Month: February 2019

பாதம் தேடும் சோகப்பந்து.

பாதம் தேடும் சோகப்பந்து.

பாதங்கள் இல்லாமல் நான் பறப்பேன், குதிப்பேன், உருண்டு உருண்டு உலகையே அளப்பேன். அத்தனை வல்லமையுள்ள நான் தான் உங்கள் பழைய நண்பன் பந்து. என்னை ஒரு முறை பாருங்கள், என் கதையை சிறு கணம் கேளுங்கள். பாவம் நான் இப்போது படுத்துள்ள இடம் பாழடைந்த பயங்கர பேய் வீடு போலுண்டு. தயவு செய்து என்னைக் காப்பாற்றுங்கள்.

புதிதாய் பிறந்த குழந்தை நான். என் வயது இரண்டே மாதம் தான். இருப்பினும் இப்போது பராமரிப்பின்றி, பழைய பொருட்களுடன் எறியப்பட்டுள்ளேன். இதற்கெல்லாம் ஒரே ஒருவன் தான் காரணம், அவன் தான் என் எதிரி. அந்த கொடிய அரக்கன் என் வாழ்வில் எப்படி விளையாடினான் தெரியுமா? விளையாடப் பிறந்தவன் நான் என் வாழ்க்கையிலேயே விளையாடிவிட்டனர். கண்டியில் வசிக்கும் என் தந்தை இறப்பர் மரத்திற்கும், சீனாவில் உள்ள என் தாய் கூமா நிறுவனத்திற்கும் மகனாகப் பிறந்தேன் நான். என் பிறப்பின் பாதையே அத்தனை கொடுமையாய் இருந்தது. என் தந்தையில் இருந்து நான் உருவாகுவதற்காக கண்டிப் பிரதேசத்தில் வசிக்கும் முருகையாவும் அவரின் குடும்பமும் இரவு பகலாய்ப் பாடுபட்டனர். என் தந்தை இறப்பர் மரத்தை அழகாகப் பாதுகாத்து, மழை நீர் உட்செல்லாமல் அடைத்து, மறைப்புப் போட்டு என்னைப் பாதுகாப்பாக பிரசவம் பார்த்து இறப்பர்ப் பாலாக வெளியெடுத்தனர். அதன் பின் என்னை வடிகட்டி குளிப்பாட்டி நொதியம் எல்லாம் சேர்த்து கொதிக்க வைத்து என்னை உறுதியான இறப்பர்ப் பட்டையாக மாற்ற, நானும் அனைத்திற்கும் இணங்கி நல்ல பிள்ளையாக சொன்னபடி நடக்க சிறந்த விலையுயர்ந்த தரமான இறப்பர் படிவமாக மாறினேன். இருப்பினும் சீனாவில் இருந்து வந்த வர்த்தக