vino

பாவனை இன்றியே பழுதான பாதணி நான்.

சுயசரிதை

பாவனை இன்றியே பழுதான பாதணி நான்.

இரண்டு உயிர்களின் இணைப்பிலேயே எல்லோரும் பிறக்கின்றனர். ஆனால் நானோ ஒரு உயிரின் இறப்பில்ப் பிறந்தேன். தாய் என்றோ, வீரன் என்றோ தலையில்த் தூக்கிக் கொண்டாடிய மாடென்கின்ற, என் தாயை/தந்தையை நீங்கள் அறிவீர்களா? தமிழனின் வீட்டில் தலைக்கட்டு ராஜாவாக/ராணியாக இருந்த அவர்களின் இறப்பில்த் தான் நான் பிறந்தேன். கேளுங்கள் ஒரு நிமிடம் என் கதையை. ஓயாமல் உழைத்த என் பெற்றோர்கள் நூலாகத் தேய்ந்தனர். அதனால்த் தான் இன்றும் ஓயாமல் உழைக்கும் மனிதனை மாடாகத் தேய்கின்றான் என்று சொல்வார்கள். ஓடி ஓடி உழைக்கும் தமிழனின் உடல் கறுப்பாக இருந்தாலும் உள்ளம் வெள்ளையாக அழகாக இருக்கின்றது. ஆனால் அன்றொருநாள் வந்தான் ஒரு வெள்ளை மனிதன். பார்ப்பதற்கு மிக அழகான தோற்றம் கொண்டவன், ஆனால் மனம் முழுதும் மாசு. மாசாய் இருக்கும் அவன் அனைவரையும் அடிமைப் படுத்தினான். அவன் அடி பணியவே பாதணிகளாகிய எங்களையும் உருவாக்கினான். கம்பீரமாகத் திரிந்த காளை மாட்டையும், பால் கொடுத்த பசுமாட்டையும் பாரபட்சம் இன்றிக் கொன்று குவித்தான். அந்தக் கொலையில்ப் பிறந்த விலை கூடிய ” லெதர் ஷூ ” என்று ஆங்கிலத்தில் அழைக்கப்படும் பாதணி தான் நான், இன்று ஜெர்மனியில் கழிவுகள் கொட்டும் குப்பை மேட்டில் கவனிப்பாரின்றி கொட்டப்பட்டுள்ளேன். இத்தனைக்கும் நான் பாதம் தேயாப் பாவனையின்றி இருந்த பாதணியாவேன். இருப்பினும் ஏன் எறியப்பட்டிருப்பேன் என்ற கேள்வி உங்கள் மனதிலும் வருகின்றதா? சொல்கின்றேன் கேளுங்கள் என் சோகக் கதையை.

ஜெர்மனியிலேயே மிகப் பெரிய பணக்காரரான பேண்ட் என்பவரின் பாதங்களைத்தை தான் நான் அலங்கரித்தேன். சொந்தத் தொழில் செய்து சொகுசாய் வாழ்ந்த பேண்ட் அளவிற்கு மீறி அதிகமாகச் சம்பாதித்தார். பணத்தின் பகடைக் காயிற்கு அவரும் பலியானார். பழக்க வழக்கம் தவறாகிற்று, பழகும் நண்பர்கள் பிழையாகிற்று, எடுக்கக் கூடா போதை எடுத்து உடல் பாரிசவாதம் என்ற நோயில் வீழ்ந்தார் பேண்ட். நோயில்க் கிடந்த பேண்டிற்கு, சிவநேசன் என்ற தமிழ் நண்பர் என்னைப் பரிசாகக் கொடுத்தார். ஆடாத காலிற்குச் சலங்கை போல், இரண்டு ஆண்டாக நடக்கா அந்தக் கால்களை நான் அலங்கரித்தேன். சோர்ந்த அவரின் பாதங்களை நான் தங்கினேன். என் பாதங்கள் நடக்க முடிந்தும் நடக்காமல் ஏங்கினேன். கட்டிய கணவன் சரியில்லை என்றாலும், கட்டிலில் கிடக்கும் மனைவியைப் போல், நானும் வெளித் தோற்றத்தில்ப் புதிதாகவும், உள்ளே வெதும்பிப் புண்ணாகவும் கிழியத் தொடங்கினேன். என் கிழியலைக் கண்ட பேண்ட், நான் பழயதாகி விட்டேன் என்று பழைய கடைக்கு விற்றுப் பணமாக்கினார். பிணமாகப் போகினும் பணம் பார்க்கும் உலகமிது என்று எண்ணி நானும் ஏற்றுக்கொண்டு இடம் மாறினேன். பழைய கடைக்காரரும் என்னைப் பழுது பார்க்க முயன்றார். ஆனால் இரண்டு ஆண்டுகள் என்மீது பதிந்த பேண்டின் பாதச் சுவடுகள், என் உடல் அமைப்பையே உட்புறமாய் மாற்றிவிட்டது. அதனால் நான் உபயோகப்பட மாட்டேன் என்று, எடுத்து என்னை எறிந்தார் குப்பையில்.

எருவோடு எருவாய் மக்கும் நானே, பாவனை இன்றியே பழுதான பாதணியானேன்.

எழுத்து,
சிந்தனை சிவவினோபன்

பெண்கல்வியின் ஆரம்பப் புள்ளி.

பெண்களின் சுயமரியாதைக்கு கல்வி இன்றியமையாதது. செல்வியாகினும் திருமதியாகினும் மதியோடு இல்லாவிடின் வெறும் மலராக வாழ்ந்து வாடுவர். ஆகவே கல்வியென்ற அணை இன்றியமையாத துணை.

பெண்கள், ஆண்களுக்குச் சமமாக பல துறைகளில் ஈடுபடுகின்றனர். அண்டத்தையும் கடந்து விண்வெளியில் ஆராய்ச்சி செய்கின்றனர் இன்று 2k காலத்தில். ஆனால் 16ஆம் நூற்றாண்டில் பலியாகிக்கொண்டிருந்த பெண் சமுதாயத்தில், பின்தங்கிய நிலையில் இருந்த இவ்வுலகம் கண்ட பெண் தலைமை பற்றியே இவ்வுரை ஆரம்பம். சட்டம் பயின்று முனைவர் பட்டம் பூண்ட முதல் பெண்மணி இவர்.

