள் தபால்காரன் தெய்வம் ஆகிவிடுவான், என பாடிய புலவர், அனுபவித்துத்தான் பாடியிருப்பார். கொரோனா வந்ததனால் பத்திரிகை போடுபவன் தெய்வமாக தான் தெரிகின்றான். மனதில் ஓடிய எண்ணங்கள் வாயை மெதுவாக சிரிக்க செய்தன, நல்ல நகைச்சுவை தான் இந்த தனிமைச்சிறையிலும் வருது. ரணகளத்திலும் ஒரு குதூகலம். ஒரு கண நேரம் மகிழ்ச்சிதான் திரும்பவும் மனம் சலித்துக் கொண்டது. மனிதர்களைப் பார்க்க ஆசையாய் இருந்தது ஆனால். 

நான் தனி அறையில் இருக்கின்றேன் என்னுடைய உணவு தேவைகள் உள் ஜன்னல் ஊடாக நிறைவேறியது. இயற்கை உபாதைக்கு அறையுடன் சேர்ந்த குளியலறை உள்ளது. என்னுடைய அறையில் சகல வசதிகளும் உள்ளன. ஆனால் வெறுமையாக உணர்கின்றேன்.   வீட்டுச் சிறை என்பது  இதுதானா? நான் எந்த தவறும் செய்யவில்லை. ஊர் சுற்றிப் பார்க்க அண்டைய நாடு சென்று திரும்பியதனால் எனக்கு இந்த நிலை.

எழுந்து போய் டிவியை முறுக்கினேன், கொரோனா என்றுதான் டிவி சொல்லிக்கொண்டிருந்தது டிவியை நிறுத்தி கம்ப்யூட்டரை இயக்கினேன் அங்கேயும் கொரோனா செய்திதான் எல்லாம் எதிர்மறைச் செய்திகள் மொபைல் போனை எடுத்தேன் என்னுடன் கதைத்த அத்தனை நண்பர்களும் கொரோனாவின் கோரத்தாண்டவத்தை திரும்பத் திரும்பக் கூறினார். மன அழுத்தம் வேகமாக இருந்தது. மாடியில் இருந்து குதித்து விடலாமா, என நினைத்தேன் ஆனால் அறைக்கு வெளியில் போக வழியில்லை. திரும்பவும் ஜன்னலோரம் வந்தேன் எதிர் வீட்டு ஜன்னலில் ஒரு பூஞ்சிட்டு, எனக்கு கை காட்டியது. நானும் ஆர்வமுடன் கை காட்டினேன். என்னுடன் வரும்படி சைகை காட்டினேன். குழந்தை மறுப்பு தெரிவித்த படி உள்ளே ஓடி விட்டது.

தொடர்ந்து வீதியை நோக்கியவண்ணம் நின்றேன். வீதியில் வாகன சத்தம் கேட்டது, வாகனம் நிறுத்தப்பட்டது, அதிலிருந்து ஒரு மனிதன் இறங்கினான், ஆச்சரியப்பட்டுப் போனேன். வேற்றுகிரகவாசியோ! என அவருடைய செய்கையை கவனித்த பின் வாய்விட்டு சிரித்து விட்டேன். முதலில் முகக் கவசத்தை கழட்டினார், பின் தலையில் இருந்து கால்வரை போடப்பட்டிருந்த உடையையும் கழட்டினார், கழட்டிய உடைகளை ஒரு பிளாஸ்டிக் பையினுள் போட்டுக் காருக்குள் வைத்து விட்டார். காலில் உள்ள சப்பாத்துக்களை ஏற்கனவே கழட்டி விட்டார். காலில் செருப்பு அணிந்தபடி நிமிர்ந்தார். அவரை பார்த்த நான், அட நம்ம வைத்தியர் தம்பி. என மெதுவாக சொல்லிக் கொண்டேன். வீட்டின் அழைப்பு மணியை அழுத்திவிட்டு திரும்பிவந்து தூரமாக நின்றார். உள்ளிருந்து யாரோ கதவைத் திறந்தபோது, உள்ளே சென்று குளியல் அறைக்குள் நுழைந்து விட்டார் என நான் கணித்துக் கொண்டேன். குளியலறையில் வெளிச்சம் பாய்ச்சப்பட்டதனால், என் அனுமானம் சரியாக இருந்தது. வெறும் கண்ணுக்குத் தெரியாத கொரோனாவால், சகல வல்லமையும் பொருந்திய மனித உலகமே பயந்து நடுங்குவது வேடிக்கையாகத்தான் இருந்தாலும். தவிர்க்க முடியாத செயல் இது. பூமிப்பந்தில் உள்ளவர்களின் சிந்தனைகள் எல்லாம் கொரோனா என்று ஓடுகின்றது. கொரோனா நோயை எப்படி ஒழிப்பது? கொரோனா நோயை எப்படி சுகப்படுத்துவது? கொரோனாவிலிருந்து இறந்தவர்களை எப்படி அடக்கம் செய்வது? என்பவையே மனித மூளையின்  தேடுதலாக இன்று உள்ளது. உலகமே இன்று ஒரு நேர்கோட்டில் இயங்குகின்றது

எப்படியான உணவு வந்தாலும் நான் உண்பேன், குறை ஏதும் சொல்ல மாட்டேன். இருமல், தும்மல், மூக்கு கூட சிந்தாமல் என்னைக் கட்டுப்படுத்தி வைத்துள்ளேன். மேற்படி விடயம் நடந்துவிட்டால் நோயாளி என கருதி என் சிறை காலம் கூடிவிடலாம். 14 நாட்கள் எப்போது தீரும்? என்று நான் கை விரல்களில் எண்ணி களைத்துப் போய்விட்டேன் நாட்கள் மட்டும் ஊரவில்லை, மணித்தியாலங்கள் நிமிடங்கள் கூட நகர்வதில் சோம்பல்.

