Month: March 2020

தளர்விலும் வாழ்வெழுது ஆளுமைகள்

அளவில்லா அன்புடன் அனைவரும் சுற்றி நின்று பார்க்க,
ஆசைகள் இருந்தும் அசைந்து படுக்க முடியா உடல்.
இளகிய முள்ளந்தண்டு எடுத்து வைக்க இயலாக் கால்கள்,
ஈ மொய்த்தால் கூட எதுவும் செய்யாக் கை.
உள்ளம் உலகை சுற்ற ஏங்கும், உற்றுப்பார்த்தால்
ஊன் உடம்பாய் நான்கு சுவருள்ளடக்கம்.
என் நிலமை அறிய முடியா மயக்கம்,
ஏன் என்று கேட்க என் நாவும் தடக்கும்
ஐயம் ஒன்றே மிச்சம், அகிலம் மீது நான் இப்போ புதிய எச்சம்!
ஒவ்வொரு நாளும் எழுந்து நிற்க முனைப்பேன்,
ஓங்கி ஒலிக்கும் வாழ்வை எழுத நினைத்பேன் – நான்
ஔவையல்ல ஆறுமாதக் குழந்தை(யென்) தளர்விலும்
ஃதே வாழ்வெழுதும் என் ஆளுமையே ஆரம்பம்.

சிந்தனை சிவவினோபன்,

90 மில்லியன் EURO விழுந்திருக்கும் பரிசுத்தொகை, யாருக்குத் தெரியுமா?

90 மில்லியன் யூரோ பணம் பரிசாக விழுந்து இருக்கின்றது. என்றால் நம்புவீர்களா ஆம் ஜெர்மனியில் NRW என்ற பகுதியில் மூன்ஸ்டர் லேண்ட் (Münsterland) என்ற இடத்தில் 90 மில்லியன் Euro பணத்தொகை Lotto பரிசு விழுந்துள்ளது.

மாசி மாதம் 7ஆம் திகதி வெள்ளிக்கிழமை யூரோ ஜாக்பாட் எனப்படும் Lotto, 90 மில்லியன் பரிசுத் தொகையை அறிவித்திருந்தது 5 சரியான விளக்கங்களும் இலக்கங்களும் 2 சரியான இலக்கங்களும் மொத்தமாக 7 சரியான இலக்கங்களும் விழுந்திருந்தால், யாருக்கு விழுகின்றதோ, அவருக்கு 90 மில்லியன் பணப்பரிசு கொடுப்பதாக அறிவிக்கப்பட்டிருந்தது.

அதிர்ஷ்டவசமாக அந்த வெள்ளிக்கிழமை யாரோ ஒருவருக்கு இந்த ஏழு இலக்கங்களும் சரியாக விழுந்துவிட்டது. அவ்வாறு விழுந்த இலக்கங்கள் இவைகள்தான் 7, 16, 22, 36, 44 3, 4
ஆனால் மூன்று நான்கு கிழமைகள் ஆக யாரும் அந்த அட்டையை கொண்டு வந்து அந்தப் பணத்தை பெற்றுக் கொள்ளவில்லை. அதனால் யாருக்கு இந்த 90 மில்லியன் பணத்தொகை கிடைத்திருக்கிறது என்று அனைவரும் ஆர்வமாக காத்து இருந்தார்கள். இப்போது கடந்த வாரம் யாரோ ஒரு நபர் தன்னுடைய அடையாளத்தை காண்பித்து அந்த 90 மில்லியன் Euro பணத் தொகையை பெற்றிருக்கின்றார். ஆனால் தான் யார் என்பதை வெளியில் அறியத் தர வேண்டாம் என்றும் கூறியிருக்கின்றார். அதற்கான காரணம் அத்தனை தொகை பணத் தொகையால் அவருக்கு உயிர் ஆபத்து ஏற்படுவதற்கான வாய்ப்பு இருக்கின்றது. என்பதனால் தன்னை பற்றி வெளியில் அறியத் தர விரும்பவில்லை. என்று அவர் கூறியிருக்கின்றார் இந்தத் தகவலும் அதுவும் ஜெர்மனியில் இருக்கும் தமிழர்களுக்கு இது ஒரு சுவாரசியமான தகவலாக இருக்கும் என்பதனால் அறியத்தருகின்றோம். உங்கள் வீட்டுக்குப் பக்கத்தில் யாராவது வேலையை விட்டுவிட்டு வீட்டில் நிற்கின்றார்கள் என்றால் உடனடியாக தெரிந்துகொள்ளுங்கள் அவருக்குத்தான் அந்த 90 மில்லியன் ஈரோ பணத்தொகை பரிசாகக் கிடைத்திருக்கிறது என்று. 🙂