ஷ்பானிஷ் நாட்டைச் சேர்ந்த ஜுலியானா மோரல் என்ற பெண், இவர் தாயை இழந்து தந்தையால் வளர்க்கப்பட்டாலும், இவரிற்கு தகுந்த கல்வியறிவை கரைத்துக் குடிக்கும் வளம் வாய்த்திருந்தது. நான்கு வயதிலேயே லத்தின், கிரேக்கம், ஹிப்ரு மொழிகளைக் கற்றார்.  வீட்டிலிருந்தே வேண்டிய கல்வியறிவைக் கற்றுப் பெற்றுக்கொண்டார். தந்தை செல்லுமிடமெல்லாம் மகளாய் கூடவே சென்றாலும் தன் சொந்தவாழ்க்கையில் கல்வியை விட்டுவிடாமல் கொண்டே சென்றார். மற்றைய குழந்தைகள் போல் மறைந்து முடங்காமல், தினசரி பேச்சு, ஆராய்ச்சி, நெறிமுறைகள் மற்றும் இசை என்று பயனுள்ள பல பணிகளில் நேரம் கழித்ததால், வாழ்வைக் கணித்தால், அதன் பயன் 12 வயதிலேயே ஆராய்ச்சிக் கட்டுரையை எழுதி வெளியிட, தொடர்ந்தது அவள் பயணம் இயற்பியலோடு மேட்டா பெளதீகம் மற்றும் சட்டம் என்று பட்டம் பயின்றாள்.

1608 ஆம் ஆண்டு தன் ஆராய்ச்சிக் கட்டுரையை பொது மக்கள் முன்பும் அங்கு, இளவரசி முன்பும் வெளியிட சிவில் சட்டத்தில் முனைவர்ப் பட்டம் இவரைத் தேடி வந்தது. அதைத் தொடந்து 30 வருடங்கள் கான்வெண்டில் பெரிய பதவியில் இருந்து, மாணவர்களுக்கு கல்வியும் புகட்டி வந்தார். பொதுமக்களிற்கு அறிவியலைப் புகட்டிய தேவதை என்று எல்லோராலும் புகழப்பட்ட ஆசிரியையாக விளங்கிய ஜுலியானா மோரல் மகளிர் தினத்தில் நினைத்துப் பார்க்க வேண்டிய பெண் சிகரமாவார். 1653 இல் இவர் நோயால் மரணிக்க உலகமே ஒருகணம் குலுங்கி அழுததாம். இன்றும் என் எழுத்தில் வாழும் இவரைப் போல வாழவேண்டும் பெண்களே வாரீர்.

எழுத்து,
மங்கை அரசி.

காதலிற்கு கற்புண்டா?

காதலிற்கு கற்புண்டா?

உப்பில்லாப் பண்டம் குப்பையிலே என்று சொல்வதைப் போன்று, கற்பில்லா உறவு எப்போதும் நிலைக்காது. அதனால்த் தான் வையகத்தில் வாழ்கின்ற மனிதர்களும் நிலையாக நீண்டநாள், துணையாக இருப்பதில்லை. அதில் காதல் மட்டும் என்ன விதிவிலக்கா? கற்பிழந்த காரணத்தால், காதலுமிங்கு கயிறறுந்த காற்றாடிபோல், காற்றிளுக்கும்  திசைகளில் வழிமாறிச் செல்கின்றது.

காதலிற்கு கற்புண்டா? என்ற கேள்வி உங்களை போல் எனக்கும் எழுந்தது. கேள்விக்குப் பதில் காண வேண்டும் என்ற வேள்வித்  தீ எனக்குள் எழ, காதல் எப்படி உருவாகுகின்றது என்ற காரணத்தை அலசினேன். விஞ்ஞானிகள் சொல்கின்றனர், காதல் ஹார்மோன்களின் கசிவு என்றும். கவிஞர்கள் சொல்கின்றனர் காதல் கடவுளின் வடிவு என்றும். ஆகவே காதல் என்பதைத் தெளிவாக விரிவாக புரிந்துகொள்ளவேண்டும் என்றால், காதல் என்பதன் வரைவிலக்கணத்தைப் பார்க்க வேண்டும். அன்பின் ஒரு வடிவமே காதல். அந்தவகையில் கவிஞர்கள் சொல்வது உண்மையாகின்றது. அன்பே இறைவன் என்று தான் எல்லா மதங்களும் சொல்கின்றன. ஆகவே காதல் கடவுளின் வடிவு தான். குறிப்பிட்ட வயதைத் தாண்டும் போது தான் காதல் மலர்கின்றது, ஆகவே விஞ்ஞானம் சொல்வதைப் போல ஹார்மோன்கள் சுரக்கும் போது காதலும் பிறக்கின்றது என்பதில் உறுதியடையலாம்.

இயற்கையாகச் சுரக்கும் ஹார்மோன்கள் எப்படி எல்லோரிடமும் சுரப்பதில்லை என்ற வினாவும், இறைவனின் வடிவம் தான் காதல் என்றால் ஏன் காதலைக் கடந்து முனிவர்கள் இறைவனைக் காண்கின்றனர் என்ற கேள்விகளும், மீண்டும் இந்தத் தலைப்பில் ஒரு சர்ச்சையை ஏற்படுத்த முனைகின்றன. காதல் என்பது குறிப்பாக ஒருவருக்கு ஒருவர் இடையில் உண்டாகும் மாய உறவு (பெரும்பான்மையாக) ஆகும். காதல் எப்படி உருவாகுகின்றது என்பதை உணர்ந்தால், ஒருவேளை இதற்கான பதில் கிடைக்கலாம்.

காதல் என்பது ஒருவகையான பாதுகாப்புணர்வு. இந்த உலகில் வாழும் மனிதர்கள் பொதுவாக ஆழ்ந்த பயத்தில் வாழ்ந்து வருகின்றனர். உலகில் வாழும் உயிரினங்களின் வாழ்க்கை முறையைப் பாருங்கள், ஒரு உயிரைக் கொன்றால்த் தான் இன்னொரு உயிர் வாழமுடியும் என்ற அமைப்பில்த் தான் இயங்குகின்றது. ஆகவே மனிதனும் அதேபோலத் தான் இருந்து, பிறந்து, பரிணாம வளர்ச்சியில் பண்பாடு அடைந்துள்ளான். இருப்பினும் ஒவ்வொரு உயிருக்குள்ளும் இருக்கும் அந்தத் தனிமை உணர்வு மற்றும் பயம் மனிதனுக்குள்ளும் உண்டு. அதை போக்கவே மனிதன் கூட்டம் கூட்டமாக வாழத் தொடங்கினான். இந்தக் குணம் மற்றய சில உயிரினங்களுக்கும் உண்டு. (உ+ம்- மாடு, ஆடு, யானை ….) ஆனால் மனிதனின் அந்த ஒற்றுமையில் ஒரு விரிசல் ஏற்பட மனிதனுக்குள் பிளவு ஏற்பட்டது. அதனால்தான் மனிதன் தன்னை பிற மனிதரிடம் இருந்து காத்துக்கொள்ளும் எண்ணத்தில் தன் கூட்டத்தில் ஒரு பிணைப்பை   ஏற்படுத்தினான்.