வாகன நெரிசலும், இரைச்சல் சத்தம், வெயில் சூடு, என எதை எதையெல்லாம் வெறுப்பாய் நோக்கினோமோ! அவையெல்லாம் வேண்டும் போல் உள்ளது. எனக்கு சாப்பாடு வரும் போது சோப்பு கட்டியும் உடன் சேர்ந்து வருகிது. சோப்புப் போட்டுக் கை கழுவி கழுவி கைரேகையும் அழிஞ்சு போச்சு. கை கழுவுவதற்காக குளியலறைக்கு நடப்பதுவே என்னுடைய நாளாந்த உடற்பயிற்சியானது சீனாக்காரன் சாப்பிட்டதற்கு நான் கைகழுவுகின்றேன்? என்று பாடிப்பாடி நேரத்தை ஓட்டிக் கொண்டு இருக்கின்றேன்

எழுத்து,
மங்கை அரசி.

தளர்விலும் வாழ்வெழுது ஆளுமைகள்

அளவில்லா அன்புடன் அனைவரும் சுற்றி நின்று பார்க்க,
ஆசைகள் இருந்தும் அசைந்து படுக்க முடியா உடல்.
இளகிய முள்ளந்தண்டு எடுத்து வைக்க இயலாக் கால்கள்,
ஈ மொய்த்தால் கூட எதுவும் செய்யாக் கை.
உள்ளம் உலகை சுற்ற ஏங்கும், உற்றுப்பார்த்தால்
ஊன் உடம்பாய் நான்கு சுவருள்ளடக்கம்.
என் நிலமை அறிய முடியா மயக்கம்,
ஏன் என்று கேட்க என் நாவும் தடக்கும்
ஐயம் ஒன்றே மிச்சம், அகிலம் மீது நான் இப்போ புதிய எச்சம்!
ஒவ்வொரு நாளும் எழுந்து நிற்க முனைப்பேன்,
ஓங்கி ஒலிக்கும் வாழ்வை எழுத நினைத்பேன் – நான்
ஔவையல்ல ஆறுமாதக் குழந்தை(யென்) தளர்விலும்
ஃதே வாழ்வெழுதும் என் ஆளுமையே ஆரம்பம்.

சிந்தனை சிவவினோபன்,

90 மில்லியன் EURO விழுந்திருக்கும் பரிசுத்தொகை, யாருக்குத் தெரியுமா?

90 மில்லியன் யூரோ பணம் பரிசாக விழுந்து இருக்கின்றது. என்றால் நம்புவீர்களா ஆம் ஜெர்மனியில் NRW என்ற பகுதியில் மூன்ஸ்டர் லேண்ட் (Münsterland) என்ற இடத்தில் 90 மில்லியன் Euro பணத்தொகை Lotto பரிசு விழுந்துள்ளது.

மாசி மாதம் 7ஆம் திகதி வெள்ளிக்கிழமை யூரோ ஜாக்பாட் எனப்படும் Lotto, 90 மில்லியன் பரிசுத் தொகையை அறிவித்திருந்தது 5 சரியான விளக்கங்களும் இலக்கங்களும் 2 சரியான இலக்கங்களும் மொத்தமாக 7 சரியான இலக்கங்களும் விழுந்திருந்தால், யாருக்கு விழுகின்றதோ, அவருக்கு 90 மில்லியன் பணப்பரிசு கொடுப்பதாக அறிவிக்கப்பட்டிருந்தது.

அதிர்ஷ்டவசமாக அந்த வெள்ளிக்கிழமை யாரோ ஒருவருக்கு இந்த ஏழு இலக்கங்களும் சரியாக விழுந்துவிட்டது. அவ்வாறு விழுந்த இலக்கங்கள் இவைகள்தான் 7, 16, 22, 36, 44 3, 4
ஆனால் மூன்று நான்கு கிழமைகள் ஆக யாரும் அந்த அட்டையை கொண்டு வந்து அந்தப் பணத்தை பெற்றுக் கொள்ளவில்லை. அதனால் யாருக்கு இந்த 90 மில்லியன் பணத்தொகை கிடைத்திருக்கிறது என்று அனைவரும் ஆர்வமாக காத்து இருந்தார்கள். இப்போது கடந்த வாரம் யாரோ ஒரு நபர் தன்னுடைய அடையாளத்தை காண்பித்து அந்த 90 மில்லியன் Euro பணத் தொகையை பெற்றிருக்கின்றார். ஆனால் தான் யார் என்பதை வெளியில் அறியத் தர வேண்டாம் என்றும் கூறியிருக்கின்றார். அதற்கான காரணம் அத்தனை தொகை பணத் தொகையால் அவருக்கு உயிர் ஆபத்து ஏற்படுவதற்கான வாய்ப்பு இருக்கின்றது. என்பதனால் தன்னை பற்றி வெளியில் அறியத் தர விரும்பவில்லை. என்று அவர் கூறியிருக்கின்றார் இந்தத் தகவலும் அதுவும் ஜெர்மனியில் இருக்கும் தமிழர்களுக்கு இது ஒரு சுவாரசியமான தகவலாக இருக்கும் என்பதனால் அறியத்தருகின்றோம். உங்கள் வீட்டுக்குப் பக்கத்தில் யாராவது வேலையை விட்டுவிட்டு வீட்டில் நிற்கின்றார்கள் என்றால் உடனடியாக தெரிந்துகொள்ளுங்கள் அவருக்குத்தான் அந்த 90 மில்லியன் ஈரோ பணத்தொகை பரிசாகக் கிடைத்திருக்கிறது என்று. 🙂

பலகை மனைவி ( The Wife with More Hands)

காலையில் எழுந்து, காலைக்கடனை முடித்து, முகம் கழுவி சாமி கும்பிட்ட, பின் பேப்பரும் கையுமாக சோபாவில் அமர்ந்திருந்தான் சுந்தரலிங்கம் என்னும் பெயருடைய சுந்தர். வானொலியில் இசையை ரசித்தவண்ணம், பத்திரிகையில் புதினங்களை வாசித்தபடி, கோப்பியை சுவைத்த வண்ணம், சுற்றி நடப்பவற்றையும் அவதானித்துக் கொண்டிருந்தான். சமையல் அறையில் சமையல் வாசம் மூக்கைத் துளைத்தது. அந்த நேரம் பக்கத்து வீட்டுப் பெண் ஓடி வந்தாள். அவனைப் பார்த்து புன்னகைத்த வண்ணம் அவள், அக்கா என அழைத்தபடி சமையலறைக்குள் ஓடினான்.

