Article

பாவனை இன்றியே பழுதான பாதணி நான்.

சுயசரிதை

பாவனை இன்றியே பழுதான பாதணி நான்.

இரண்டு உயிர்களின் இணைப்பிலேயே எல்லோரும் பிறக்கின்றனர். ஆனால் நானோ ஒரு உயிரின் இறப்பில்ப் பிறந்தேன். தாய் என்றோ, வீரன் என்றோ தலையில்த் தூக்கிக் கொண்டாடிய மாடென்கின்ற, என் தாயை/தந்தையை நீங்கள் அறிவீர்களா? தமிழனின் வீட்டில் தலைக்கட்டு ராஜாவாக/ராணியாக இருந்த அவர்களின் இறப்பில்த் தான் நான் பிறந்தேன். கேளுங்கள் ஒரு நிமிடம் என் கதையை. ஓயாமல் உழைத்த என் பெற்றோர்கள் நூலாகத் தேய்ந்தனர். அதனால்த் தான் இன்றும் ஓயாமல் உழைக்கும் மனிதனை மாடாகத் தேய்கின்றான் என்று சொல்வார்கள். ஓடி ஓடி உழைக்கும் தமிழனின் உடல் கறுப்பாக இருந்தாலும் உள்ளம் வெள்ளையாக அழகாக இருக்கின்றது. ஆனால் அன்றொருநாள் வந்தான் ஒரு வெள்ளை மனிதன். பார்ப்பதற்கு மிக அழகான தோற்றம் கொண்டவன், ஆனால் மனம் முழுதும் மாசு. மாசாய் இருக்கும் அவன் அனைவரையும் அடிமைப் படுத்தினான். அவன் அடி பணியவே பாதணிகளாகிய எங்களையும் உருவாக்கினான். கம்பீரமாகத் திரிந்த காளை மாட்டையும், பால் கொடுத்த பசுமாட்டையும் பாரபட்சம் இன்றிக் கொன்று குவித்தான். அந்தக் கொலையில்ப் பிறந்த விலை கூடிய ” லெதர் ஷூ ” என்று ஆங்கிலத்தில் அழைக்கப்படும் பாதணி தான் நான், இன்று ஜெர்மனியில் கழிவுகள் கொட்டும் குப்பை மேட்டில் கவனிப்பாரின்றி கொட்டப்பட்டுள்ளேன். இத்தனைக்கும் நான் பாதம் தேயாப் பாவனையின்றி இருந்த பாதணியாவேன். இருப்பினும் ஏன் எறியப்பட்டிருப்பேன் என்ற கேள்வி உங்கள் மனதிலும் வருகின்றதா? சொல்கின்றேன் கேளுங்கள் என் சோகக் கதையை.

ஜெர்மனியிலேயே மிகப் பெரிய பணக்காரரான பேண்ட் என்பவரின் பாதங்களைத்தை தான் நான் அலங்கரித்தேன். சொந்தத் தொழில் செய்து சொகுசாய் வாழ்ந்த பேண்ட் அளவிற்கு மீறி அதிகமாகச் சம்பாதித்தார். பணத்தின் பகடைக் காயிற்கு அவரும் பலியானார். பழக்க வழக்கம் தவறாகிற்று, பழகும் நண்பர்கள் பிழையாகிற்று, எடுக்கக் கூடா போதை எடுத்து உடல் பாரிசவாதம் என்ற நோயில் வீழ்ந்தார் பேண்ட். நோயில்க் கிடந்த பேண்டிற்கு, சிவநேசன் என்ற தமிழ் நண்பர் என்னைப் பரிசாகக் கொடுத்தார். ஆடாத காலிற்குச் சலங்கை போல், இரண்டு ஆண்டாக நடக்கா அந்தக் கால்களை நான் அலங்கரித்தேன். சோர்ந்த அவரின் பாதங்களை நான் தங்கினேன். என் பாதங்கள் நடக்க முடிந்தும் நடக்காமல் ஏங்கினேன். கட்டிய கணவன் சரியில்லை என்றாலும், கட்டிலில் கிடக்கும் மனைவியைப் போல், நானும் வெளித் தோற்றத்தில்ப் புதிதாகவும், உள்ளே வெதும்பிப் புண்ணாகவும் கிழியத் தொடங்கினேன். என் கிழியலைக் கண்ட பேண்ட், நான் பழயதாகி விட்டேன் என்று பழைய கடைக்கு விற்றுப் பணமாக்கினார். பிணமாகப் போகினும் பணம் பார்க்கும் உலகமிது என்று எண்ணி நானும் ஏற்றுக்கொண்டு இடம் மாறினேன். பழைய கடைக்காரரும் என்னைப் பழுது பார்க்க முயன்றார். ஆனால் இரண்டு ஆண்டுகள் என்மீது பதிந்த பேண்டின் பாதச் சுவடுகள், என் உடல் அமைப்பையே உட்புறமாய் மாற்றிவிட்டது. அதனால் நான் உபயோகப்பட மாட்டேன் என்று, எடுத்து என்னை எறிந்தார் குப்பையில்.