பலகை மனைவி ( The Wife with More Hands)

காலையில் எழுந்து, காலைக்கடனை முடித்து, முகம் கழுவி சாமி கும்பிட்ட, பின் பேப்பரும் கையுமாக சோபாவில் அமர்ந்திருந்தான் சுந்தரலிங்கம் என்னும் பெயருடைய சுந்தர். வானொலியில் இசையை ரசித்தவண்ணம், பத்திரிகையில் புதினங்களை வாசித்தபடி, கோப்பியை சுவைத்த வண்ணம், சுற்றி நடப்பவற்றையும் அவதானித்துக் கொண்டிருந்தான். சமையல் அறையில் சமையல் வாசம் மூக்கைத் துளைத்தது. அந்த நேரம் பக்கத்து வீட்டுப் பெண் ஓடி வந்தாள். அவனைப் பார்த்து புன்னகைத்த வண்ணம் அவள், அக்கா என அழைத்தபடி சமையலறைக்குள் ஓடினான்.

அக்கா மகளிர் தினத்திற்கு ஒரு கட்டுரை எழுத வேண்டும் பொயின்ஸ் தருவீங்களா? அக்கா இன்றைக்கு வேணும்! வந்தவள் சொல்லி முடிக்கவும், அவன் மனைவி ஜெயா தன் வேலையை கவனித்தபடியே அவளுக்கு உதவினாள். க்ரெட்டா துன்பெர்க் (Greta Thunberg) எனும் சுவீடன் நாட்டைச் சேர்ந்த 15 வயதான பெண் பருவநிலைக்காக போராடிக்கொண்டு உள்ளார். அவர் எப்படி எப்படி போராடினார் என விலாவாரியாக விபரித்த அவன் மனைவி, “வாழ்வாதார உரிமை விருதுக்கு தேர்வு செய்யப்பட்டுள்ளதாக ஸ்வீடன் நாட்டைச் சேர்ந்த மனித உரிமைகள் விருதுக்கான தேர்வு குழு தலைவர் தெரிவித்துள்ளார். அத்துடன் டைம்ஸ் பத்திரிக்கையின் உலகின் நபர் 2019 என்றும் தேர்ந்தெடுக்கப்பட்டுள்ளார் 2019ஏப்ரல், தெற்கில் உள்ள ஐரோப்பிய ஒன்றிய நாடாளுமன்றத்தில் பேசியுள்ளார் இன்னும் சொல்கின்றேன் உலக நாட்டுத் தலைவர்களை கேள்வி கேட்ட, அந்த சிறிய பெண்ணைப் பற்றி இன்னும் இன்னும் விளக்கமாக கூறினாள்.

கேட்டுக்கொண்டிருந்த சுந்தர் பிரமித்துப் போனான் அப்போது அந்தப் பக்கத்து வீட்டுப் பெண் சொன்னதுதான் சுந்தருக்கு எரிச்சலை கூட்டிவிட்டது பொறாமைத் தீ கொழுந்துவிட்டு எரிந்தது. அந்தப் பக்கத்து வீட்டுப் பெண் அக்கா இவ்வளவு விஷயங்களை உங்கள் மூளைக்குள் புதைத்து வைத்துள்ளீர்கள் இன்னும் வேறு விஷயங்களும், அங்கு இருக்கின்றதா? உங்கள் மூளை என்ன கொம்பியூட்டரா?! தேங்க்ஸ்(Thanks) அக்கா என்று சொன்னபடி ஓடிவிட்டாள். “பெரிய படிப்புகாரி :/” சுந்தர் சலித்துக் கொண்டான். அந்த நேரம் பாடசாலை வான் வந்து கோர்ன் அடித்தது.