அக்கா மகளிர் தினத்திற்கு ஒரு கட்டுரை எழுத வேண்டும் பொயின்ஸ் தருவீங்களா? அக்கா இன்றைக்கு வேணும்! வந்தவள் சொல்லி முடிக்கவும், அவன் மனைவி ஜெயா தன் வேலையை கவனித்தபடியே அவளுக்கு உதவினாள். க்ரெட்டா துன்பெர்க் (Greta Thunberg) எனும் சுவீடன் நாட்டைச் சேர்ந்த 15 வயதான பெண் பருவநிலைக்காக போராடிக்கொண்டு உள்ளார். அவர் எப்படி எப்படி போராடினார் என விலாவாரியாக விபரித்த அவன் மனைவி, “வாழ்வாதார உரிமை விருதுக்கு தேர்வு செய்யப்பட்டுள்ளதாக ஸ்வீடன் நாட்டைச் சேர்ந்த மனித உரிமைகள் விருதுக்கான தேர்வு குழு தலைவர் தெரிவித்துள்ளார். அத்துடன் டைம்ஸ் பத்திரிக்கையின் உலகின் நபர் 2019 என்றும் தேர்ந்தெடுக்கப்பட்டுள்ளார் 2019ஏப்ரல், தெற்கில் உள்ள ஐரோப்பிய ஒன்றிய நாடாளுமன்றத்தில் பேசியுள்ளார் இன்னும் சொல்கின்றேன் உலக நாட்டுத் தலைவர்களை கேள்வி கேட்ட, அந்த சிறிய பெண்ணைப் பற்றி இன்னும் இன்னும் விளக்கமாக கூறினாள்.

கேட்டுக்கொண்டிருந்த சுந்தர் பிரமித்துப் போனான் அப்போது அந்தப் பக்கத்து வீட்டுப் பெண் சொன்னதுதான் சுந்தருக்கு எரிச்சலை கூட்டிவிட்டது பொறாமைத் தீ கொழுந்துவிட்டு எரிந்தது. அந்தப் பக்கத்து வீட்டுப் பெண் அக்கா இவ்வளவு விஷயங்களை உங்கள் மூளைக்குள் புதைத்து வைத்துள்ளீர்கள் இன்னும் வேறு விஷயங்களும், அங்கு இருக்கின்றதா? உங்கள் மூளை என்ன கொம்பியூட்டரா?! தேங்க்ஸ்(Thanks) அக்கா என்று சொன்னபடி ஓடிவிட்டாள். “பெரிய படிப்புகாரி :/” சுந்தர் சலித்துக் கொண்டான். அந்த நேரம் பாடசாலை வான் வந்து கோர்ன் அடித்தது.

பிள்ளைகள் இருவரிடமும் சாப்பாட்டு பெட்டி தண்ணீர் போத்தல் எல்லாம் கொடுத்து மிச்சம் வைக்காமல் சாப்பிட வேண்டும்! என்ன? என்று சொல்லிய வண்ணம் பாடசாலை பாக் முதுகில் மாட்டி விட்டு அனுப்பி வைத்தாள். Bye அம்மா! என்றபடி பிள்ளைகள் ஓடிச்சென்று பாடசாலை வேனில் ஏறி போய் விட்டனர். சுந்தருக்கு சுத்தமாக எதுவும் பிடிக்கவில்லை. குத்துக் கல்லாட்டம் இங்கே நான் ஒருத்தன் உட்கார்ந்து இருக்கிறேன். எனக்கு பாய் சொல்ல தோன்றவில்லை !அப்படி பிள்ளைகளை வளர்த்து வைத்திருக்கிறாள். மனதுக்குள் நினைத்த படி, எதுவும் தெரியாத மாதிரி பத்திரிகையில் நோட்டம் விட்டபடியே அமர்ந்திருந்தான் அப்போது, நான்கு ஐந்து பெண்கள் ஜெயா ஜெயா என கூப்பிட்ட படி வந்தனர். ஜெயா வெளியில் வந்தாள், மல்லிகைப்பூ தருவீர்களா? எனக் கேட்டனர், “ஒரு கல்யாண வீட்டிற்கு போறோம் அதுதான் தலைக்கு வைக்க பூமாலை கட்டப் போகிறோம் என்றார்கள்” ஜெயா மல்லிகை பூ பந்தலைக் கை காட்டினாள். கனகாம்பரம் நிறைய பூத்திருக்குது, அதிலும் தருவீர்களா? என அவர்கள் கேட்ட போது மரத்தில் முறிவு, ஏற்படாது ஒவ்வொரு பூவாக கழட்டி எடுங்கள் என்றவண்ணம், மனைவி சமயலறைக்குள் போன பின்பு அந்தப் பெண்களின் சம்பாஷனையை உற்றுக் கேட்டான் சுந்தர்.

ஜெயா கெட்டிக்காரி எப்படி தோட்டத்தை வைத்திருக்கின்றார். நல்ல கலை உணர்ச்சி உள்ள பெண் என கதைத்தபடி பூக்களை கொய்தனர். திரும்பவும் வயிறு எரிந்தது, பொங்கியது. ஏனோ யார் ஜெயாவை புகழ்ந்தாலும் சுந்தர் கொந்தளித்து தான் போய் விடுகின்றான்.

ஜெயா வந்து காலைச் சாப்பாடு சாப்பிட அழைத்தாள். சுந்தர் மறுத்துவிட்டான், எனக்கு உடல்நிலை சரியில்லை என்று ஆபிசுக்கு லீவு போட்டுவிட்டேன். சோறு சமைத்து ரசமும் வைத்து ஏதாவது பொரியலும் செய்து பால்கறியும் வைத்தால் நல்லது என்றான். நின்று நிமிர்ந்து பார்த்தாள் ஜெயா, என்ன! கண்களால் கேட்ட சுந்தருக்கு ஒன்றும் இல்லை என்று சொன்னபடி, அவள் உள்ளே போய் விட்டாள். ஒரு நமட்டுச் சிரிப்புடன் சுந்தரின் எண்ண ஓட்டம் தொடங்கியது முதலே சொல்லியிருந்தால் காலை சாப்பாட்டை செய்யாமல் மதிய உணவை சமைத்து இருக்கலாம் என எண்ணி இருந்திருப்பாள். நல்லா வேலை செய்யட்டும் எல்லோரும் புகழும்போது சந்தோஷப்படுகிறாள், தானே வேலை செய்து களைக்கட்டும் என மனதில் எண்ணிக் கொண்டான்