எருவோடு எருவாய் மக்கும் நானே, பாவனை இன்றியே பழுதான பாதணியானேன்.

எழுத்து,
சிந்தனை சிவவினோபன்

பெண்கல்வியின் ஆரம்பப் புள்ளி.

பெண்களின் சுயமரியாதைக்கு கல்வி இன்றியமையாதது. செல்வியாகினும் திருமதியாகினும் மதியோடு இல்லாவிடின் வெறும் மலராக வாழ்ந்து வாடுவர். ஆகவே கல்வியென்ற அணை இன்றியமையாத துணை.

பெண்கள், ஆண்களுக்குச் சமமாக பல துறைகளில் ஈடுபடுகின்றனர். அண்டத்தையும் கடந்து விண்வெளியில் ஆராய்ச்சி செய்கின்றனர் இன்று 2k காலத்தில். ஆனால் 16ஆம் நூற்றாண்டில் பலியாகிக்கொண்டிருந்த பெண் சமுதாயத்தில், பின்தங்கிய நிலையில் இருந்த இவ்வுலகம் கண்ட பெண் தலைமை பற்றியே இவ்வுரை ஆரம்பம். சட்டம் பயின்று முனைவர் பட்டம் பூண்ட முதல் பெண்மணி இவர்.

ஷ்பானிஷ் நாட்டைச் சேர்ந்த ஜுலியானா மோரல் என்ற பெண், இவர் தாயை இழந்து தந்தையால் வளர்க்கப்பட்டாலும், இவரிற்கு தகுந்த கல்வியறிவை கரைத்துக் குடிக்கும் வளம் வாய்த்திருந்தது. நான்கு வயதிலேயே லத்தின், கிரேக்கம், ஹிப்ரு மொழிகளைக் கற்றார்.  வீட்டிலிருந்தே வேண்டிய கல்வியறிவைக் கற்றுப் பெற்றுக்கொண்டார். தந்தை செல்லுமிடமெல்லாம் மகளாய் கூடவே சென்றாலும் தன் சொந்தவாழ்க்கையில் கல்வியை விட்டுவிடாமல் கொண்டே சென்றார். மற்றைய குழந்தைகள் போல் மறைந்து முடங்காமல், தினசரி பேச்சு, ஆராய்ச்சி, நெறிமுறைகள் மற்றும் இசை என்று பயனுள்ள பல பணிகளில் நேரம் கழித்ததால், வாழ்வைக் கணித்தால், அதன் பயன் 12 வயதிலேயே ஆராய்ச்சிக் கட்டுரையை எழுதி வெளியிட, தொடர்ந்தது அவள் பயணம் இயற்பியலோடு மேட்டா பெளதீகம் மற்றும் சட்டம் என்று பட்டம் பயின்றாள்.

