5 நொடி ஒழுக்கம்.

நாம் அனைவருமே ஹாலிவுட் படங்களை பார்ப்பது உண்டு. அதில் சூப்பர் பவர் கொண்ட கதாநாயகர்கள் நடிக்கிறார்கள். ஒரு முறை யோசித்து பாருங்கள்! எங்களிற்கு ஒரு சூப்பர் பவர் கிடைத்தால் எப்படி இருக்கும்?

இந்த ஐந்து நொடி ஒழுக்கம் என்பது உங்களுக்கு ஒரு மிக பெரிய சூப்பர் பவரை தருவதற்கான ஒரு வழிமுறையாக அமைந்திருக்கப் போகின்றது. இதை கண்டுபிடித்தவர் யார்? அதை எவ்வாறு கண்டுபிடித்தார்? என்பதை பார்ப்பதற்கு முன்பாக இந்த சூப்பர் பவரை நாம் எங்களுடைய வாழ்க்கையில் எவ்வாறு பயன்படுத்திக் கொள்ளலாம் என்பதை முதலில் பார்ப்போம் வாருங்கள்.

இந்த சூப்பர் பவரை உங்களுக்குத் தரப் போவதும் ஒரு மிகப் பெரிய ஞானி .அவர் யார் தெரியுமா? பக்கத்தில் இருக்கின்ற தொலைபேசியை எடுத்துக்கொள்ளுங்கள்! அதில் கேமராவை ஓப்பன் பண்ணுங்கள்! Front Cameraவை ஓப்பன் பண்ணுங்கள் இப்போது யார் தெரிகின்றார் அதில்? ஆம் நீங்கள் தான் உங்களுடைய ஞானி. உங்களிற்கு இந்த சூப்பர் பவரை கொடுக்கப் போவது நீங்கள் தான். ஆச்சரியமாக இருக்கின்றதா? வாருங்கள் விரிவாக பார்ப்போம்

அதைப் பார்ப்பதற்கு முன்பாக உங்களிடம் ஒரு கேள்வி. 5,4,3,2,1…

கேள்வி என்னவென்றால் உங்களுடைய வாகனத்தில், காராக இருக்கட்டும் பைக்காக இருக்கட்டும் சைக்கிள்ளாக இருக்கட்டும் அதற்குள் ஒரு பிரேக் இருக்கின்றது! இந்த பிரேக் என்ன தொழிற்பாட்டை செய்கிறது என்று உங்களுக்கு தெரியுமா? இந்தக் கேள்வியை ஒரு பள்ளிக்கூடத்தின் அதிபர் வகுப்பறையில் கேட்கின்றார். அவ்வாறு அவர் கேட்கும் பொழுது அங்கு இருக்கின்ற ஆசிரியர்கள் உட்பட மாணவர்கள் அனைவருமே சொல்லுகின்றார்கள் வாகனத்தின் வேகத்தை குறைப்பதற்காக இந்த பிரேக் இருக்கின்றது என்று சொல்கின்றார்கள். ஒரே ஒரு மாணவன் மட்டும் எழுந்து சொல்லுகின்றான் வாகனத்தின் வேகத்தை கூட்டுவதற்காக இந்த பிரேக் இருக்கின்றது என்று சொல்லுகின்றார். அதிபர் சொல்லுகின்றார் மிகச் சரியான விடை இதுதான். மிகச் சரியான விடை. வாகனத்தில் பிரேக் இருக்கின்றது என்ற தைரியத்தில்தான் வாகனத்தை மிக வேகமாக ஓட்ட முடிகிறது. எவ்வளவு வேகமாக ஓடினாலும் வாகனத்தை நிறுத்த முடியும் என்கின்ற நம்பிக்கைதான், எமக்கு வாகனத்தை ஓட்டுவதற்கான தைரியத்தைக் கொடுக்கிறது. அதேபோன்றுதான் உங்களுடைய வாழ்க்கையில் நீங்கள் பயணித்துக் கொண்டிருக்கிறீர்கள். அந்த பயணத்தை வேகமாக செய்ய வேண்டும் என்றால், உங்களுடைய வாழ்க்கையை தேவையான இடத்தில் நிப்பாட்டுவதற்கான பிரேக் உங்களுடைய கையில் இருக்க வேண்டும். உங்களுடைய கையில் அந்த பிரேக் இருக்கின்றதா? அந்த பிரேக்காக தான் இந்த ஐந்து நொடி ஒழுக்கம் அமைந்து இருக்கப்போகின்றது.