கண்ணை மூடி எண்ணக் கடலில் மிதந்த அவன் பத்திரிகை விரித்தபடி இருக்க வானொலியில் இசை தவழ்ந்து வந்து தாலாட்ட அவனை அறியாமல் கண்ணயர்ந்து விட்டான். சுவர் மணிக்கூடு 9 மணி அடித்து ஓய்ந்த போது, ஜெயா சுந்தரை தட்டியெழுப்பி நீங்கள் சொன்ன மாதிரி சோறு ரசம் பொரியல் பால்கறி வைத்துள்ளேன். ப்ளீஸ் போட்டு சாப்பிடுங்க எனக்கு நேரம் போய்விட்டது. என்று சொல்லிய வண்ணம் ஓட்டமாக ஓடிச் சென்று ஸ்கூட்டரை இயக்கத் தொடங்கினார்

சுந்தருக்கு ஏனோ மனசாட்சி குத்தியது “நீர் சாப்பிட்டுவிட்டீரா?” என ஒரு கேள்வி கேட்டான் இல்லை நேரம் போய்விட்டது லஞ்ச் கொண்டு போறேன் தானே வாரேன் என சொன்னவண்ணம் புறப்பட்டு விட்டாள். சுந்தருக்கு குற்ற உணர்ச்சியாக இருந்தது காலையில் எழுந்து இயந்திரமாக வேலை செய்து பிள்ளைகளை ஆயத்தப்படுத்தி பாடசாலைக்கு அனுப்பி வைத்ததுடன் உதவி என்று வந்தவர்களுக்கு முகம் சுழிக்காமல் உதவி செய்து கொடுத்ததுடன் தனது தேவையையும் சரியாக நிறைவேற்றி விட்டு வேலைக்குப் போகின்றாள். ஆனால் தன்னை கவனிக்கவில்லை. மனைவியின் உடல்நிலை சரியில்லை என படுத்துவிட்டால், இவ்வளவு வேலைகளையும் யார் செய்வார்கள்?

நானும் கூடமாட உதவி செய்திருந்தால் அவளுக்கு சிறிதாக நேரம் மிச்சம் இருந்திருக்கும் அவள் தனது காலை உணவை சாப்பிட முடிந்திருக்கும் அவளுடைய நல்ல குணத்தைத்தானே பாராட்டினார்கள் அவள் சமையலில் மட்டுமல்ல அவளுடைய கந்தோர் வேலையிலும் திறமையானவள், என பெயர் எடுத்துள்ளாள். உலக விடயங்கள் அரசியல் விடயங்கள் சிறு சிறு மருத்துவ குறிப்புகள் என பல விடயங்களிலும் தேர்ந்தவளாக தான் இருக்கின்றாள் இதற்காக நான் பெருமைப் பட அல்லவா வேண்டும்? ஏன் பொறாமைப்பட வேண்டும்? நான் ஆண் என்ற மமதையா?

நான் அப்படிப்பட்டவன் அல்லவே?! இன்று ஜெயா வீட்டுக்கு வந்ததும் அவளிடம் சமரசமாக கதைத்து அவளுக்கு உதவியாக இருந்து வாழ்க்கையை சந்தோஷமாக கழிக்க வேண்டும் இரண்டு மாடுகள் சேர்ந்து இழுத்தால் வண்டி சுகமாக போகும் ஒரு மாடு மட்டும் இழுத்தால் வண்டி பழுதுதான் ஆகும், மாடும் செயலிழந்துவிடும் என எண்ணினான் சுந்தர்

எழுத்து,
மங்கை அரசி.

முதல் அடி எழுதிய முடிவுரை.

அவள் எப்போதும் சந்தோசமாக தான் இருந்தாள். சிரித்தபடி முகம் இருக்க, துள்ளலுடன் நடை இருக்க, குறும்பான சேட்டைகள் செய்யும் மங்கையாக, நான்கு அண்ணன்களுக்கு தங்கையாக, அப்பாவிற்கும் செல்லப்பிள்ளையாக, அம்மா இல்லாத பிள்ளையாக, அம்மும்மாவின் குழந்தையாக, அவள் வலம் வந்து கொண்டிருந்தாள்.

அவள் நினைத்தது நடக்கும். கேட்டது கிடைக்கும். இப்பொழுது அல்ல இது அவளது 20 ஆவது பிறந்த தினத்திற்கு முந்தைய காலம். அவளது 20 ஆவது பிறந்த தினம் சிறப்பாக கொண்டாடப்பட்டது. சுதந்திரப் பறவை போல் பறந்து திரிந்த அவளுக்கு சில கட்டுப்பாடுகள் விதிக்கப்பட்டன. வண்ணத்துப் பூச்சி போல மகிழ்ந்து பிறந்தவர்களுக்கு தடைகள் போடப்பட்டன. கம்பியால் வேலி போடாவிட்டாலும், கண்டிப்புடன் பல தடைகள் ஏற்பட்டன. அவள் பிடிவாதம் பிடிக்கத்தான் செய்தாள், எதிர்வாதம் செய்து தான் பார்த்தாள், எதுவித பலனும் இல்லை. அப்பாவின் கடுமை அவளுக்கு புதிதாக இருந்தது. அப்பாவிற்கு பக்கபலமாக அண்ணன்மார்களும் இணையாக கதைத்தனர்.

வீட்டில் அவள் அம்மும்மாவின் மடியில் தலை புதைத்து விக்கி விக்கி அழுதாள். அம்மும்மா முதுகில் தடவி தலையை கோதி ஆறுதல் படுத்தினார். ஆனால் அவரும் அப்பாவின் பக்கம் நியாயம் இருப்பதாகத்தான் கூறினார். அந்த காலத்து மனுஷன் தானே! அவர் எதற்காக இந்த கண்டிப்பு? அவள் அப்படி என்ன தப்பு செய்தால்?