1608 ஆம் ஆண்டு தன் ஆராய்ச்சிக் கட்டுரையை பொது மக்கள் முன்பும் அங்கு, இளவரசி முன்பும் வெளியிட சிவில் சட்டத்தில் முனைவர்ப் பட்டம் இவரைத் தேடி வந்தது. அதைத் தொடந்து 30 வருடங்கள் கான்வெண்டில் பெரிய பதவியில் இருந்து, மாணவர்களுக்கு கல்வியும் புகட்டி வந்தார். பொதுமக்களிற்கு அறிவியலைப் புகட்டிய தேவதை என்று எல்லோராலும் புகழப்பட்ட ஆசிரியையாக விளங்கிய ஜுலியானா மோரல் மகளிர் தினத்தில் நினைத்துப் பார்க்க வேண்டிய பெண் சிகரமாவார். 1653 இல் இவர் நோயால் மரணிக்க உலகமே ஒருகணம் குலுங்கி அழுததாம். இன்றும் என் எழுத்தில் வாழும் இவரைப் போல வாழவேண்டும் பெண்களே வாரீர்.

எழுத்து,
மங்கை அரசி.

காதலிற்கு கற்புண்டா?

காதலிற்கு கற்புண்டா?

உப்பில்லாப் பண்டம் குப்பையிலே என்று சொல்வதைப் போன்று, கற்பில்லா உறவு எப்போதும் நிலைக்காது. அதனால்த் தான் வையகத்தில் வாழ்கின்ற மனிதர்களும் நிலையாக நீண்டநாள், துணையாக இருப்பதில்லை. அதில் காதல் மட்டும் என்ன விதிவிலக்கா? கற்பிழந்த காரணத்தால், காதலுமிங்கு கயிறறுந்த காற்றாடிபோல், காற்றிளுக்கும்  திசைகளில் வழிமாறிச் செல்கின்றது.

காதலிற்கு கற்புண்டா? என்ற கேள்வி உங்களை போல் எனக்கும் எழுந்தது. கேள்விக்குப் பதில் காண வேண்டும் என்ற வேள்வித்  தீ எனக்குள் எழ, காதல் எப்படி உருவாகுகின்றது என்ற காரணத்தை அலசினேன். விஞ்ஞானிகள் சொல்கின்றனர், காதல் ஹார்மோன்களின் கசிவு என்றும். கவிஞர்கள் சொல்கின்றனர் காதல் கடவுளின் வடிவு என்றும். ஆகவே காதல் என்பதைத் தெளிவாக விரிவாக புரிந்துகொள்ளவேண்டும் என்றால், காதல் என்பதன் வரைவிலக்கணத்தைப் பார்க்க வேண்டும். அன்பின் ஒரு வடிவமே காதல். அந்தவகையில் கவிஞர்கள் சொல்வது உண்மையாகின்றது. அன்பே இறைவன் என்று தான் எல்லா மதங்களும் சொல்கின்றன. ஆகவே காதல் கடவுளின் வடிவு தான். குறிப்பிட்ட வயதைத் தாண்டும் போது தான் காதல் மலர்கின்றது, ஆகவே விஞ்ஞானம் சொல்வதைப் போல ஹார்மோன்கள் சுரக்கும் போது காதலும் பிறக்கின்றது என்பதில் உறுதியடையலாம்.

இயற்கையாகச் சுரக்கும் ஹார்மோன்கள் எப்படி எல்லோரிடமும் சுரப்பதில்லை என்ற வினாவும், இறைவனின் வடிவம் தான் காதல் என்றால் ஏன் காதலைக் கடந்து முனிவர்கள் இறைவனைக் காண்கின்றனர் என்ற கேள்விகளும், மீண்டும் இந்தத் தலைப்பில் ஒரு சர்ச்சையை ஏற்படுத்த முனைகின்றன. காதல் என்பது குறிப்பாக ஒருவருக்கு ஒருவர் இடையில் உண்டாகும் மாய உறவு (பெரும்பான்மையாக) ஆகும். காதல் எப்படி உருவாகுகின்றது என்பதை உணர்ந்தால், ஒருவேளை இதற்கான பதில் கிடைக்கலாம்.