வியாபாரிகள், முருகையாவின் குடும்ப சூழ்நிலையை அடிப்படையாக வைத்து, அவரின் ஒரெ ஒரு பெண்குழந்தை மாலினியின் உயர்படிப்பிற்குத் தேவையான பணத்தை மட்டும் கொடுத்து, என்னை அடிமாட்டு விலைக்கு வாங்கிச் சென்றனர். மகள் மாலினி படித்தால், அவளாவது நல்ல வாழ்க்கை வாழ்வாள் என்று எண்ணி, வந்த வரை இலாபம் என்று பெற்றுக் கொண்டு என்னைக் கொடுத்து அனுப்பினார் முருகையா. தந்தையில் இருந்து பிரசவித்த நான் இப்போது தாய் வயிற்றுக்குள் செல்கின்றேன். சீனா நிறுவனம் என்னைப் பாதுகாப்பாக எடுத்துச் சென்று என் தாய் நிறுவனத்தின் இயந்திரம் என்ற வயிற்றிற்குள் செலுத்த, அங்கு நான் உருளையாக உருவம் பெற்று புதிய பிறவி எடுக்கின்றேன். அப்போது இயந்திரத்தின் கண்ணாடி வழியே எட்டி வெளியே பார்க்கின்றேன் அங்கு சீனா மக்கள் ஒரு பிள்ளை பெற மட்டுமே அனுமதி உண்டு. அதே நேரம் பத்து மணிநேரம் உழைத்தாலும் மூன்று தலையின் வாழ்வாதரத்தைக் காப்பாற்றக் கூட போதிய ஊதியம் கிடைக்காது என்பதே அவர்களின் சோகம். இவ்வாறு மனிதர்களின் சோகக் கண்ணீர் கலந்தே நான் உருவாகின்றேன். என்னடா வாழ்க்கை இது என்று சிந்தித்துக் கொண்டே இருக்கும் நேரத்தில் அந்த இயந்திர வயிறு என்னைத் தூக்கி வெளியே எறிந்தது, நானும் பாய்ந்து சென்று ஒரு சுவரில் மோதி தெறித்து வந்து ஒரு கூடையில் வீழ்ந்தேன். நான் வீழ்கின்ற கூடையின் தூரத்தைப் பொறுத்தே என் தராதரம் நிர்ணயிக்கப்படுமாம். நான் தரம் கூடிய முதலாம் இடத்தில் வீழ்ந்ததால் 95$ என்ற விலை முத்திரை குத்தப்பட்டு அமெரிக்காவிற்கு எடுத்துச் செல்லப்படுகின்றேன். அங்கு ஒரு தந்தை ஊரில் உள்ள தன் மகனைப் பார்ப்பதற்காக, ஆசையாய் என்னை வாங்கிக்கொண்டு 22 மணித்தியாலப் பயணத்தில் கண்டிக்குச் செல்கின்றார்.