பிள்ளைகள் இருவரிடமும் சாப்பாட்டு பெட்டி தண்ணீர் போத்தல் எல்லாம் கொடுத்து மிச்சம் வைக்காமல் சாப்பிட வேண்டும்! என்ன? என்று சொல்லிய வண்ணம் பாடசாலை பாக் முதுகில் மாட்டி விட்டு அனுப்பி வைத்தாள். Bye அம்மா! என்றபடி பிள்ளைகள் ஓடிச்சென்று பாடசாலை வேனில் ஏறி போய் விட்டனர். சுந்தருக்கு சுத்தமாக எதுவும் பிடிக்கவில்லை. குத்துக் கல்லாட்டம் இங்கே நான் ஒருத்தன் உட்கார்ந்து இருக்கிறேன். எனக்கு பாய் சொல்ல தோன்றவில்லை !அப்படி பிள்ளைகளை வளர்த்து வைத்திருக்கிறாள். மனதுக்குள் நினைத்த படி, எதுவும் தெரியாத மாதிரி பத்திரிகையில் நோட்டம் விட்டபடியே அமர்ந்திருந்தான் அப்போது, நான்கு ஐந்து பெண்கள் ஜெயா ஜெயா என கூப்பிட்ட படி வந்தனர். ஜெயா வெளியில் வந்தாள், மல்லிகைப்பூ தருவீர்களா? எனக் கேட்டனர், “ஒரு கல்யாண வீட்டிற்கு போறோம் அதுதான் தலைக்கு வைக்க பூமாலை கட்டப் போகிறோம் என்றார்கள்” ஜெயா மல்லிகை பூ பந்தலைக் கை காட்டினாள். கனகாம்பரம் நிறைய பூத்திருக்குது, அதிலும் தருவீர்களா? என அவர்கள் கேட்ட போது மரத்தில் முறிவு, ஏற்படாது ஒவ்வொரு பூவாக கழட்டி எடுங்கள் என்றவண்ணம், மனைவி சமயலறைக்குள் போன பின்பு அந்தப் பெண்களின் சம்பாஷனையை உற்றுக் கேட்டான் சுந்தர்.

ஜெயா கெட்டிக்காரி எப்படி தோட்டத்தை வைத்திருக்கின்றார். நல்ல கலை உணர்ச்சி உள்ள பெண் என கதைத்தபடி பூக்களை கொய்தனர். திரும்பவும் வயிறு எரிந்தது, பொங்கியது. ஏனோ யார் ஜெயாவை புகழ்ந்தாலும் சுந்தர் கொந்தளித்து தான் போய் விடுகின்றான்.

ஜெயா வந்து காலைச் சாப்பாடு சாப்பிட அழைத்தாள். சுந்தர் மறுத்துவிட்டான், எனக்கு உடல்நிலை சரியில்லை என்று ஆபிசுக்கு லீவு போட்டுவிட்டேன். சோறு சமைத்து ரசமும் வைத்து ஏதாவது பொரியலும் செய்து பால்கறியும் வைத்தால் நல்லது என்றான். நின்று நிமிர்ந்து பார்த்தாள் ஜெயா, என்ன! கண்களால் கேட்ட சுந்தருக்கு ஒன்றும் இல்லை என்று சொன்னபடி, அவள் உள்ளே போய் விட்டாள். ஒரு நமட்டுச் சிரிப்புடன் சுந்தரின் எண்ண ஓட்டம் தொடங்கியது முதலே சொல்லியிருந்தால் காலை சாப்பாட்டை செய்யாமல் மதிய உணவை சமைத்து இருக்கலாம் என எண்ணி இருந்திருப்பாள். நல்லா வேலை செய்யட்டும் எல்லோரும் புகழும்போது சந்தோஷப்படுகிறாள், தானே வேலை செய்து களைக்கட்டும் என மனதில் எண்ணிக் கொண்டான்

கண்ணை மூடி எண்ணக் கடலில் மிதந்த அவன் பத்திரிகை விரித்தபடி இருக்க வானொலியில் இசை தவழ்ந்து வந்து தாலாட்ட அவனை அறியாமல் கண்ணயர்ந்து விட்டான். சுவர் மணிக்கூடு 9 மணி அடித்து ஓய்ந்த போது, ஜெயா சுந்தரை தட்டியெழுப்பி நீங்கள் சொன்ன மாதிரி சோறு ரசம் பொரியல் பால்கறி வைத்துள்ளேன். ப்ளீஸ் போட்டு சாப்பிடுங்க எனக்கு நேரம் போய்விட்டது. என்று சொல்லிய வண்ணம் ஓட்டமாக ஓடிச் சென்று ஸ்கூட்டரை இயக்கத் தொடங்கினார்