காதல் என்பது ஒருவகையான பாதுகாப்புணர்வு. இந்த உலகில் வாழும் மனிதர்கள் பொதுவாக ஆழ்ந்த பயத்தில் வாழ்ந்து வருகின்றனர். உலகில் வாழும் உயிரினங்களின் வாழ்க்கை முறையைப் பாருங்கள், ஒரு உயிரைக் கொன்றால்த் தான் இன்னொரு உயிர் வாழமுடியும் என்ற அமைப்பில்த் தான் இயங்குகின்றது. ஆகவே மனிதனும் அதேபோலத் தான் இருந்து, பிறந்து, பரிணாம வளர்ச்சியில் பண்பாடு அடைந்துள்ளான். இருப்பினும் ஒவ்வொரு உயிருக்குள்ளும் இருக்கும் அந்தத் தனிமை உணர்வு மற்றும் பயம் மனிதனுக்குள்ளும் உண்டு. அதை போக்கவே மனிதன் கூட்டம் கூட்டமாக வாழத் தொடங்கினான். இந்தக் குணம் மற்றய சில உயிரினங்களுக்கும் உண்டு. (உ+ம்- மாடு, ஆடு, யானை ….) ஆனால் மனிதனின் அந்த ஒற்றுமையில் ஒரு விரிசல் ஏற்பட மனிதனுக்குள் பிளவு ஏற்பட்டது. அதனால்தான் மனிதன் தன்னை பிற மனிதரிடம் இருந்து காத்துக்கொள்ளும் எண்ணத்தில் தன் கூட்டத்தில் ஒரு பிணைப்பை   ஏற்படுத்தினான்.

அந்தப் பிணைப்புத் தான் அன்பு. அதனால்த்தான் பாருங்கள், எம்மை பாதுகாப்போர் மீது அன்பு வரும். அந்த அன்பு, இரத்த சொந்தத்தில் பாசமாகவும், மற்ற சொந்தத்தில் நட்பாகவும், இரத்தக் கலப்புச் சொந்தத்தில் காதலாகவும் பெயரிடப்பட்டது. இரத்தக் கலப்புச் சொந்தம் என்பது திருமண பந்தம், ஒரு பெண்ணுக்கு தன்னைப் பாதுகாக்கும் தகுதி கொண்ட ஆணைப் பார்க்கும் போதும், ஒரு ஆணுக்கு தன்னை பாதுகாக்கும் குணாதிசயம் கொண்ட பெண்ணைப் பார்க்கும் போதும், இரத்தக் கலப்பு அன்பு உருவாகும் (ஹார்மோன் சுரக்கும்) வண்ணம் எம் உடல் பரிமாண வளர்ச்சி அடைந்துவிட்டது. எப்படி என்றால், மீனாக இருந்த உயிரினம் கடலில் உணவுப் பற்றாக்குறையால் மெதுவாக தரை நோக்கி வந்ததால் முதலையாக மாறியதை போல.

அப்படி என்றால் கற்பென்றால் என்ன? என்ற கேள்விக்கு, இலகுவாக அதன் பெயரிலேயே விடையுண்டு ( கற்பு = காப்பு ). மனிதன் தன் பயத்தைப் போக்க தனிமையைத் தவிர்த்து கூடமாக இருக்க உருவாக்கிய அன்பைப் பாதுகாக்கவே கற்பை வடிவமைத்தான். ஒரு உறவில் உள்ளவர்களுக்குள் போடப்படும் மாயை ஒப்பந்தம் தான் கற்பு. நீ என்னோடு நேர்மையாக இருக்க வேண்டும், உண்மையாக இருக்க வேண்டும், நாம் ஒற்றுமையாக இருக்கவேண்டும் என்பதே கற்பின் கொள்கைகள். ஆகவே காதலிற்கு கற்புண்டா? என்ற கேள்விக்கு பதில் தெரிந்தவர்கள், உங்களுக்கு மிகவும் பிடித்த உங்கள் மீது அன்புகொண்டவர்களிடம் அல்லது நீங்கள் மிகவும் அன்புகொண்டவரிடம் இந்தக் கட்டுரையைப் பகிர்ந்து உங்கள் அன்பைப் புரிந்துகொள்ளுங்கள்.

கற்பு ஒளிந்திருப்பது,
கருவறையில் அல்லை, – உன்
கற்பனையில்த் தான்.
நம்பிக்கை கொண்ட உறவினில் மட்டுமே,
நியாமான கற்புண்டு.

சிந்தனை சிவவினோபன்