வீட்டிற்கு முன் சென்றவுடன் என்னை எடுத்து தனக்குப் பின் ஒழித்த அத் தந்தை, மகனுக்காகக் காத்து நின்றார். அங்கு வந்த மகனிற்கு தன் தந்தையை அடையாளமே தெரியவில்லை. மகன் பிறந்து மூன்று வருடத்தில் இப்போது தான் முதன் முறையாக நேரில்ச் சந்திக்கின்றனர். இதுவரையும் அனைத்து அன்பையும் கணனித் திரை முன் காட்டிய மகனிற்கு, கண் முன் நிற்கும் தந்தையை கட்டிக்கொள்ளத் தெரியவில்லை. வெட்கத்தில் ஓடிவராத மகனை நோக்கி என்னை உதைத்தனுப்பினார் தந்தை. என்னைப் பார்த்த மகன் துரத்திப் பிடித்து விளையாட, தந்தைக்கும் மகனிற்குமிடையில் அழகான உறவுப் பாலமானேன் நான். ஆனால் அந்த அழகான தருணங்கள் அதிக நாட்கள் நீடிக்கப் போவதில்லை என்பது எனக்கு அப்போது தெரியாமல்ப் போனது. இவ்வாறே ஒரு வாரம் உருண்டோடியது. அன்றொரு நாள் என்னோடு விளையாடிக்கொண்டு இருந்த மகனிற்கு அன்புத் தந்தை இன்னுமோர் பரிசையும் வாங்கி வந்தார். நாளைமறுநாள் மீண்டும் அமெரிக்கா செல்லவுள்ள தந்தை, தன் மகனின் முகத்தில் சோகம் வரக்கூடாது என்பதற்காகவும் அதே தருணம் தினமும் தன் மகனைப் பார்த்துக் கதைக்க மிடுக்குத் தொலைபேசி ஒன்றை வாங்கிப் பரிசளிக்க, என் வில்லனின் வரவு அங்கே ஆரம்பம் ஆகின்றது. அவன் எனக்கு மட்டும் வில்லன் அல்ல, மொத்தக் குடும்பத்திற்கும் எமனானான். வாங்கிக் கொடுத்த தந்தை மறுநாள் மகனை விட்டுப் பிரிந்து அமெரிக்கா செல்ல அவர் எதிர்பார்த்தாற் போல் மகனும் புது தொலைபேசி கிடைத்த புதினத்தில் அழவே மறந்து ஆனந்தமாய் அனுப்பிவைத்தான். அமெரிக்கா சென்ற தந்தை உடனடியாக முகம் பார்த்துக் கதைக்கும் அழைப்பை எடுத்தார். மகன் வீதியில் நடந்து சென்று கொண்டிருக்கும் வேளையில் அழைப்பு வரவே, அதை எடுத்து தந்தையைப் பார்த்துப் பேசிக்கொண்டே வீதியில் நடை போட்டான் மகன். வேகமாக வந்த பாரவூர்தி விரைந்து நிறுத்தமுடியாத காரணத்தால், நெருங்கி வந்து இடித்தது. மகன் பறந்து சென்று தரையில் விழ, தலை தார்த் தெருவில்ப் பட்டதும் உயிர் பிரியும் மகனை தான் வாங்கிக் கொடுத்த தொலைபேசியில் பார்த்த தந்தை சித்த சுகவீனம் உற்றவராகின்றார். பயனில்லா தொழிலாளி இனி இங்கு வேண்டாம் என்று அவரை நாட்டிற்குத் திருப்ப, குடும்பமே உருக்குலைந்து போனது. இரண்டு மாதம் கழிந்த பின் மகனில்லாத் தாய், மனநிலை சரியில்லாக் கணவன் என்று ஏற்க முடியாத் துயர் இருப்பினும், குடும்பம் நடத்த வேண்டுமே என்று திருமணத்திற்கு முன் தன் தந்தை தந்த நல்ல கல்வி அறிவில் பள்ளிபடிப்பை முடித்து, காதல்த் திருமணத்தில் பெற்றோரை எதிர்த்து வெளியெ வந்து குடும்பத்தைத் தொடங்கிய மாலினி, அன்று தந்தை தந்த அந்த அறிவை வைத்து சிறுவர் பள்ளியில் ஆசிரியர் வேலை செய்து, பிள்ளை இல்லாக் குறையையும், குடும்பதிற்கு காசு இல்லாக் குறையையும் நிவர்த்தி செய்து வருகின்றாள். அவர்கள் இருக்கும் வாடகை வீட்டில் பழைய பொருட்கள் போடும் அறையில் என்னை எறிய மனமில்லாமல் போட்டு வைத்துள்ளாள் மாளினி.