அந்தப் பிணைப்புத் தான் அன்பு. அதனால்த்தான் பாருங்கள், எம்மை பாதுகாப்போர் மீது அன்பு வரும். அந்த அன்பு, இரத்த சொந்தத்தில் பாசமாகவும், மற்ற சொந்தத்தில் நட்பாகவும், இரத்தக் கலப்புச் சொந்தத்தில் காதலாகவும் பெயரிடப்பட்டது. இரத்தக் கலப்புச் சொந்தம் என்பது திருமண பந்தம், ஒரு பெண்ணுக்கு தன்னைப் பாதுகாக்கும் தகுதி கொண்ட ஆணைப் பார்க்கும் போதும், ஒரு ஆணுக்கு தன்னை பாதுகாக்கும் குணாதிசயம் கொண்ட பெண்ணைப் பார்க்கும் போதும், இரத்தக் கலப்பு அன்பு உருவாகும் (ஹார்மோன் சுரக்கும்) வண்ணம் எம் உடல் பரிமாண வளர்ச்சி அடைந்துவிட்டது. எப்படி என்றால், மீனாக இருந்த உயிரினம் கடலில் உணவுப் பற்றாக்குறையால் மெதுவாக தரை நோக்கி வந்ததால் முதலையாக மாறியதை போல.

அப்படி என்றால் கற்பென்றால் என்ன? என்ற கேள்விக்கு, இலகுவாக அதன் பெயரிலேயே விடையுண்டு ( கற்பு = காப்பு ). மனிதன் தன் பயத்தைப் போக்க தனிமையைத் தவிர்த்து கூடமாக இருக்க உருவாக்கிய அன்பைப் பாதுகாக்கவே கற்பை வடிவமைத்தான். ஒரு உறவில் உள்ளவர்களுக்குள் போடப்படும் மாயை ஒப்பந்தம் தான் கற்பு. நீ என்னோடு நேர்மையாக இருக்க வேண்டும், உண்மையாக இருக்க வேண்டும், நாம் ஒற்றுமையாக இருக்கவேண்டும் என்பதே கற்பின் கொள்கைகள். ஆகவே காதலிற்கு கற்புண்டா? என்ற கேள்விக்கு பதில் தெரிந்தவர்கள், உங்களுக்கு மிகவும் பிடித்த உங்கள் மீது அன்புகொண்டவர்களிடம் அல்லது நீங்கள் மிகவும் அன்புகொண்டவரிடம் இந்தக் கட்டுரையைப் பகிர்ந்து உங்கள் அன்பைப் புரிந்துகொள்ளுங்கள்.

கற்பு ஒளிந்திருப்பது,
கருவறையில் அல்லை, – உன்
கற்பனையில்த் தான்.
நம்பிக்கை கொண்ட உறவினில் மட்டுமே,
நியாமான கற்புண்டு.

சிந்தனை சிவவினோபன்

உங்கள் ஏழாவது தலைமுறையின் தலையெழுத்து. 

உங்கள் ஏழாவது தலைமுறையின் தலையெழுத்து. 

அறிவியல் வளர்ந்து வரும் இந்த அகிலத்தில் இலகுவாக எதிர்காலத்தைக் கணித்துவிட முடிகின்றது. ஆனால் கணிப்புக்கள், கணித்தபடி நடக்குமா என்றால், இதோ வாருங்கள் பார்ப்போம் எங்கள் ஏழாவது தலைமுறை எப்படி இருக்கும் என்று.

2000ஆம் ஆண்டில் இணையத்தளம் பிரபல்யமடையும் போது எவரும் எதிர்பார்த்திகருக்கமாட்டார்கள், காசை விடப் பெறுமதியானது கணனியில் சேமிக்கப்படும் எம் தகவல்கள் என்று. ஆம் இந்த இலத்திரனியல் உலகில் எமக்கு எத்தனையோ ஆடம்பர பொருட்கள் மலிவாகவோ அல்லது இலவசமாகவோ கிடைத்துவிடுகின்றது. ஆனால் இலவசமாகக் கொடுப்பவர்கள் எப்படி சம்பாதிக்கின்றார்கள் என்று தெரிந்துகொண்டீர்கள் என்றால் எந்த இலவசத்தையும் இனிமேல் பயன்படுத்தவே மாட்டிர்கள். இலவசமாகக் ஒரு பொருள் கிடைக்கின்றது என்றால் அந்தப் பொருளை பெற்றுக்கொள்ளும் நீங்கள் அங்கே உங்களை விற்கிறீர்கள்  என்பது தான் உண்மை.

இலவசத்திற்கும் இந்தத் தலைப்பிற்கும் ஏழாவது தலைமுறைகும் என்ன தொடர்புண்டு என்று ஆச்சரியமாகப் பார்க்கும் உங்களுக்கு ஒரு அதிர்ச்சித் தகவல் காத்துள்ளது. ஏழாவது தலைமுறையில் செலவு செய்ய காசே இருக்காது என்பது தான் அந்த அதிர்ச்சி. அதை புரிந்து கொள்ள 2000ஆம் ஆண்டில் இருந்து இப்போது வரை ஏற்பட்டுள்ள மாற்றத்தை கோர்வையாக கோர்த்துக் கவனிக்க வேண்டிய கட்டாயத்தில் உள்ளோம்.

ஒரு சில அதி புத்திசாலிகளுக்கு மட்டும் தோன்றும் சிந்தனை எதுவெனில் ஏழாவது தலைமுறையில் நாமே இருக்க மாட்டோமே பின்பெதற்கு இதை எல்லாம் பற்றி நாம் சிந்தித்து சலித்துக் கொள்ளவேண்டும், என்று சிந்திக்கும் நபரில் நீங்களும் ஒருவரா? இல்லை இந்தச் சிந்தனை உள்ள நபர் உங்கள் அருகில் உள்ளாரா? இருந்தால் அவரின் காதில் திருகி அருகில் அமர்த்தி மேற்கொண்டு வாசிக்க ஆரம்பிக்கவும்.

