Month: March 2021

தனஞ்சயன் மனதில்

தனஞ்சயன் மனதில் எண்ண ஓட்டங்கள் ஓடின. பாதை ஓரத்தில் அனாதரவாக கிடந்தவனின் எண்ணங்கள் பின் நோக்கி நகருகின்றன. கால்கள் முறிவடைந்த நிலையில், உடம்பில் ஏற்பட்ட காயங்களில் இருந்து வடிந்து உறைந்திருந்த இரத்தத்தின் மேல் எறும்புக் கூட்டம் மொய்த்தபடி இருந்தது. அப்படியே எறும்புகள் அவன் உடம்பிலும், காயத்திலுமிருந்து கடித்துக்கொண்டிருந்தன. வலி தாங்க முடியாமல் குரல் விட்டு அளவே முடியாத பலவீனத்துடன் அனுங்கிக்கொண்டிருந்தான். இந்த நேரத்தில்தான் பழைய நினைவுகள் பாய்ந்து வந்து அவன் மூளையை குடைந்தது.

தனஞ்சயன் அழகான வாலிபன் இன்னும் திருமணம் ஆகவில்லை ஆனால் அவனது நண்பன் மனோகரனிற்கு திருமணம் ஆகிவிட்டது. காதல் திருமணம்தான். இரு பக்கத்திற்கும் பெற்றோரின் அனுமதியற்ற நிலையில் தனிமையில் மோதிரம் மாற்றி நண்பர்களின் உதவியுடன் பதிவுத் திருமணமும் நடத்தி கொண்டான். தனஞ்சயனும் முழு உதவியுடன் இருந்தான். மனோகரனின் மனைவி கௌரி, அண்ணா அண்ணா என்று தனஞ்சயன்மேல் அன்பு மழை பொழிந்தாள் தனஞ்சயனும் அவளை உடன்பிறவா சகோதரியாக ஏற்றுக் கொண்டான்

ஒரு வருடம் கடந்த நிலையில் கௌரி ஒரு அழகான ஆண் மகனைப் பெற்றெடுத்தாள். சந்தோசமாக தான் காலங்கள் ஓடியது. ஆனால் அது நிலைக்கவில்லை ஒரு விபத்தில் மனோகரன் இறந்துவிட்டான். துடித்துப்போனாள் கௌரி தானும் இறந்து விடலாம் என கௌரி நினைத்தாலும், குழந்தை பிரபுவின் எதிர்காலத்தை நினைத்து வாளாவிருந்தால்
தனஞ்சயனின் உதவி அவளுக்கு மலைபோல உதவியாக இருந்தது. அயலவர்களின் சந்தேகப் பார்வையும் பேச்சுக்களையும் அவதானித்த கெளரி, தனஞ்சயனிடம் வீட்டிற்கு அடிக்கடி வர வேண்டாம் எனவும் தானே தனிமையிலேயே தன் மகனை வளர்த்து கொள்கின்றேன் எனவும் சொல்லிவிட்டாள்


தனஞ்சயனும் அடிக்கடி கௌரி வீட்டுக்கு போகாவிட்டாலும் மாதம் ஒருமுறை கௌரி வீட்டுக்கு வந்து தேவையான உதவிகளை செய்து வந்தான். தனஞ்சயன் மனதில் சஞ்சலம் ஏற்பட ஆரம்பித்தது. கௌரி இளம்பெண்ணாக தானே இருக்கின்றாள். மனோகரன் தான் இறந்து விட்டானே. நானும் திருமணம் ஆகாதவன், என மனதில் ஏதோ கணக்குப் போட்டான். இதமாகத் தான் இருந்தது. மனது கிளுகிளுப்பாக இருந்தது. இந்த எண்ணங்கள் ஓடிய போது அவனை அறியாமலே கால்கள் கௌரி வீட்டை நோக்கி நடந்தன. மாலை நேரம் சூரியன் மேற்கே மறைய தொடங்கி விட்டான். தனஞ்சயன் கௌரி வீட்டு அழைப்பு மணியை அழுத்திய போது கதவு திறந்துகொண்டது. எதிரிலே கௌரி ஈரத்தலையை துவட்டியபடி நெற்றியில் விபூதி சந்தனம் பூசிய படி அழகுச் சிலையென நின்றாள். “ஓ இன்று பிரதோஷம், விரதத்திற்கான பூசையை முடித்து விட்டு வருகின்றாள் போலும்”. தனஞ்சயன் மனதிலே எண்ணிக்கொண்டான். தன் கட்டுப்பாட்டை மீறிய அவன் கெளரியை அப்படியே இறுக்கிக் கட்டிக்கொண்டான்.

