பிரிவிற்கு வந்த பிரிவு.
இருட்டு உலகத்தில் இருந்து, ஒளியுலகை எட்டிப் பார்த்த ஈஸ்வரி, மிரள மிரள விளித்தாள். எங்கு போவது என்ன செய்வது என்றே ஈஸ்வரிக்குத் தெரியவில்லை. ஆனால் அவளை அழைத்துச் செல்ல மகளிர் நலன்புரிச் சங்கத்தினர் வந்திருந்தனர். அவர்களுடன் சென்ற ஈஸ்வரிக்கு எப்படி அவளை அடையாளம் கண்டு கொண்டனர், ஏன் அழைத்து செல்கின்றனர், என்னும் வினாக்கள் வந்து முட்டி நின்றன. மகளிர் இல்லத்திற்குள் சென்ற பின்பு, தலைவி அதற்கான விடையை ஈஸ்வரி கேட்காமலே கூறியிருந்தார். சிறையில் ஈஸ்வரியின் நன்னடத்தை காரணமாகவும், போக்கிடம் இல்லாதவளான அவளது நிலைமையையும், சிறை நிர்வாகம் எடுத்துக் கூறியதனால் தான், மகளிர் அமைப்பு அவளுக்கு அடைக்கலம் கொடுத்திருந்தது.
மகளிர் விடுதியில் அவளுக்கான இருப்பிடம் காண்பிக்கப்பட்டது. அங்கிருந்த கண்ணாடியில் தன்னை நோக்கிய ஈஸ்வரி திகைத்து விட்டாள். வயதான ஒரு மூதாட்டியின் உருவத்தை கண்ணாடி காட்டியது. காலத்தை பின்னோக்கிப் பார்த்தாள். ஒரு அழகான இளம் பெண்ணான, ஆடல் பாடலில் சிறந்து விளங்கிய ஈஸ்வரி, தாயாருடன் சேர்ந்து வீதியில் பாட்டு பாடி பிழைப்பு நடத்தி வந்தாள். நன்றாகவே போய்க்கொண்டிருந்த அவளது வாழ்க்கையில், திடீரென ஏற்பட்ட தாயாரின் மரணம், அவளை நிலைகுலைய வைத்து விட்டது. “அம்மா அம்மா” என அழுது புலம்பினாள்.”நீ இல்லாமல் எப்படி வாழ்வேன் அம்மா என கதறி துடித்தாள்.” தனியாக நான் வாழ்வது என்றால் வரும் தொல்லைகளை எப்படி சமாளிப்பேன்? என பயந்தாள். அவள் பயந்தது போலவே காமக் கழுகுகளும் அவளை வட்டமிடத் தொடங்கின.
அந்த நேரத்தில் அவளுக்குத் துணையாக வந்தவன் தான் நடராசன். அவன் வாழ்க்கைத் துணையும் ஆகிவிட்டான். நடராசனும் ஈஸ்வரியும் ஒரு கோவிலில் நடத்தப்பட்ட ஒரு இலவச திருமண நிகழ்வில், திருமண பந்தத்தில் இணைக்கப்பட்டனர். கூலி வேலை செய்து பிழைப்பு நடத்திய இருவரும் சந்தோஷமாக குடும்பம் நடத்தினர். அவர்களுடைய ஐந்து வருட இல்லற வாழ்வில், இரு முறை கர்ப்பம் தரித்தும், அவளால் முழுமையான ஒரு குழந்தையை பெற்றெடுக்க முடியவில்லை. ஒருமுறை குழந்தை கருவிலேயே இறந்து பிறந்தது. இன்னொரு முறை கரு கலைந்து விட்டது. இந்த சோகமான நிகழ்வுகளுக்கு இடையிலும், நடராசனிடமிருந்து ஈஸ்வரிக்கு அன்பும் பாசமும் முழுமையான காதலும் நிறைவாகவே கிடைத்தது.
சிறு சிறு சலசலப்புக்கள் இருந்தாலும், வாழ்க்கை ஒரு சுகமான தென்றல் ஆகவே சென்றது. ஆனால் எங்கிருந்தோ வந்த புயல் அவர்களது வாழ்க்கையையே புரட்டிப்போட்டு விட்டது. ஒரு காமக்கொடூரனின் கண்களில் ஈஸ்வரியின் இளமை அழகு தென்பட்டுவிட்டது. தப்பான எண்ணத்தோடு தனியே இருந்த அவளை அணுகிய அவனிடம், இருந்து தன்னை காப்பாற்ற அவள் போராட வேண்டி இருந்தது. போராட்டத்தின் முடிவில் அவள் தோற்றுப் போகும் நிலையே ஏற்பட்டது. அந்த நேரம் அங்கு வந்த நடராசன் கையில் கிடைத்த இரும்பு கம்பியால், அந்த கயவனின் தலையில் அடிக்க, அவன் சுருண்டு விழுந்தான். ஈஸ்வரி தப்பி விட்டாள் ஆனால் வந்தவன் இறந்து விட்டான்.