பணம் எவ்வாறு உருவானது என்று தெரிந்து கொண்டால் பணம் எவ்வாறு அழியப் போகின்றது என்று புரிந்துகொள்ள முடியும். ஆரம்ப காலத்தில் ஒவ்வொரு நாட்டிற்கும் ஒவ்வொரு சிறப்பிருந்தது. ஒரு நாட்டில் உணவு, இன்னொரு நாட்டில் உடை, ஒரு நாட்டில் அணிகலன் இன்னொரு நாட்டில் ஆயுதம் என்று இப்படி ஒவ்வொரு நாட்டிலும் ஒவ்வொரு சிறப்புகள் இருந்தன. ஆதிகால மனிதனுக்கு அடுத்தவர் பொருள் மீது ஆசை வந்தால் உடனடியாக போர்புரிந்து ஆசைப் பட்டதை அடைந்து மகிழ்ந்தான். அதன் பின் அறிவு வளர, இருந்த சிறப்புகளை மற்றவர்களிடம் பகிர்ந்து வாழ்ந்துவந்தனர் அதனால் பொருட்களின் பெறுமதி என்று ஏதும் கிடையாது, யாருக்கு எது தேவையோ அதை பெறுவதற்கு தன்னிடம் உள்ளதைக் கொடுத்து பரிமாற்றிக் கொண்டனர் அதுவே பண்டமாற்று என்று பேர்பெற்றது. இந்தப் பாண்டமாற்றுத் தான் உலகின் முதல் வர்த்தகத்திற்கு வழிவகுத்தது. அதைத் தொடர்ந்து உலோகத்தில் மோகம் கொண்ட மனிதன் உலோகத்தை உருக்கி அதை ஒரு அடிப்படை பொருளாக்கி நாணயப் பரிமாற்றை கண்டுபிடித்தான்.  இப்படித்தான் காசு என்ற காலன் உருவானான். காலனுக்கு காலனாக வந்த புதிய பொருள் தான், கணனி என்பதை அறிந்திடாத எம் பாட்டன் செய்த அதே தவறை நீங்களும் செய்யாதிருக்கவே இந்த எச்சரிக்கைக் கட்டுரை உருவாக்கியுள்ளேன்.

ஒரு காலத்தில் உணவை மட்டும் எதிர்பார்த்து ஓடிய மனிதன் இன்று உலகில் எதை நோக்கி ஓடுகின்றான் என்று தெரியாமலேயே ஓடும் நிலை உருவாகியுள்ளது. எமக்குத் தேவையானதை நாமே உருவாக்குவோம் என்று உலகிற்கு முறையான விவசாயத்தை அறிமுகம் செய்தான் தமிழன். உலகின் மற்றைய பகுதியின் உணவுமுறையையும் தமிழர்கள் வாழும் பகுதியில் உள்ள உணவுமுறையையும் கவனித்துப் பார்த்தால் இந்த உண்மை புரிந்து கொள்ளக் கூடிய வகையில் இருக்கும்.

தமிழரும் மனிதர்கள் தானே!, மனிதர்களின் குணம் மாற்றத்தை எதிர்பார்ப்பதும், அதற்கேற்றால்ப் போல் தன்னை மாற்றிக் கொள்வதும். அதனால் தான் இன்று விவசாயிகளின் நிலை தற்கொலையில் வந்து நிற்கின்றது. ஆனால் இந்த நிலையும் இப்படியே நின்றுவிடாது, மாறிக்கொண்டே வரும் உலகில், இன்றிலிருந்து ஏழாவது தலைமுறையில் இந்த உலகில் எவர் கைகளிலும் காசிருக்காது. ஆகவே உங்கள் கொள்ளுப் பேரனுக்கோ அல்லது பேத்திக்கோ உதவ விரும்புகிண்றீர்களா? பணத்தைச் சேர்த்து வைக்காதீர்கள், படிப்பைச் சேர்த்து வையுங்கள். அதாவது ஒருவனின் கல்வி காலங்கள் தாண்டிப் பேசும் என்று தமிழர்கள் சொன்னதை இன்று விஞ்ஞானி ஆராய்ந்து கண்டு பிடித்துச் சொல்கின்றான் DNA என்று ஒன்று உண்டு அதன் மூலம் 7 தலை முறை தகவல்கள் ஒவ்வொரு மனிதனின் உடலிலும் உண்டு என்று கூறப்படுகின்றது.

அது எப்படி சாத்தியம் என்றால், இதிகாசக் கதைகளை எடுத்துக் பாருங்கள் புயபலம் பொருந்திய ஒரு ஆண்மகன் சுமார் ஆறடி உயரம் கொண்டவனாக இருப்பான் என்று கூறப் படுகின்றது. ஆனால் ஒரு மகன் தந்தையை விட உயர்வாக இருப்பான். இப்படி இருக்கையில் நீங்கள் இப்போதும் எப்படி அதே ஆறடி உயரத்திலேயே இருப்பீர்கள். குறைந்தது 5000 ஆண்டுகளுக்கு முன் நடந்த கதைகளில் உள்ளவர் 6 அடி உயரம் இருந்திருந்தால் இப்போது இருக்கும் மனிதர்கள் குறைந்தது 9 அடி உயரமாவது வளர்ந்திருக்க வேண்டாமா? ஆனால் இப்போதும் அதே உயரத்தில் இருப்பதற்கு இந்த DNA தான் காரணமாக உள்ளது. ஆகவே ஏழாவது தலைமுறையில் பிறக்கவுள்ள உங்க 6 வது தலைமுறைக்கு உதவ நினைக்கும் நீங்கள் செய்ய வேண்டிய ஒரே வேலை தினமும் ஏதாவது ஒன்றைக் கற்றுக் கொள்ளுங்கள். அதை மனதில் தெளிவாகப் பதிந்து கொள்ளுங்கள். அவை அனைத்தும் உங்க எதிர்கால சந்ததியிற்கு உதவியாக இருக்கும். இப்போது புரிகின்றதா நீங்கள் பள்ளியில்ப் படிக்கும் போது, உங்கள் வகுப்பில் இருக்கும் ஒரு சில மாணவர்கள் மட்டும் ஆசிரியர் சொன்னவுடனடியாக அதை புரிந்து சரியான பதிலை கூறுவார்கள் அதற்கு ஒரே காரணம் அவரின் DNA இல் உள்ள மூதாதயரின் அறிவு ஞானம்.

ஏழாவது தலைமுறையில் ஒவ்வொரு மனிதனின் நோக்கமும் உணவு சேர்ப்பதாக மட்டுமே இருக்கும்.  இப்போது கணனி மற்றும் இலத்திரனியல் சாதனங்கள் அனைத்தும் மனிதர்களையும் வீட்டினுள் அடைத்து வைத்து ஆட்சி செய்வதற்கு ஒரே காரணம், பணம் ஒன்று மட்டும் தான். அது எப்படி என்றால், பெரிய நிறுவனங்கள் பணம் சம்பாதிக்க உங்களிடம் தங்கள் பொருட்களை விற்கின்றது, ஆகவே விற்கும் நிறுவங்களிற்கு உங்களின் விருப்பு வெறுப்பு எது வென்று தெரிய வேண்டும் அதைத் தெரிந்துகொள்ளவே செயல்திறன் கூடிய இலத்திரனியல் சாதனங்களை உங்கள் வீடிற்கு அனுப்பியது, இப்போது உங்கள் உடலிலேயே பொருத்திவிட்டது. Smartwatch, Smartphone, Smartback, Smartcard எல்லாப் பொருட்களின் பெயரையும் பார்த்தீர்கள் என்றால் Smart என்று இருக்கும் அதாவது பொருட்கள் எல்லாம் Smart ஆகிவிட்டன  மனிதர்கள் நாம் முட்டாள் ஆகிவிட்டோம். பணம் என்ற ஒன்றின் அழிவில் இந்த அகிலமே மீண்டும் ஆரம்ப காலத்தை நோக்கிச் செல்லப்போகிறது.