என் கதை கேட்கும் நீங்களேனும் உங்கள் வாழ்க்கையில் என்னைப் போன்று இன்னுமோர் பாதம் தேடும் சோகப் பந்தை உருவாக்கி விடாதீர்கள், என்று தாழ்மையாகக் கேட்டுக் கொள்கின்றேன்.இப்படிக்குசிந்தனை சிவவினோபன்.

பாவனை இன்றியே பழுதான பாதணி நான்.

சுயசரிதை

பாவனை இன்றியே பழுதான பாதணி நான்.

இரண்டு உயிர்களின் இணைப்பிலேயே எல்லோரும் பிறக்கின்றனர். ஆனால் நானோ ஒரு உயிரின் இறப்பில்ப் பிறந்தேன். தாய் என்றோ, வீரன் என்றோ தலையில்த் தூக்கிக் கொண்டாடிய மாடென்கின்ற, என் தாயை/தந்தையை நீங்கள் அறிவீர்களா? தமிழனின் வீட்டில் தலைக்கட்டு ராஜாவாக/ராணியாக இருந்த அவர்களின் இறப்பில்த் தான் நான் பிறந்தேன். கேளுங்கள் ஒரு நிமிடம் என் கதையை. ஓயாமல் உழைத்த என் பெற்றோர்கள் நூலாகத் தேய்ந்தனர். அதனால்த் தான் இன்றும் ஓயாமல் உழைக்கும் மனிதனை மாடாகத் தேய்கின்றான் என்று சொல்வார்கள். ஓடி ஓடி உழைக்கும் தமிழனின் உடல் கறுப்பாக இருந்தாலும் உள்ளம் வெள்ளையாக அழகாக இருக்கின்றது. ஆனால் அன்றொருநாள் வந்தான் ஒரு வெள்ளை மனிதன். பார்ப்பதற்கு மிக அழகான தோற்றம் கொண்டவன், ஆனால் மனம் முழுதும் மாசு. மாசாய் இருக்கும் அவன் அனைவரையும் அடிமைப் படுத்தினான். அவன் அடி பணியவே பாதணிகளாகிய எங்களையும் உருவாக்கினான். கம்பீரமாகத் திரிந்த காளை மாட்டையும், பால் கொடுத்த பசுமாட்டையும் பாரபட்சம் இன்றிக் கொன்று குவித்தான். அந்தக் கொலையில்ப் பிறந்த விலை கூடிய ” லெதர் ஷூ ” என்று ஆங்கிலத்தில் அழைக்கப்படும் பாதணி தான் நான், இன்று ஜெர்மனியில் கழிவுகள் கொட்டும் குப்பை மேட்டில் கவனிப்பாரின்றி கொட்டப்பட்டுள்ளேன். இத்தனைக்கும் நான் பாதம் தேயாப் பாவனையின்றி இருந்த பாதணியாவேன். இருப்பினும் ஏன் எறியப்பட்டிருப்பேன் என்ற கேள்வி உங்கள் மனதிலும் வருகின்றதா? சொல்கின்றேன் கேளுங்கள் என் சோகக் கதையை.

ஜெர்மனியிலேயே மிகப் பெரிய பணக்காரரான பேண்ட் என்பவரின் பாதங்களைத்தை தான் நான் அலங்கரித்தேன். சொந்தத் தொழில் செய்து சொகுசாய் வாழ்ந்த பேண்ட் அளவிற்கு மீறி அதிகமாகச் சம்பாதித்தார். பணத்தின் பகடைக் காயிற்கு அவரும் பலியானார். பழக்க வழக்கம் தவறாகிற்று, பழகும் நண்பர்கள் பிழையாகிற்று, எடுக்கக் கூடா போதை எடுத்து உடல் பாரிசவாதம் என்ற நோயில் வீழ்ந்தார் பேண்ட். நோயில்க் கிடந்த பேண்டிற்கு, சிவநேசன் என்ற தமிழ் நண்பர் என்னைப் பரிசாகக் கொடுத்தார். ஆடாத காலிற்குச் சலங்கை போல், இரண்டு ஆண்டாக நடக்கா அந்தக் கால்களை நான் அலங்கரித்தேன். சோர்ந்த அவரின் பாதங்களை நான் தங்கினேன். என் பாதங்கள் நடக்க முடிந்தும் நடக்காமல் ஏங்கினேன். கட்டிய கணவன் சரியில்லை என்றாலும், கட்டிலில் கிடக்கும் மனைவியைப் போல், நானும் வெளித் தோற்றத்தில்ப் புதிதாகவும், உள்ளே வெதும்பிப் புண்ணாகவும் கிழியத் தொடங்கினேன். என் கிழியலைக் கண்ட பேண்ட், நான் பழயதாகி விட்டேன் என்று பழைய கடைக்கு விற்றுப் பணமாக்கினார். பிணமாகப் போகினும் பணம் பார்க்கும் உலகமிது என்று எண்ணி நானும் ஏற்றுக்கொண்டு இடம் மாறினேன். பழைய கடைக்காரரும் என்னைப் பழுது பார்க்க முயன்றார். ஆனால் இரண்டு ஆண்டுகள் என்மீது பதிந்த பேண்டின் பாதச் சுவடுகள், என் உடல் அமைப்பையே உட்புறமாய் மாற்றிவிட்டது. அதனால் நான் உபயோகப்பட மாட்டேன் என்று, எடுத்து என்னை எறிந்தார் குப்பையில்.