பின்பு நடந்ததெல்லாம் அவர்கள் கனவில் கூட எண்ணிப் பார்க்காதவை. போலீஸ் விசாரணை, மரண விசாரணை என அனைத்து விசாரணைகளின் பின்பு, பணம் பறிக்கும் நோக்கத்தில் அந்த மனிதனை நடராசன் கொலை செய்துவிட்டான், என்று வழக்கு தாக்கல் செய்துவிட்டனர். அதிகம் படிக்காத, பயந்த சுபாவம் உள்ள நடராசனும், ஈஸ்வரியும் செய்வதறியாது திகைத்தனர். வழக்கில், விசாரணையின் போது, “இரும்புக் கம்பியால் அடித்துக் கொன்றது உனது கணவன் தானே?” என ஈஸ்வரியிடம் கேட்டனர். “ஆம்” என ஈஸ்வரி சொன்னபோதும், ஏன் அப்படிச் செய்தான்? என விசாரணை அதிகாரிகள் கேட்கவில்லை. தன்னுடைய மானம் காக்கவே, தன் கணவன் அப்படி நடந்து கொண்டான். என அவள் சொல்ல நினைத்தாள். ஆனால் அதற்கான சந்தர்ப்பம் அவளுக்கு வழங்கப்படவில்லை. நடராசனிடமும் “நீ கம்பியால் அடித்ததனால் தானே அந்த மனிதன் இறந்தான்?” எனக் கேட்கப்பட்டதே ஒழிய, ஏன் என்னும் கேள்வி எழவே இல்லை. ஏன் அப்படிச் செய்தான் எனக் கூற, அவனுக்கும் சந்தர்ப்பம் வழங்கப்படவில்லை.
நடராசனுக்கு கொலைக்கான தண்டனையாக, ஆயுள் தண்டனை விதிக்கப்பட்டது. விபரீதத்தை உணர்ந்து கொண்ட ஈஸ்வரி, தன்னுடைய கணவனுக்கு கொலை செய்ய உதவி புரிந்ததாக ஒப்புதல் வாக்குமூலம் கொடுத்து விட்டாள். அவளுக்கும் ஆயுள் தண்டனை விதிக்கப்பட்டது. 25 வயதில் சிறைக்குச் சென்ற ஈஸ்வரி, 55 வயதில் வெளியுலகை பார்க்க வந்துவிட்டாள். ஆனால் அவள் கணவனின் நிலை என்ன என எண்ணி, வேதனைபட்டாள். தன்னுடைய நிலமையை, மகளிர் சங்கத் தலைவியிடம் கூறி, உதவி கூறி அழுதாள். அவர்கள் எடுத்த நடவடிக்கையின் காரணமாக, ஒன்பது மாத முடிவில் நடராசனுக்கும் விடுதலை கிடைத்தது.
30 வயதில் சிறைக்குச் சென்றவன், 61 வயதில் வெளியில் வந்தான். நடராசனும், ஈஸ்வரியும் ஒருவரை ஒருவர் பார்த்துக் கொண்டனர். உருவம் தான் முதுமை அடைந்திருந்தாலும், உள்ளத்தில் அன்பு ஊற்றெடுத்த வண்ணம் இருந்தது. முதுமை தன் முகவரியை முகம் முழுக்க தெளித்து இருந்தது. தலையில் நரை கூடி இருந்தது. உடல் கிழப் பருவம் அடைந்திருந்தது. உள்ளம் மட்டும் இளமையுடன் விழித்திருந்தது. ஒருவர் மேல் ஒருவர் கொண்டிருந்த அந்த அன்பு, ஊற்று நீர் என பெருக்கெடுத்தது. அவர்கள் ஒருவரை ஒருவர் கனிவுடன் பார்த்த வண்ணம் இருந்தனர். ஒரு வார்த்தை கூட பேச முடியவில்லை. மௌன மொழி என்பது இதுதானோ? இரண்டு ஜோடி கண்களிலும் கண்ணீர் பெருக்கெடுத்து ஓடியது.
“பிரிந்தவர் மீண்டும் சேர்ந்திடும் போது, அழுதால் கொஞ்சம் நிம்மதி!” என்று கவிஞர் கண்ணதாசனின் வரிகள் அங்கே மயிலிறகாய் விரிந்தது.
எழுத்து,
மங்கை அரசி.