கச்சாய் எண்ணெய் தீர்ந்தவுடன் தொழிற்ச்சாலையும் வாகனங்களும் அழிந்துவிடும். தாவரங்களை அழித்து வீடு கட்டும் போது வெப்பநிலை அதிகரித்து உணவும் உயிர்களும் அழிந்துபோகும், இவை அனைத்தைம் பார்த்து வேதனைப்பட்டு, மகாபாரதத்தில் தர்மருக்கு சொர்க்கத்தில் கிடைத்த தண்டனை போல இறுதியாக மனித இனம் அழியத் தொடங்கும். மனிதர்களின் எண்ணிக்கை குறைவடைய புதிதாய் பிறக்கும் மனிதர்களுக்கு விமானம் தொழிற்சாலை போன்றவை எல்லாம் DNA களின் உதவியால் மட்டுமே தெரியவரும். அப்படி உணரும் மனிதர்கள் வான்மீகி இராமாயணம் எழுதியதுபோல, அகத்தியர் ஏட்டுச் சுவடிகள் எழுதியது போல கற்பனையில் அனைத்தையும் எழுதிவைத்து விட்டுச் செல்வார்கள். அதைத் தொடர்ந்து அதிக தாவரங்கள் வளர, புழு பூச்சி தொடங்கி விலங்குகளும் உருவாக மீண்டும் பிறப்போம் 5000 ஆம் ஆண்டில் மனிதர்களாக.

வாழ்க்கை ஒரு வட்டம்.வட்டத்தின் புள்ளியே,விட்டத்தின் தொடக்கம். 
சிந்தனை சிவவினோபன்

அணுவினுள் ஒரு அகிலம்.

அணுவினுள் ஒரு அகிலம்.

மறையப் போகும் ஒரு சில காலத்தில், உலகையே திரும்பிப் பார்க்க வைத்தது மட்டுமல்லாமல், தான் இருக்கும் துறையில் தன் மறைவின் பின் 20 வருடங்கள் வரை யாராலும் நினைக்கவே முடியாத பல சாதனைகளை நிகழ்த்தி மறைந்த மாபெரும் புத்திசாலி ஸ்டீவ் ஜாப்ஸ் ( Steve Jobs ) அவர்கள் கூறும் தாரக மந்திரம் மாற்றி யோசி (Think different). ஆனால் இப்போது நான் உங்கள் அனைவருக்கும் சொல்ல உள்ள தாரக மந்திரம் “முதலில் யோசி (Think First)”. ஏனென்றால் இவ்வுலகில் சிந்திக்கவும் செயல்படுத்தவும் ஆயிரம் கோடிக்கு  மேற்பட்ட ரகசியங்கள் ஒளிந்துள்ளது. ஆனால் அதைக் கண்டு வியக்குமளவு ஆற்றல் எம்மிடம் குறைந்து கொண்டே வருகின்றது.

எங்களிடம் ஆறாவது அறிவு உண்டு, பகுத்தறிந்து பல ஞானங்களை பெற்றுக்கொண்டுள்ளோம். இன்று ஏழாம் அறிவைப் பற்றிப் பார்க்கப்போகின்றோம். பார்த்ததைக் கொண்டு சிந்தித்து பலதைக் கண்டுபிடிப்பது ஆறமறிவு. பாராமலேயே உணராமலேயே உண்மையை உணரும் ஏழாமறிவைத் தூண்டும் இந்தக் கட்டுரை சற்று குழப்பமானதாக இருப்பதற்கு வாய்ப்புண்டு ஆகவே துல்லியமாக நிறுத்தி நிதானமாக வாசிக்கவும், நானும் எளிமையாக விளங்கப்படுத்த முயல்கின்றேன்.

அணு என்றால் என்ன என்று கேட்டால் எங்கள் மனக்கண்ணில் உடனடியாக ஒரு வட்ட வடிவம் தோன்றும். இன்னும் சற்று உற்றுப் பாரத்தால் அது ஒரு கோளவடிவமாகத் தோன்றும் மற்றும் இலத்திரன்கள் சுற்றிக் கொண்டு இருப்பது போன்று தோன்றும். இவை எல்லாம் நாம் கற்றுக்கொண்ட பள்ளிப்பாடத்தால் உருவாகும் விம்பங்கள். நாம் இதுவரையும் அணுவையும் பார்த்ததில்லை அதைச் சுற்றும் இலத்திரனையும் பார்த்ததில்லை, படித்ததால் மனதில் தோன்றிய ஞானம் அதுவே ஆறாமறிவு. இந்த இலத்திரன் பற்றிய மனத் தோற்றத்தை அப்படியே நினைவில் வைத்துக்கொள்ளுங்கள்.

இப்போது அகிலத்தை எடுத்துக்கொள்வோம், பூமி என்று சொன்னால் உடனடியாக எங்கள் மனதில் ஒரு வட்ட வடிவம் அல்லது கோள வடிவம் தோன்றும், அது சூரியனை மையமாக வைத்து வட்டப் பாதையில் அல்லது நீள்வட்டப் பாதையில் சுற்றுவது போன்று தோன்றும். ஆனால் இதுவரை இந்தக் காட்சியை உங்கள் கண்கள் கண்டதுண்டா? இல்லை. வெறும் சித்தரிக்கப்பட்ட காட்சிகள் தான் விஞ்ஞானிகளாலும் நாசாவாலும் வெளியிடப்பட்டுள்ளது அவர்களுக்கு எப்படி அந்த ஞானம் வந்தது அதுவும் ஆறாமறிவு தந்த கொடைதான்.

தமிழில் பல சொற்கள் இருக்கின்றது, உதாரணத்திற்கு எடுத்துக் கொண்டால் “பார்த்தல், கவனித்தல், உற்றுநோக்கல்” இவற்றின் அர்த்தங்கள் எல்லாம் ஒரே செயலைத்தான் குறிக்கின்றது ஆனால் அதன் விளைவுகள் வேறுவிதமானது. விஞ்ஞானிகள் கவனித்து உற்று நோக்கிய படியால் பல விடயங்கள் கண்டுபிடிக்கப்படுகின்றது, நாம் அதை பார்த்துப் படிக்கின்றோம் அத்தோடு எம் செயல் முடிந்து விடுகின்றது. அது தான் பார்த்தலுக்கும் உற்று நோக்குதலுக்கும் உள்ள வித்தியாசம். அதனால்த் தான் சொன்னேன் இன்று முதல் நாம் அனைவரும் எம்முடைய தாரக மந்திரமாக “முதலில் யோசி (Think First)” என்பதை உள்வாங்குவோம் என்று. சிந்தித்தால் கண்டுபிடிக்க ஆயிரம் விந்தைகள் அகிலத்திலுண்டு. அதில் ஒன்றுதான் ஒருங்கிசைவு.