சுந்தருக்கு ஏனோ மனசாட்சி குத்தியது “நீர் சாப்பிட்டுவிட்டீரா?” என ஒரு கேள்வி கேட்டான் இல்லை நேரம் போய்விட்டது லஞ்ச் கொண்டு போறேன் தானே வாரேன் என சொன்னவண்ணம் புறப்பட்டு விட்டாள். சுந்தருக்கு குற்ற உணர்ச்சியாக இருந்தது காலையில் எழுந்து இயந்திரமாக வேலை செய்து பிள்ளைகளை ஆயத்தப்படுத்தி பாடசாலைக்கு அனுப்பி வைத்ததுடன் உதவி என்று வந்தவர்களுக்கு முகம் சுழிக்காமல் உதவி செய்து கொடுத்ததுடன் தனது தேவையையும் சரியாக நிறைவேற்றி விட்டு வேலைக்குப் போகின்றாள். ஆனால் தன்னை கவனிக்கவில்லை. மனைவியின் உடல்நிலை சரியில்லை என படுத்துவிட்டால், இவ்வளவு வேலைகளையும் யார் செய்வார்கள்?

நானும் கூடமாட உதவி செய்திருந்தால் அவளுக்கு சிறிதாக நேரம் மிச்சம் இருந்திருக்கும் அவள் தனது காலை உணவை சாப்பிட முடிந்திருக்கும் அவளுடைய நல்ல குணத்தைத்தானே பாராட்டினார்கள் அவள் சமையலில் மட்டுமல்ல அவளுடைய கந்தோர் வேலையிலும் திறமையானவள், என பெயர் எடுத்துள்ளாள். உலக விடயங்கள் அரசியல் விடயங்கள் சிறு சிறு மருத்துவ குறிப்புகள் என பல விடயங்களிலும் தேர்ந்தவளாக தான் இருக்கின்றாள் இதற்காக நான் பெருமைப் பட அல்லவா வேண்டும்? ஏன் பொறாமைப்பட வேண்டும்? நான் ஆண் என்ற மமதையா?

நான் அப்படிப்பட்டவன் அல்லவே?! இன்று ஜெயா வீட்டுக்கு வந்ததும் அவளிடம் சமரசமாக கதைத்து அவளுக்கு உதவியாக இருந்து வாழ்க்கையை சந்தோஷமாக கழிக்க வேண்டும் இரண்டு மாடுகள் சேர்ந்து இழுத்தால் வண்டி சுகமாக போகும் ஒரு மாடு மட்டும் இழுத்தால் வண்டி பழுதுதான் ஆகும், மாடும் செயலிழந்துவிடும் என எண்ணினான் சுந்தர்

எழுத்து,
மங்கை அரசி.

முதல் அடி எழுதிய முடிவுரை.

அவள் எப்போதும் சந்தோசமாக தான் இருந்தாள். சிரித்தபடி முகம் இருக்க, துள்ளலுடன் நடை இருக்க, குறும்பான சேட்டைகள் செய்யும் மங்கையாக, நான்கு அண்ணன்களுக்கு தங்கையாக, அப்பாவிற்கும் செல்லப்பிள்ளையாக, அம்மா இல்லாத பிள்ளையாக, அம்மும்மாவின் குழந்தையாக, அவள் வலம் வந்து கொண்டிருந்தாள்.

அவள் நினைத்தது நடக்கும். கேட்டது கிடைக்கும். இப்பொழுது அல்ல இது அவளது 20 ஆவது பிறந்த தினத்திற்கு முந்தைய காலம். அவளது 20 ஆவது பிறந்த தினம் சிறப்பாக கொண்டாடப்பட்டது. சுதந்திரப் பறவை போல் பறந்து திரிந்த அவளுக்கு சில கட்டுப்பாடுகள் விதிக்கப்பட்டன. வண்ணத்துப் பூச்சி போல மகிழ்ந்து பிறந்தவர்களுக்கு தடைகள் போடப்பட்டன. கம்பியால் வேலி போடாவிட்டாலும், கண்டிப்புடன் பல தடைகள் ஏற்பட்டன. அவள் பிடிவாதம் பிடிக்கத்தான் செய்தாள், எதிர்வாதம் செய்து தான் பார்த்தாள், எதுவித பலனும் இல்லை. அப்பாவின் கடுமை அவளுக்கு புதிதாக இருந்தது. அப்பாவிற்கு பக்கபலமாக அண்ணன்மார்களும் இணையாக கதைத்தனர்.

வீட்டில் அவள் அம்மும்மாவின் மடியில் தலை புதைத்து விக்கி விக்கி அழுதாள். அம்மும்மா முதுகில் தடவி தலையை கோதி ஆறுதல் படுத்தினார். ஆனால் அவரும் அப்பாவின் பக்கம் நியாயம் இருப்பதாகத்தான் கூறினார். அந்த காலத்து மனுஷன் தானே! அவர் எதற்காக இந்த கண்டிப்பு? அவள் அப்படி என்ன தப்பு செய்தால்?