அவளுக்கு திருமண பேச்சு வீட்டில் ஏற்பாடு செய்யப்படுகின்றது. பொதுப் பரீட்சைகளில் முதல்தர பெறுபவர்களை பெற்றிருந்தும், மேல்படிப்பு படிக்க அனுமதி இல்லை. ஆனால் அவள் சோர்ந்து போய் விடவில்லை. முடியாது என மறுத்தாள், எதிர்வாதமிட்டாள். அப்பாவின் கண்டிப்பில் கடுமை காட்டப்பட்டது. அண்ணன்மார்களும் பிடிவாதம் பிடிக்காமல் சொல்லுக்கு அடங்கி நட என கண்டித்தனர்.

குழந்தை பிள்ளைக்கு சொல்ற மாதிரி உனக்கு நான் புத்திமதி சொல்றேன் நீ பிடிவாதமாய் மறுக்கிறாய் என்று சொல்லி அடித்துவிட்டார், அப்பாவின் கை விரல்கள் அவள் கன்னத்தில் பதிந்து விட்டது. இன்று தான் முதல் அடி, இனி அடிகள் தொடரும். அவள் அழவில்லை கண்ணீர் வற்றிவிட்டது. இல்லை! அவர் திடமாக முடிவெடுத்துவிட்டால்.

பெண்ணாகப் பிறந்து விட்டால் ஆண்களுக்கு அடங்கித்தான் போகவேண்டுமா?! நியாயமான தனது ஆசையை கூட தொலைத்து விட வேண்டுமா? எதிர்கால முன்னேற்றத்தை விடுத்து இன்னொரு ஆணுக்கு அடிமையாக்குவது சரியா? நிமிர்ந்து தந்தையை பார்த்தால். இன்னொரு அடி என் மேல் விழுந்தாள் நான் போலீஸ் ஸ்டேஷன் வாசலை மிதிக்க வேண்டிவரும்! அன்புக்கு கட்டுப்படுவேன், நியாயத்திற்கு அடி பணிவேன், ஆனால் இன்னொரு அடிமை வாழ்க்கைக்கு நான் தயாரில்லை. நான் தொடர்ந்து படிக்க வேண்டும் என் சொந்த காலில் நிற்க வேண்டும். எதிர்கால வாழ்க்கையை நான் துணிச்சல் உடன் எதிர்கொள்ளும் துணிவும், வாழ்வுக்கான வருமானத்தை தரும் பணமீட்டும் உயர்வும், எனக்கு வரவேண்டும். அதன் பின்பு நீங்கள் சொல்லும் திருமணத்தை நான் செய்யத் தயார். அதை விடுத்து இன்று உங்கள் சொல்லுக்கு இணங்கி நான் திருமணம் செய்தால், இன்று நீங்கள் அடித்த அடி போல் நித்தம் நித்தம் அந்த கணவனிடமும் அடி வாங்கும் பரிதாபநிலை எனக்கு தோன்றும்.

ஆதலால் இந்த முதலடியின் முடிவுரையை நன்றாக யோசித்து, உங்கள் முடிவை மாற்றிக் கொள்ளுங்கள்! சொல்லிய பின் அவ்விடத்தை விட்டு அவள் விலகிச் சென்றாள். இன்று அவள் சட்டம் படித்து சிறந்த ஒரு சட்டத்தரணியாக தினம் தினம் நீதிமன்றப் படி ஏறி வருகின்றாள். அவளது வாழ்க்கையில் அவள் வாங்கிய முதல் அடி.
அப்பா என்றுமே அடித்ததில்லை, அண்ணன்மார்களும் விளையாட்டுக்கு கூட அடித்ததில்லை, பாடசாலையில் ஆசிரியரிடம் கூட அவள் அடி வாங்கியது இல்லை. அப்படி இருக்கையில் அன்று விழுந்து அந்த முதலடி எழுதிய முடிவுரை இன்று சட்டத்தை வரைந்து வருகின்றது. ஒவ்வொருவருடைய வாழ்க்கையிலும் இது போன்ற அடிகள் விழுந்து கொண்டே இருக்கும். முதல் அடியாக இருக்கட்டும் முந்நூறாவது அடியாக இருக்கட்டும், அது தான் உங்களுடைய இறுதியடி, என்று எப்போது நீங்கள் முடிவெடுப்பீர்களே, அப்போது தான் நீங்களும் முடிவெடுக்க முடியும்.

எழுத்து,
மங்கை அரசி.

தஞ்சை பெரிய கோவில் குடமுழுக்கு.

தஞ்சை கோவிலின் தலையில் அஸ்திவாரம்.

தஞ்சாவூர் பிரகதீஸ்வரர் கோவிலில் பிப்ரவரி 5 ஆம் திகதி குடமுழுக்கு நடைபெற இருக்கின்றது. ( திருக்குட நன்னீராட்டுப் பெருவிழா.)

1980 மற்றும் 1997 ஆகிய வருடங்களில் உரிய முறைப்படி சிறப்பாக நடந்ததாக அறியப்படுகின்றது. 23 ஆண்டுகளிற்கு பிறகு இந்த வருடம் பிப்ரவரி 5ஆம் திகதி கும்பாபிஷேகம் நடக்கிறது இதற்காக ஜனவரி 27 முதல் பூர்வாங்க பூஜைகள் நடந்து சிறப்பு பூஜைகள் நடந்து யாகசாலை பிரவேசம் யாகாரம்பம் முதல் காலயாக பூஜை, ஜபம், ஹோமம், பூரணாஹுதி தீபாராதனை போன்றவை நடந்திருக்கின்றன. யாகசாலை பூஜைக்காக நாட்டின் முக்கிய நதிகளான கங்கை, யமுனை, காவிரி உள்ளிட்ட நதிகளில் இருந்து புனித நீர் கொண்டு வரப்பட்டுள்ளது.