எருவோடு எருவாய் மக்கும் நானே, பாவனை இன்றியே பழுதான பாதணியானேன்.

எழுத்து,
சிந்தனை சிவவினோபன்

பெண்கல்வியின் ஆரம்பப் புள்ளி.

பெண்களின் சுயமரியாதைக்கு கல்வி இன்றியமையாதது. செல்வியாகினும் திருமதியாகினும் மதியோடு இல்லாவிடின் வெறும் மலராக வாழ்ந்து வாடுவர். ஆகவே கல்வியென்ற அணை இன்றியமையாத துணை.

பெண்கள், ஆண்களுக்குச் சமமாக பல துறைகளில் ஈடுபடுகின்றனர். அண்டத்தையும் கடந்து விண்வெளியில் ஆராய்ச்சி செய்கின்றனர் இன்று 2k காலத்தில். ஆனால் 16ஆம் நூற்றாண்டில் பலியாகிக்கொண்டிருந்த பெண் சமுதாயத்தில், பின்தங்கிய நிலையில் இருந்த இவ்வுலகம் கண்ட பெண் தலைமை பற்றியே இவ்வுரை ஆரம்பம். சட்டம் பயின்று முனைவர் பட்டம் பூண்ட முதல் பெண்மணி இவர்.

ஷ்பானிஷ் நாட்டைச் சேர்ந்த ஜுலியானா மோரல் என்ற பெண், இவர் தாயை இழந்து தந்தையால் வளர்க்கப்பட்டாலும், இவரிற்கு தகுந்த கல்வியறிவை கரைத்துக் குடிக்கும் வளம் வாய்த்திருந்தது. நான்கு வயதிலேயே லத்தின், கிரேக்கம், ஹிப்ரு மொழிகளைக் கற்றார்.  வீட்டிலிருந்தே வேண்டிய கல்வியறிவைக் கற்றுப் பெற்றுக்கொண்டார். தந்தை செல்லுமிடமெல்லாம் மகளாய் கூடவே சென்றாலும் தன் சொந்தவாழ்க்கையில் கல்வியை விட்டுவிடாமல் கொண்டே சென்றார். மற்றைய குழந்தைகள் போல் மறைந்து முடங்காமல், தினசரி பேச்சு, ஆராய்ச்சி, நெறிமுறைகள் மற்றும் இசை என்று பயனுள்ள பல பணிகளில் நேரம் கழித்ததால், வாழ்வைக் கணித்தால், அதன் பயன் 12 வயதிலேயே ஆராய்ச்சிக் கட்டுரையை எழுதி வெளியிட, தொடர்ந்தது அவள் பயணம் இயற்பியலோடு மேட்டா பெளதீகம் மற்றும் சட்டம் என்று பட்டம் பயின்றாள்.

1608 ஆம் ஆண்டு தன் ஆராய்ச்சிக் கட்டுரையை பொது மக்கள் முன்பும் அங்கு, இளவரசி முன்பும் வெளியிட சிவில் சட்டத்தில் முனைவர்ப் பட்டம் இவரைத் தேடி வந்தது. அதைத் தொடந்து 30 வருடங்கள் கான்வெண்டில் பெரிய பதவியில் இருந்து, மாணவர்களுக்கு கல்வியும் புகட்டி வந்தார். பொதுமக்களிற்கு அறிவியலைப் புகட்டிய தேவதை என்று எல்லோராலும் புகழப்பட்ட ஆசிரியையாக விளங்கிய ஜுலியானா மோரல் மகளிர் தினத்தில் நினைத்துப் பார்க்க வேண்டிய பெண் சிகரமாவார். 1653 இல் இவர் நோயால் மரணிக்க உலகமே ஒருகணம் குலுங்கி அழுததாம். இன்றும் என் எழுத்தில் வாழும் இவரைப் போல வாழவேண்டும் பெண்களே வாரீர்.

எழுத்து,
மங்கை அரசி.