அவளுக்கு திருமண பேச்சு வீட்டில் ஏற்பாடு செய்யப்படுகின்றது. பொதுப் பரீட்சைகளில் முதல்தர பெறுபவர்களை பெற்றிருந்தும், மேல்படிப்பு படிக்க அனுமதி இல்லை. ஆனால் அவள் சோர்ந்து போய் விடவில்லை. முடியாது என மறுத்தாள், எதிர்வாதமிட்டாள். அப்பாவின் கண்டிப்பில் கடுமை காட்டப்பட்டது. அண்ணன்மார்களும் பிடிவாதம் பிடிக்காமல் சொல்லுக்கு அடங்கி நட என கண்டித்தனர்.

குழந்தை பிள்ளைக்கு சொல்ற மாதிரி உனக்கு நான் புத்திமதி சொல்றேன் நீ பிடிவாதமாய் மறுக்கிறாய் என்று சொல்லி அடித்துவிட்டார், அப்பாவின் கை விரல்கள் அவள் கன்னத்தில் பதிந்து விட்டது. இன்று தான் முதல் அடி, இனி அடிகள் தொடரும். அவள் அழவில்லை கண்ணீர் வற்றிவிட்டது. இல்லை! அவர் திடமாக முடிவெடுத்துவிட்டால்.

பெண்ணாகப் பிறந்து விட்டால் ஆண்களுக்கு அடங்கித்தான் போகவேண்டுமா?! நியாயமான தனது ஆசையை கூட தொலைத்து விட வேண்டுமா? எதிர்கால முன்னேற்றத்தை விடுத்து இன்னொரு ஆணுக்கு அடிமையாக்குவது சரியா? நிமிர்ந்து தந்தையை பார்த்தால். இன்னொரு அடி என் மேல் விழுந்தாள் நான் போலீஸ் ஸ்டேஷன் வாசலை மிதிக்க வேண்டிவரும்! அன்புக்கு கட்டுப்படுவேன், நியாயத்திற்கு அடி பணிவேன், ஆனால் இன்னொரு அடிமை வாழ்க்கைக்கு நான் தயாரில்லை. நான் தொடர்ந்து படிக்க வேண்டும் என் சொந்த காலில் நிற்க வேண்டும். எதிர்கால வாழ்க்கையை நான் துணிச்சல் உடன் எதிர்கொள்ளும் துணிவும், வாழ்வுக்கான வருமானத்தை தரும் பணமீட்டும் உயர்வும், எனக்கு வரவேண்டும். அதன் பின்பு நீங்கள் சொல்லும் திருமணத்தை நான் செய்யத் தயார். அதை விடுத்து இன்று உங்கள் சொல்லுக்கு இணங்கி நான் திருமணம் செய்தால், இன்று நீங்கள் அடித்த அடி போல் நித்தம் நித்தம் அந்த கணவனிடமும் அடி வாங்கும் பரிதாபநிலை எனக்கு தோன்றும்.

ஆதலால் இந்த முதலடியின் முடிவுரையை நன்றாக யோசித்து, உங்கள் முடிவை மாற்றிக் கொள்ளுங்கள்! சொல்லிய பின் அவ்விடத்தை விட்டு அவள் விலகிச் சென்றாள். இன்று அவள் சட்டம் படித்து சிறந்த ஒரு சட்டத்தரணியாக தினம் தினம் நீதிமன்றப் படி ஏறி வருகின்றாள். அவளது வாழ்க்கையில் அவள் வாங்கிய முதல் அடி.
அப்பா என்றுமே அடித்ததில்லை, அண்ணன்மார்களும் விளையாட்டுக்கு கூட அடித்ததில்லை, பாடசாலையில் ஆசிரியரிடம் கூட அவள் அடி வாங்கியது இல்லை. அப்படி இருக்கையில் அன்று விழுந்து அந்த முதலடி எழுதிய முடிவுரை இன்று சட்டத்தை வரைந்து வருகின்றது. ஒவ்வொருவருடைய வாழ்க்கையிலும் இது போன்ற அடிகள் விழுந்து கொண்டே இருக்கும். முதல் அடியாக இருக்கட்டும் முந்நூறாவது அடியாக இருக்கட்டும், அது தான் உங்களுடைய இறுதியடி, என்று எப்போது நீங்கள் முடிவெடுப்பீர்களே, அப்போது தான் நீங்களும் முடிவெடுக்க முடியும்.

எழுத்து,
மங்கை அரசி.