கும்பாபிஷேக விழாவிற்காக தஞ்சை பெரிய கோவிலின் பின்புறமாக 11 ஆயிரத்து 900 சதுர அடி பரப்பளவில் யாகசாலை அமைக்கப்பட்டுள்ளது. யாகசாலை பந்தலில் 8 இடங்களில் தீயணைப்பு வீரர்கள் தீயை அணைக்க கூடிய உபகரணங்களுடன் தயார் நிலையில் வைக்கப்பட்டுள்ளதுடன், தீயணைப்பு வாகனங்களும் தயார்நிலையில் நிறுத்தப்பட்டுள்ளன. சுழல் மேசையுடன் கூடிய ஏணி பொருத்தப்பட்ட அதிநவீன வாகனம் பின்லாந்து நாட்டில் இருந்து 11 கோடி ரூபாய்க்கு வாங்கப்பட்டு, மூலவர் விமான கோபுரத்தின் பின்புறம் நிறுத்தப்பட்டுள்ளது. நீரியல் அழுத்தத்தில் செயற்படக்கூடிய இந்த வாகனம் தீயணைப்பு மற்றும் மீட்பு பணியை செய்யக்கூடியது. மூலவர் விமானக் கோபுரம் 216 அடி உயரமுடையது. கோபுரத்திற்கு சிவாச்சாரியார்கள், ஓதுவார்களுடன் தீயணைப்பு வீரர்களும் செல்லவுள்ளனர். தேவை ஏற்படின் சுழல் மேசையுடன் கூடிய ஏணியின் உதவியுடன் கீழே இறக்க முடியும். தண்ணீரை பீச்சி அடிக்கும் வசதியும் இந்த வாகனத்தில் உண்டு. நஞ்சையும் புஞ்சையும் கொஞ்சி விளையாடும் தஞ்சை நகரில், வானத்தைத் தொடும் அளவு உயரமாக எம்மை அண்ணாந்து பார்க்க வைப்பது தஞ்சை பெரியகோவில். உலகப் பாரம்பரிய சின்னங்களில் ஒன்றாக இதை யுனெஸ்கோ அங்கீகரித்துள்ளது. இக்கோவிலை சிறப்பாக பாதுகாத்து பராமரித்து வருவது மத்திய தொல்லியல்த் துறை.

இந்தக் கோவிலிற்கு தஞ்சை பெரிய கோவில், தஞ்சை பெருவுடையார் கோவில், பிரகதீஸ்வரர் கோவில், ராஜராஜேஸ்வரம் என பல பெயர்கள் உள்ளது. இதைக் கட்டிய அரசனுக்கும் ராஜராஜசோழன், அருண்மொழிவர்மன், மும்முடிச்சோழன், சிவபாத சேகரன், திருமுறைகண்ட சோழன் என பல பெயர்கள் உண்டு. தஞ்சை பெரிய கோவிலின் கோபுர உச்சியை உற்றுப்பார்த்தால், பிரமாந்திரக்கல் எனப்படும் ஸ்தூபிக்கல் தெரியும். இதன் எடை 80 டன். இந்தக் கல்லை தாங்கும் சதுரவடிவக் கல்லும் 80 டன் கொண்டது. அந்தச் சதுர கல்லின் மேல் பக்கத்திற்கு இரண்டாக எட்டு நந்திகளும் ஒவ்வொன்றும் 10 டன் எடை கொண்டதாக, 80 டன் எடையுடன் உள்ளது. இந்த மூன்று 80டன்களும் இந்த பெரியகோவிலின் அஸ்திவாரம். அஸ்திவாரம் அடியில் தான் இருக்கும். ஆனால் இந்த விந்தை இங்கு மட்டுமே உள்ளது. எப்படியெனில் நாம் செங்கற்களை வைத்து வீடு கட்டும்போது கட்டடத்தின் உயரம் 12 அடி என்றால், நான்கு அடிக்காவது அஸ்திவாரம் போட வேண்டும் பெரிய கோவிலின் உயரம் 216 அடி ஆதலால் 50 அடி ஆழம் 50 அடி அகலமாக அஸ்திவாரம் அமைக்க சாத்தியமில்லை. ஏனெனில் 50 அடி ஆழத்தில் தண்ணீர் வந்துவிடும் ஆனால் பெரிய கோவிலின் அஸ்திவாரம் வெறும் 5 அடி மட்டும் தான்.

இங்கு சோழர்களின் அறிவியல் மேம்பாடு தெளிவாக தெரிகின்றது. இலகு இணைப்பு மூலம் கற்கள் இணைக்கப்பட்டுள்ளது. ஒவ்வொரு கல் இணைப்பிற்கும் இடையில் நூலளவு இடைவெளி விட்டு அடுக்கினர். கிராமங்களில் உபயோகிக்கப்படும் கயிற்றுக் கட்டிலில் கயிறுகளின் பிணைப்பு லூசாக தாழ்ந்திருக்கும் அதன் மேல் மனிதர்கள் ஏறி அமரும்போது அனைத்தும் உள்வாங்கி இறுகிவிடும் கயிறுகளின் பிணைப்பு பலமாகிவிடும். இந்த அடிப்படையில் லூசாக கற்களை அடுக்கி சென்று உச்சியில் பிரம்மாண்டமான எடையை அழுத்தச் செய்வதன் மூலம் மொத்த கற்களும் இறுகி மிகப் பலமான இணைப்பாக உருவாகின்றது. கோவிலின் உச்சியில் அஸ்திவாரம் இடம்பெற்ற அதிசயம் இதுதான். எத்தனை பூகம்பம் வந்தாலும் எந்தக் கல்லும் அசையாது. எத்தனை ஆயிரம் ஆண்டுகள் ஆனாலும் நிலையாக நிற்கும். சூரிய சந்திரர் இருக்கும் வரை இக்கோவிலும் இருக்கும் என்று அன்று சோழன், ராஜராஜ மன்னனின் நம்பிக்கை பொய்க்காது என்பது இன்றுவரை நிரூபணமாகி உள்ளது. ஆயிரம் ஆண்டுகட்கு முன் வாழ்ந்த தமிழனின் வீரத்தையும், பக்தியையும், கலை நேர்த்தியையும், அறிவியலையும் பிரதிபலிக்கும் வரலாற்றுக் களஞ்சியமான தஞ்சை பெரிய கோவில் பல்லாண்டு நீடித்து நின்று நம் சந்ததியினரும் அதன் பெருமையுணர நாம் போற்றிப் பாதுகாக்க வேண்டும்.

எழுத்து,
மங்கை அரசி.

நீயும் மாஸ்டராகலாம் வா!