கௌரி இதை கொஞ்சமும் எதிர்பார்க்கவில்லை பெரிய போராட்டத்தின் பின் தனஞ்சனிடமிருந்து விடுபட்ட அவள், மிகுந்த வெறுப்புடன் அவன் முகத்தில் காறி உமிழ்ந்தாள். “வெளியே போ நாயே! நம்பிக்கை துரோகி, இனிமேல் என் கண்ணில் முழிக்காதே! இருந்துபார் உன்னுடைய கடைசி காலத்தில் நீ அனாதைப் பிணமாக தான் சாவாய். உனக்கு எந்த மனித உதவியும் கிடையாது. உன்னை சுற்றி எறும்புக்கு கூட்டம், மொய்த்த படி, உன்னுயிரை படிப் படியாகச் சாகடிக்கட்டும். நான் சொன்னது நடக்கும்” என்று சொன்னபடி அவனை வெளியே தள்ளி கதவைப் பூட்டிக் கொண்டாள்.

நான் ஏன் அனாதைப் பிணமாக சாகப்போகிறேன்? எனக்கென்ன உறவுகளா இல்லை? என்று எண்ணிய வண்ணம், தன்னூருக்குப் புறப்பட்டான். புகையிரதத்தில் ஏறியமர்ந்தவன், அமரமுடியா ஆத்திரத்தில் வாசல்கம்பியைப் பிடித்தவண்ணம் கோபமாக எழுந்து நின்றான். “அம்மாவிடம் சொல்லி பெண் பார்க்கச் சொல்லி உடனடியாக திருமணம் செய்து நான் குடும்பத்துடன் சந்தோஷமாக வாழ்ந்து காட்ட வேண்டும். அவளுக்கு அப்பத்தான் புத்தி வரும், நல்ல வாழ்க்கையை தவறவிட்டேன் என கவலை வரும்”. என எண்ணியபடி நின்று கொண்டே ஒரு காலைத் தூக்கிய போது, மறு கால் சறுக்கிவிட புட் போர்டில் இருந்து கீழே விழுந்து விட்டான். அவன் விழுந்ததை புகைவண்டியில் இருந்து யாரும் பார்க்கவில்லை. இரவு பத்து மணி போல விழுந்தவன் காலை 5 மணிக்கு ஆலய மணி ஓசை அடித்துக்கொண்டிருந்தது. 7 மணி நேரமாக அவன் உடலை எறும்புகள் தின்று கொண்டிருந்தன பழைய எண்ணங்கள் அவனை புரட்டிப் போட பத்தினி சாபம் பலித்து விட்டது என்று வாய் முணுமுணுக்க மெதுவாக கண்ணை மூடினால் இதயத்துடிப்பு நின்றுவிட்டது. “விளிந்தாரின் வேறல்லர் மன்ற தெளிந்தார்இல், தீமை புரிந்தொழுகு வார்” என்ற திருவள்ளுவரின் வாக்கிற்கு இணங்க.

“விளிந்தாரின் வேறல்லர் மன்ற தெளிந்தார்இல்,
தீமை புரிந்தொழுகு வார்”
பொருள் :-
நம்பி பழகியவர் வீட்டில், அவரது மனைவியிடம் தகாத செயலில் ஈ.டுபட முனைகிறவன், உயிர் இருந்தும் பிணத்திற்கு ஒப்பானவனேயாவான்.

எழுத்து,
மங்கை அரசி.