ஒருங்கிசைவு என்றால் தோற்றத்தில் ஒரே போல் இருக்காது, முற்றிலும் வேறுபட்டதாகக் கூட இருக்கலாம் ஆனால் அதன் இயல்பும் பெளதீக விளைவும் ஒன்றே போல் இருக்கும். இப்போது முதலில் சொன்னேனல்லவா ஞாபகம் வைத்துக் கொள்ளுங்கள் என்று, ஆம் அந்த அணுவைப் பற்றியும் அதைத் தொடர்ந்து பார்த்த அகிலத்தைப் பற்றியும் யோசியுங்கள். அணுவினுள் இலத்திரன் கருவை மையமாக வைத்து சுற்றுகின்றது. அகிலத்தில் கோள்கள் சூரியனை மையமாக வைத்து சுற்றுகின்றன. அணுவினுள் சக்தி இழப்பு என்பது சக்தி மட்டங்களாக வெளிப்படுகின்றன, அகிலத்தில் கோள்களும் சக்தி வட்டங்களாகத் தான் ஒன்றை விட்டு ஒன்று மிக மிக சிறிய அளவில் விட்டு விலகிக் கொண்டுள்ளன.

இப்போது உங்களுடைய ஏழாம் அறிவைத் தூண்டும் விடயத்தை நான் சொல்லப் போகின்றேன், நுணுக்கமாக உற்றுக் கவனியுங்கள். அணு மிகச் சிறிய ஒன்று அகிலம் மிகப் பெரிய ஒன்று இரண்டையும் எங்கள் கண்கள் சாதாரணமாகப் பார்க்கமுடியாது. இரண்டும் ஒத்திசைந்து போகக்கூடியது என்றால் ஆச்சரியமாக இருக்கும் ஆனால் அதுவே உண்மை. அது எப்படி சாத்தியம் என்றால், நீங்கள் ஒரு செயற்கைக்கோளில் ஏறி விண்வெளிக்குச் சென்றால் அங்கிருந்து பூமியைப் பார்க்கும் போது ஒரு சிறிய பந்து போலவே தெரியும், பூமியில் நடக்கும் மக்களோ அல்லது யானையோ அல்லது திமிங்கலமோ அல்லது அதையும் உள்வாங்கியுள்ள கடலோ எதன் அசைவும் கண்களுக்குத் தெரியாது. கண்ணுக்கு பூமி ஒரு சிறிய பந்து போலத் தெரியும். இப்போது உங்கள் வீட்டில் உள்ள ஒரு சிறிய பந்தை எடுத்துக் கொள்ளுங்கள் இந்தப் பந்து ஏன் ஒரு பூமியாக இருக்கக் கூடாது என்று யோசித்துப் பாருங்கள் ஆச்சரியப்படுவீர்கள்.

ஆம், அணுவை ஒரு அண்டவெளியாக எடுத்துக் கொண்டால் அதற்குள் பல பால் வெளிகள் அந்த பால் வெளியில் பல நட்சத்திரங்கள் அந்த நட்சத்திரத்திற்கு கோள்கள், அதில் ஒரு கோள் பூமி, அந்தப் பூமியில் மக்கள் என்று இருந்தால் எப்படி இருக்கும் என்று சிந்தித்துப் பாருங்கள். இதைக் கேட்க சற்று குழப்பமாக இருக்கும் தலை சுற்றும், சில வேளைகளில் முட்டாள்த் தனமாகக் கூட இருக்கும். ஏன் என்றால் நாம் நம்மைத் தாண்டி, புவியைத் தாண்டி செவ்வாய்க்கு கிரகத்தில் ஆராய்ச்சி செய்கின்றோம் ஆனால் எம்முள்ளேயே பல கோடி அகிலங்கள் உருவாகி மறைகின்றதோ என்ற சிந்தனை ஏற்றுக்கொள்ள முடியாததாக இருக்கும். ஆனால் நியூட்டன் புவியீர்ப்பு பற்றி நிறுவும் வரை எங்கள் தலைகளிலும் பல முறை பழங்கள் விழுந்துள்ளது, ஏன் தேங்காய் கூட விழுந்துள்ளது ஆனால் நாம் புவியீர்ப்பைப் பற்றி சிந்திக்கவோ, அதை நிறுவவோ முயலவில்லை. ஆகவே சிந்திக்கத் தொடங்குங்கள், எங்கள் முன்னோர்கள் எத்தனையோ பல ஆற்றலைக் கொடுத்துவிட்டுச் சென்றுள்ளார்கள். அதை தூசிதட்ட, யோசிக்க ஆரம்பியுங்கள்.

கிருஷ்ண பகவான் தன் திருவாயைத் திறந்து அகிலத்திக் காண்பித்தார், சிவன் பிரமாண்ட உருவெடுக்க அவருள் அரக்க குரு அனைத்து அகிலங்களையும் கண்டார் என்ற கற்பனைக் கதைகளுக்கு, யாரோ ஒரு ஆங்கிலேயர் வந்து உயிர் கொடுத்து நிறுவுவதற்கு முன் நாமே சாதிப்போம்.

கற்பனைகள் எல்லாம் விற்பனைக்கு வந்தால்,

சொப்பனத்தின் விலைக்கு உலகில் நிகரேது?

சிந்தனை சிவவினோபன்

பறக்கும் தட்டில் இருக்கும் விஞ்ஞானம்

பறக்கும் தட்டில் இருக்கும் விஞ்ஞானம் 

வாருங்கள் நண்பர்களே இன்று நாம் பறக்கும் தட்டில் ஏறி ஒரு பயணம் செய்வோம். உங்களுக்கு மறக்க முடியாத ஒரு விசித்திர அனுபவத்தைக் கொடுக்கவுள்ள இந்தப் பயணத்திற்கு, விண்வெளியின் விந்தை என்று பெயர்வைப்போம். விண்வெளியின் விந்தைகளில் ஒன்று தான் இந்த பறக்கும் தட்டு. உலகில் விசித்திரமான பல தருணங்கள் உண்டு, வாழும் உயிரினங்கள் அனைத்திற்கும் விதிமுறைகள் உண்டு ஆங்காங்கே விதிவிலக்காய் உள்ள ஒரு சில பொருட்களில் ஒன்று தான் இந்த பறக்கும் தட்டு.