இளையதளபதி விஜய் அவர்களுடைய 64வது படத்தின் பெயர் நேற்றையதினம் அறிவிக்கப்பட்டிருக்கிறது. மாஸ்டர் என்று பெயர் வைக்கப்பட்டிருக்கின்றது இந்த கட்டுரையின் மூலமாக மாஸ்டர் என்றால் யார்? நீங்களும் மாஸ்டராக மாற முடியுமா? இளைய தளபதி விஜய் அவர்கள் உண்மையிலேயே ஒரு மாஸ்டரா! என்ற  3 கண்ணோட்டத்தில் இந்தக் கட்டுரை அமைய இருக்கின்றது வாருங்கள் விரிவாகப் பார்ப்போம்.

மாஸ்டர் என்றால் ஒரு துறையில் அறிவும் திறமையும் கொண்டவர் என்று அர்த்தம். தமிழில் கூற வேண்டுமென்றால் வாத்தியார் என்று கூறலாம். நீங்கள் இருக்கும் துறையில் அல்லது, உங்கள் இலட்சியமாக இருக்கின்ற துறையில் நீங்கள் மாஸ்டர் ஆக வேண்டுமென்றால், என்ன செய்ய வேண்டும்?

1)முதலில் அந்தத் துறையை முழுமையாக கற்றுக்கொள்ள வேண்டும்.
2)இரண்டாவதாக அந்தத்துறையில் சாதித்த. சாதித்துக் கொண்டிருக்கின்ற ஒருவரை குருவாக உள்வாங்கிக்கொள்ள வேண்டும்.
3)மூன்றாவதாக அவரை குருவாக ஏற்றுக் கொண்டதன் பின்பாக அவருடைய கொள்கைகளை வழிகாட்டல்களை சரியோ? தவறோ? என்று ஆராயாமல் ஏற்றுக்கொள்ள வேண்டும்.
நான்காவதாக நீங்கள் தேர்ந்தெடுத்த துறையில் உங்களுக்கென்று கொள்கையை உருவாக்கிக் கொள்ள வேண்டும்.
ஐந்தாவதாக உங்கள் கொள்கைகள் சரியாக இருக்கின்றதா? என்று பிறர் கூறுகின்ற கருத்தை வைத்து நீங்கள் சரி பார்த்துக்கொள்ள வேண்டும்.
ஆறாவதாக சரி பார்த்து அதன் பின்பாக அந்த கொள்கையிலிருந்து எந்த காலகட்டத்திலும் மாறுபடாமல் இருக்கவேண்டும்.
ஏழாவதாக இப்போது நீங்கள் குருவாக ஏற்றுக்கொண்ட அவருடைய கொள்கையும் உங்களுடைய கொள்கையும் ஒத்துப்போகின்றன அல்லது வேறுபடுகின்றது என்று ஒப்பிட்டுப் பார்க்க வேண்டும்.
எட்டாவதாக இரண்டு கொள்கைகளையும் வைத்துக்கொண்டு அதிலிருந்து திருத்தமான ஒரு முழுமையான இறுதிக் கொள்கையை உருவாக்க வேண்டும்.
ஒன்பதாவதாக அந்த இறுதிக் கொள்கையிலிருந்து எவர் கூறினாலும் எந்த கால கட்டத்திலும் எந்த காரணத்திற்காகவும் விலகாமல் இருப்பேன் என்று உறுதி எடுத்துக்கொள்ள வேண்டும்.
பத்தாவதாக உங்களுடைய கொள்கைகளை மற்றவர்களுக்கும் சொல்லிக் கொடுக்க வேண்டும்.

இப்படி செய்தீர்கள் என்றால் நீங்களும் மாஸ்டர் ஆகலாம். அதாவது வாத்தியார் ஆகலாம். இப்போது இளைய தளபதி விஜய் அவர்கள் ஒரு வாத்தியாரா? என்று பார்ப்போம்.

சினிமாத்துறைக்கு வரும்பொழுது எதுவும் தெரியாமல் வந்தார். அவருடைய தந்தையைக் குருவாக ஏற்றுக்கொண்டு,
தந்தை சொல்லிய அனைத்தையும் சரியா? தவறா? என்று பிரித்து பார்க்காமல் அப்படியே ஏற்றுக்கொண்டார்.
அதன்பின் தனக்கென்று ஒரு கொள்கையை உருவாக்கினார்.
இரண்டு கொள்கைகளையும் வைத்து மூன்றாவதாக அரசியல் வேண்டுமா? வேண்டாமா? என்று இப்போது சிந்தித்து மூன்றாவது கொள்கையை உருவாக்குகின்ற நிலையில் இருக்கின்றார்.
ஆகவே மாஸ்டர் ஆகுவதற்கு தகுதி உடையவராக இளையதளபதி விஜய் அவர்கள் இருக்கின்றார் அதற்கான பாதையில் பயணித்துக் கொண்டிருக்கின்றார்.

Vijay New Film Title is Master
and Master Explanation

நீங்களும் மாஸ்டர் ஆக வேண்டுமென்றால் இந்த படிக்கட்டின் படி ஒவ்வொன்றாக செய்து பயணித்திருந்தால் நீங்களும் மாஸ்டர் ஆக முடியும் நன்றி வணக்கம் .

எழுத்து,
சிந்தனை சிவவினோபன்

2020 இது ஒரு அதிசய வருடம்.

2020இல் புத்தாண்டு கொண்டாடும் அனைவருக்கும் அன்பான இனிய புத்தாண்டு நல்வாழ்த்துக்கள். இந்த வருடம் 2020 ஒரு அதிசய வருடம் என்பது உங்களில் எத்தனை பேருக்கு தெரியும் ஆம் இந்த வருடம் 1010 வருடங்களுக்கு ஒரு முறை வருகின்ற ஒரு அதிசய வருடம். இதே போன்று ஒரு வருடம் முதலாவதாக 1010இல் வந்தது. இப்பொழுது 2020ல் வந்திருக்கின்றது. அடுத்து 3030 இல் தான் வரும்இதில் என்ன சிறப்பு இருக்கிறது என்றால்

சிறப்பு மட்டுமல்ல ஒரு ஆபத்தும் தங்கியிருக்கின்றது என்ன ஆபத்து என்றால் நாம் ஒரு திகதியை எழுதும் பொழுது சுருக்கமாக எழுத வேண்டும் என்பதற்காக முதலில் மாத நாளையும் அடுத்ததாக இந்த மாதம் என்பதையும் மூன்றாவதாக வருடத்தைக் எழுதும்பொழுது வருடத்தில் முழுமையாக எழுதாமல் இறுதியாக இருக்கின்ற இரண்டு இலக்கத்தை மட்டும் எழுதுவோம் உதாரணத்திற்கு நான்காம் திகதி இரண்டாம் மாதம் 2019 என்பதை 04.02.19 என்று சுருக்கமாக எழுதுவது வழக்கம் ஆனால் அதே போன்று இந்த வருடத்துக்கு 2020 க்கு எழுத முடியாது

காரணம் என்னவென்றால் நீங்கள் சுருக்கமாக எழுதும்பொழுது 20 என்று எழுதுகிறீர்கள் அப்படி 20 என்று எழுதினால், உதாரணமாக 01.01.20 என்று எழுதினால் , யாராவது அந்த 20 என்பதற்குப் பின்னால் 19 அல்லது 14 அல்லது 15 என்ற இலக்கத்தை இணைத்து விட்டால் அது வேறு ஒரு வருடமாக மாறுவதற்கான வாய்ப்புகள் இருக்கின்றது. ( 01.01.2019 என்று மாறிவிடும்.)

happy new year 2020 and important alert to everyone.

ஆகவே நீங்கள் எழுதும் பொழுது கவனமாக இருங்கள் இந்த வருடத்தை நீங்கள் எழுதும் பொழுது சுருக்கமாக எழுதாமல் முழுமையாக 2020 என்று எழுதுவதே பாதுகாப்பான விடயமாக இருக்கும் என்பதை உங்களோடு பகிர்ந்து கொள்ள வேண்டும் என்று ஆசைப்பட்டேன் இந்த தகவல் உங்களுக்கு பிடித்திருக்கும் என்று நம்புகிறேன் இதை பலருக்கும் பகிர்ந்து அனைவருக்கும் ஓர் விழிப்புணர்வை ஏற்படுத்தவும் என்று கூறி உங்களிடமிருந்து விடை பெற்றுக் கொள்கிறேன் நன்றி வணக்கம்

எழுத்து,
சிந்தனை சிவவினோபன்

அறம் வந்தும் கரம் கொடுக்கா சுர்ஜித்தின் துயர்.

அறம் என்று அன்று படம் ஒன்று வந்தது. இன்று அதே நிலையில் நியம் இங்கு நிகழ்ந்தது. இரண்டு வயது குழந்தைக்கு இயற்கை செய்த கொடுமையா? இல்லை இந்த அரசாங்கம் காட்டிய அலட்சியமா?

இரண்டே வயதாகும் சுர்ஜித் என்ற குழந்தை, இந்தியாவில் திருச்சியில் நடுக்காட்டுப்பட்டி என்ற கிராமத்தில் 25.10.2019 வெள்ளிக்கிழமை ஓடிவிளையாடும் போது ஏற்பட்ட ஓர் உச்சக்கட்ட அபாயம் தான் இது. தந்தை செய்த தவறில் மாட்டிக்கொண்ட தனையன் என்பது சுர்ஜித் விடையத்தில் உண்மையாகின்றது.

மூன்று நாட்களாக(27.10.2019 இன்று மதியம் 2 மணி வரை) அந்தக் குழந்தை 25 அடியில் இருந்து சிறிது சிறிதாக நழுவி உள்ளே இறங்கி கொண்டு உள்ளது. இப்போது வரை அனைத்து வழிகளையும் முயற்சித்துப் போராடிக் கொண்டு இருக்கும் தீயணைப்புப் படை, மற்றும் ஒட்டு மொத்த இந்தியாவும் நம்பிக்கை மற்றும் பிராத்தனையைக் கைவிடவில்லை. நீங்களும் உங்கள் ஒரு பிராத்தனையை அந்தக் குழந்தைக்கு கொடுங்கள். இனிமேல் எந்த ஒரு சுர்ஜித்திற்கும் இந்த ஒரு நிலை ஏற்படக் கூடாது. அதற்காய்ப் பிராதியுங்கள். ஆனால் நடந்தது என்ன?

மழை பொய்த்து போன மண்ணில், விவசாயித் தந்தை போட்ட துளைதான் அந்த ஆழ்துளைக் கிணறு. துளை போட்டும் நீரில்லாக் காரணத்தால் அதை மூடுவதற்கு இன்னும் ஆயிரக் கணக்கில் செலவழிக்க வேண்டுமா? என்று எண்ணிய தந்தை கல்லையும் மண்ணையும் போட்டு கவனயீனமாக மூடியது முதல்க் குற்றம். கிணறு சரியாக மூடப்பட்டதா? என்று கவனிக்காத அரசாங்க அதிகாரிகள் இரண்டாம் குற்றவாளிகள். விழுந்த குழந்தையைக் காப்பாற்ற உடனடி நடவடிக்கை எடுக்காமல் இருந்த மத்திய அரசாங்கம் மூன்றாம் குற்றவாளி. ஆனால் இப்போது அந்தத் துளையில் இருந்து 3 மீட்டரை அருகில் இன்னுமோர் துளை போடப்படுகின்றது அதன் வழியாக உள்ளே சென்று 4 இஞ்சித் துளையில் சிக்கி வெளியில் வரமுடியாமல் அலறும் குழந்தைக்கு அருகாமையில் துளையிட்டுச் சென்று காப்பாற்ற முயலும் குழுவிற்கு எங்கள் பிரார்த்தனையையும் கொடுத்து காப்பாற்ற வழிபடுவோம். இந்தத் தகவலை உடனடியாக அனைவரோடும் பகிர்ந்து நம்பிக்கையை அதிகரிப்போம். நாளை இன்னோர் குழந்தை இன்னலில் அவதிப்படக் கூடாது என்றால், பேசுங்கள் தயவு செய்து இந்தத் தகவலைப் பகிர்ந்து, பலரோடு பேசுங்கள். பேசி நன்மையை எதிர்பார்ப்போம்.

தகவல்,
ஈழன்.