பொருட்கள் எல்லாம் ஏன் மேலிருந்து கீழே வீழ்கின்றது என்று கேள்வி எழுந்த போது பூமிக்கு புவியீர்ப்பு விசையுண்டு என்று கற்றுக் கொண்டான் மனிதன். அந்தப் புயீர்ப்பை எதிர்த்து விசை கொடுத்தால் பறக்கலாம் என்று மனிதன் கண்டுபிடித்தான். ஆனால் இந்தக் கண்டு பிடிப்பிற்க்கெல்லாம் ஒரு முன்னோடி தான் இந்த பறக்கும் தட்டு. மனிதன் பறவையைப் பார்த்து விமானம் கண்டுபிடித்தான் என்று நாம் அனைவரும் எண்ணிக்கொண்டு இருக்கின்றோம் ஆனால், மனிதன் பறவையைய் பார்த்து பறக்க வேண்டும் என்று ஆசைப்பட்டதுடன், அதற்காக கைகளில் இறக்கையை இணைத்து மலைகளில் இருந்து குதித்து முயன்று மடிந்தான். அப்படி இருக்கும் போதுதான் அவன் கண்களுக்கு பறக்கும் தட்டுக்கள் தெரிந்துள்ளது. இதற்கான ஆதாரங்களாக பல குகை ஓவியங்கள் உண்டு.

இன்று விமானம் உருவாக்குவதற்கு முக்கிய அடிப்படையே பறக்கும் தட்டுக்கள் தான். ஒரு வாகனத்தை உருவாக்கி அதற்குள் அமர்ந்து கொண்டு அந்த வாகனத்தைப் பறக்க வைக்க முடியும் என்று அறிவியலைக் கொடுத்தது இந்தப் பறக்கும் தட்டுக்கள் தான். இன்று விமானம் பறக்க வேண்டும் என்றால், ஓடுதளத்தில் வேகமாக ஓடவேண்டும் அவ்வாறு ஓடி தன் பாரத்திற்கு சமமான வளித்துணிக்கையின் அழுத்தத்தைப் உருவாக்கும் போது வானில் பறக்கும் நிலையை உருவாக்கிக் கொள்ளலாம். அல்லாவிட்டால் உலங்கு வானூர்தி(Helicopter) தன்னுடைய இயங்கும் இறக்கைகளால் சுற்றியுள்ள வளித்துணிக்கைகளை இழுத்து கீழ்நோக்கு அழுத்தும் போது ஏற்படும் அழுத்தத்தால் தன்னுடைய பாரத்தை பூச்சியம் ஆக்கி வளிமண்டலத்தில் மிதக்கும் தன்மையை உருவாக்கி அதன் பின் இரண்டாவது இறக்கையைப் பயன்படுத்தி பயணிக்க ஆரம்பிக்கின்றது. இவையெல்லாம் மனிதன் கண்டுபிடித்த பறக்கும் சாதனங்களில் உள்ள விஞ்ஞானம் ஆனால் பறக்கும் தட்டில் இதெல்லாம் கிடையாது. பறக்கும்தட்டுக்கள் ஓடுதளத்தில் ஓடி எழுந்து பறப்பதில்லை, பறக்கும் தட்டில் மின்விசிறிகளும் இல்லை. அது ஒரு மூடிய கோளம் போன்றது. அதுவும் முழுமையான கோளம் அல்ல. இரண்டு சாப்பாட்டுக்கு கோப்பைகளை இணைத்தால் ஒரு உருவம் ஏற்படுமே அது போன்ற அமைப்பில் இருக்கும் ஒரு பறக்கும் சாதனமே பறக்கும் தட்டு.

இந்தப் பறக்கும் தட்டு எப்படிப் பறக்கின்றது என்ற ஆராய்ச்சியில் பல விஞ்ஞானிகள் ஈடுபட்டு வருகின்றனர். அந்தத் தொழில்நுட்பம் மட்டும் கைகூடினால், மனிதன் செலவில்லாமல் பயணத்தை மேற்க்கொள்ளும் தருணம் உருவாகும். அதற்க்கு பறக்கும் தட்டை யார் உருவாக்கினார்கள்? எங்கிருந்து வருகின்றது? என்ற அறிவியலைக் கண்டு பிடிக்க வேண்டும். பறக்கும் தட்டு என்றவுடனேயே அடுத்த நொடி நினைவிற்கு வருவது வேற்றுகிரக வாசிகள். ஸ்டீபன் ஹக்கிங்ஸ் (Stephen Hawking) உட்பட பல விஞ்ஞானிகளின் எதிர்வுகூறலின் படி பூமியில் உள்ள மனிதர்களை விட பல மடங்கி அறிவியலில் சிறந்த வேற்றுகிரக வாசிகள் அவ்வப்போது பூமி வந்து செல்கின்றார்கள் என்பது ஆங்காங்கே தகவலாகக் கசிந்தாலும். இதுவரை எந்த ஆதாரங்களும் சமர்ப்பிக்கப் படவில்லை.

1911 இல் காந்தவியல் மட்டும் கதிர்வீச்சுப் பற்றி ஆராய்ச்சி செய்த டெஸ்லா என்ற விஞ்ஞானி ஒரு பறக்கும் சாதனத்தை வடிவமைக்கின்றார் அது அச்சசல் பறக்கும் தட்டுப் போலவே இருக்கின்றது. அந்த அறிவியலை மேற்கொண்டு விரிவாக வடிவமைக்க அனுமதி மறுக்கப்பட்டு அவரின் கண்டு பிடிப்புக்களை முடக்கவும் செய்தாரகள் அக்காலத்தைச் சேர்ந்த அரசியல் ஞானிகள். இப்போது பறக்கும் தட்டு என்றால் என்ன அது எப்படி உருவாகி இருக்கும் என்று ஒரு விரிவான பார்வையை யோசிப்போம் வாருங்கள்.

எம் உலகம் எண்ணுக்கடங்காக கால வயதைக் கொண்டது அதில் மனிதர்கள் நாம் இப்போது அறிவுஞானம் பெற்று, சில ஆயிரம் வருடங்களைத் தான் ஊகித்துக் கண்டு பிடித்து வைத்துள்ளோம். ஆகவே இராட்சத உயிரினங்கள்(டைனோசர்) வாழ்ந்த காலத்தில் என்ன நடந்தது அதற்கு முன் என்ன நடந்தது என்று தெரிந்து கொள்ள முடியாத சோக நிலையில் உள்ளோம். இவற்றை மனிதன் வாழ்ந்த குகை ஓவியங்கள் எஞ்சியுள்ள எச்சக் கூறுகளின் உதவியுடன் கற்பனை வடிவமாக கணித்து வருகின்றோம். உதாரணத்திற்கு இப்படி யோசித்துப் பாருங்கள் ஒரு 10 பேர் கொண்ட குழு விண்வெளிக்குச் செல்கின்றது சென்ற அனைவரும் மிகப் பெரும் அறிவியல் மேதைகள். அவர்கள் சென்ற அந்தக் கால கட்டத்தில் உலகில் மாபெரும் அழிவு ஏற்பட்டு உலகமே அழிந்துவிட்டது என்று வைத்துக் கொள்வோம், ஒரு 10 வருட காலம் கழித்து கடின முயற்ச்சியின் பயனாக மீண்டும் பூமிக்கு வருகின்றார்கள் ஆனால் பூமியில் அனைவரும் அழிந்து விட்டார்கள். ஒரு சில காட்டுவாசிகள் தான் எஞ்சியுள்ளார்கள் என்றால், அவ்வாறு எஞ்சியுள்ள காட்டுவாசிகளுக்கு விண்ணில் இருந்து வந்தவர்களை பார்க்கும் பொது ஆச்சரியமாக இருக்கும் அவர்களை ஓவியமாகத் தீட்டி வைப்பார்கள். விண்வெளி ஆராய்ச்சி முடித்து மீண்டும் பூமி திரும்பிய அந்த விஞ்ஞானிகளுக்கு அறிவியல் ஞானம் இருந்தாலும் அதை செயல்படுத்த போதிய உலோகங்கள் மட்டும் சாதனைகள் இல்லாததால் தங்கள் விஞ்ஞானக் குறிப்புக்களை வாய்வழியாகவும் புத்தகங்களாகவும் எழுதி வைப்பார்கள். கால ஒட்டத்தில் 2000 அல்லது 3000 ஆண்டுகளுக்குப் பின் வரும் தலைமுறைகள் அதை ஆதாரமாக வைத்து கண்டு பிடிப்புக்களை செய்யும். இப்போது புரிகின்றதா எப்படி பறக்கும் தட்டுக்கள் உருவாகியிருக்கும் என்று? இவை அனைத்தும் எம் முன்னோரின் கண்டுபிடிப்புக்களாக இருப்பதற்கு பல வாய்ப்புக்கள் உண்டு ஆகவே எம்முடைய பழமையை நாம் மறக்காமல் மறைக்காமல் தேடிக் கற்றுக்கொள்ள வேண்டும்.

முன்னோரின் விஞ்ஞானத்தை முயன்று கற்றுக்கொள்வோம்.சிந்தனை சிவவினோபன்

Why April Fool? Why April 1st?


எதற்காக இந்த முட்டாள்கள் தினம் என்று சிந்திப்பவர்கள் தான் புத்திசாலி, அப்படிச் சிந்தித்து மற்றவர்களை முட்டாள்களாக்குவதை விட நாம் புத்திசாலியாக இருக்க வேண்டும் என்று எப்போது எண்ணத் தொடங்குகின்றோமோ அன்று நாம் அனைவரும் அதி புத்திசாலி ஆகிவிடுவோம்.

இல்லாவிட்டால் நாம் 10 பேரை முட்டாள்கள் ஆக்கும் அதே நேரம் எம்மை 1000 பேர் முட்டாளக்கிவிட்டுச் சென்று விடுவார்கள். ஆனாலும் என் இந்த முட்டாள்கள் தினம் உருவானது என்ற கதை ஒரு சுவாரசிக்கமான கதை தான். வாருங்கள் அந்தக் கதையைப் பார்ப்போம்.

இதற்கெல்லாம் முக்கிய காரணம் நாள்காட்டியில் ஏற்படுத்திய மாற்றமே ஆகும். அதாவது முன்பிருந்த நாள்காட்டியில் April மாதம் முதலாம் திகதி தான் வருடப் பிறப்பு என்று ஒரு முறையை அறிமுகப் படுத்தினார்கள். இன்று கூட தமிழ் நாள்கட்டியில் April 14 அல்லது 15 நாள் அதாவது தமிழுக்கு சித்திரை வரும் முதலாம் திகதி வருடப்பிறப்பு என்று கொண்டாடுவோம் தெரியும் தானே. அதே போன்று கொண்டாடினார்கள் ஒரு குழுவினர்கள். ஆனால் இன்னுமொரு குழுவினர்கள் அதைத் தவறு என்று சொல்லி தை மாதம் முதலாம் திகதி தான் வருடப் பிறப்பு என்றனர். அதனால் இரண்டு குழுவினருக்குள்ளும் பிரச்சனை மூண்டது அதன் விளைவாக இந்தப் பிரச்னையை முடித்து வைக்க, ஒரு வருடத்தில் இரண்டு வருடப் பிறப்பைக் கொண்டாடத் தொடங்குவோம் என்று முடிவுக்கு வந்தனர். அதே போல் அனைவரும் தை மாதம் முதலாம் திகதி ஒற்றுமையாக வருடப் பிறப்பை கொண்டாடினர். அதன் பின் சித்திரை முதலாம் திகதி வந்தது. அந்த நாளை வருடப் பிறப்பாக கொண்டாடுவோம் என்று இரண்டு குழுவினரும் முடிவெடுத்து ஒரு பகுதியில் கொண்டாட இடத்தை ஏற்படு செய்து ஒன்று கூடுவோம் என்று கூறிவிட்டு பங்குனி 31 ஆம் திகதி எதிராளிக்கு குழுவினர்கள் அந்த பகுதிக்கே வராமல் அனைவரும் வீட்டுக்குள்ளேயே இருந்து விட்ட்னர்.

இதனால் கொண்டாடுவோம் என்று வந்த குழுவினர்கள் ஏமாந்து பொன்னார், சோகமாக வீடு திரும்பியபோது அவர்களை பார்த்தவர்கள் எல்லாம் நீங்க முட்டாள்கள் ஆகிவிடதீர்கள் என்று சொல்ல, அதுவே காலப் போக்கில் சித்திரை 1 ஆம் திகதி முட்டாள்கள் தினம் ஆனது. ஒரு இனத்தை அவமானப் படுத்தும் இந்த நாள் உங்களுக்கு சந்தோஷமளிக்கும் நாளா என்று நினைத்துப் பாருங்கள். வருகின்ற வருடம் கொண்டாட வேண்டுமா என்று சிந்தியுங்கள்

உங்கள் மனதில நல்லதை விதைத்த இந்த விம்பத்தை உங்கள் விம்பமாக எண்ணி உங்கள் நண்பர்களுடன் பகிருங்கள்.
நன்றி வணக்கம்.

நீ யார்?

மரம்,
வேடனின் கையில் வில்லம்பு,
குருடனின் கையில் விழிக்கம்பு.

சிந்தனை சிவவினோபன்