மிக இலகுவான செயல்பாடுதான். எப்படி செய்ய வேண்டும் என்றால், நீங்கள் ஒரு காரியத்தை செய்யப் போகிறீர்கள் என்று நினைத்தீர்கள் என்றால்,

5,4,3,2,1… என்று மிக வேகமாக சொல்லிவிட்டு அந்த காரியத்தை செய்ய ஆரம்பித்தீர்கள் என்றால், அந்த காரியத்தை மிகத் தெளிவாக செய்து முடிப்பீர்கள். ஏன் இந்த இலக்கத்தைச் சொல்ல வேண்டுமென்றால், சில நாட்களில் உங்களுக்கு மிக அலுப்பாக இருக்கும். உதாரணத்திற்கு நீங்கள் கடினமாக ஒரு வேலையை செய்து விட்டு வந்து கதிரையில் அமரும் போது, தண்ணீர்த் தாகம் எடுக்கின்றது. எழுந்து சென்று தண்ணீர் குடிப்பதற்கு சோம்பலாக இருக்கின்றது. உங்களுடைய மனது சொல்லுகின்றது, “நீ கடினமாக உழைத்து இருக்கின்றாய். எழுந்து சென்று தண்ணீர் குடிப்பதை விட, படுத்து நித்திரை கொள்ளு!” என்று சொல்கின்றது.

உங்களுடைய உள்ளுணர்வு சொல்லுகின்றது, உடலுக்கு தாகம் ஏற்படுகின்றது தண்ணீர் குடி! என்று சொல்கின்றது. இப்போது மனம் சொல்வதைக் கேட்பதா? உள்ளுணர்வு சொல்வதை கேட்பதா? இரண்டுமே சரியானதுதான். ஆனால் எது மிகச் சரியானது என்பதை நீங்கள் எடுத்துக்கொள்ள வேண்டும். தாகத்திற்கு தண்ணீர் குடிப்பது என்பது, உடல் ஆரோக்கியத்திற்கானது, ஆகவே அதைத்தான் நீங்கள் எடுத்துக்கொள்ள வேண்டும் என்றால், மனதுக்கு ஒரு ஐந்து நொடி பிரேக் போட முடிந்தால், அந்த ஐந்து நொடியில் நீங்கள் உங்களுடைய தாகத்தை தீர்த்து விடுவீர்கள். அந்த ஐந்து நொடி பிரேக் போடுவதற்கு தான், இந்த ஐந்து நொடி ஒழுக்கம் பயன்படுகின்றது. எவ்வாறு செய்யலாம்?
5,4,3,2,1… என்று இலக்கத்தை எண்ணி

உடனடியாக ஒன்று என்று சொல்லி முடிக்கும் பொழுது நீங்கள் கதிரையில் இருந்து எழுந்தீர்கள் என்றால், அதே வேகத்தில் நீங்கள் சென்று தண்ணீரை குடித்துவிட்டு வந்து அமர முடியும். இப்போது உங்களுக்கு ஒரு சந்தேகம் ஏற்படும் நான் சாதாரணமாக எழுந்து கொள்ள வேண்டும் என்று நினைத்தால் என்னால் எழுந்து கொள்ள முடியவில்லை. இவ்வாறு 5 லிருந்து 1 வரை எண்ணினால் மட்டும் என்னால் எழுந்து கொள்ள முடியுமா என்று ஒரு சந்தேகம் ஏற்படும்? இதற்குத்தான் இந்த ஐந்து நொடி ஒழுக்கத்தை உருவாக்கிய Mel Robbins சொல்லுகின்றார்.

தான் 41 வயது வரை மிகவும் கடினமான ஒரு வாழ்க்கையிலிருந்தேன், போதைக்கு அடிமையாகி, உடல் பருமன் அடைந்தது, என் வியாபாரத்தில் நட்டங்கள் ஏற்பட்டது. வாழ்க்கையில் என்ன செய்வதென்றே தெரியாமல் இருந்த அந்த வேளையில், தான் ஒரு றாக்கட் ஏவுகணை எழுகின்ற செயல்பாட்டை பார்த்தேன். அதில் 5,4,3,2,1… என்று சொன்னவுடன் அந்த றாக்கட் மிக வேகமாக பறந்தது.

என் மனதுக்குள் ஒரு கேள்வி எழுந்தது நானும் இந்த றாக்கட்டை போன்று மிக வேகமாக செயல் பட்டால் எப்படி இருக்கும்? எனக்கும் ஒரு சக்தி கிடைத்தால் எப்படி இருக்கும்? என்ற கேள்வி ஏற்பட்டது. நான் மறுநாள் காலை எழுந்து கொள்வதற்கு முன்பாக 5,4,3,2,1… என்று சொல்லி என்னை நானே ஒரு றாக்கட் ஆக நினைத்துக்கொண்டு மிக வேகமாக எழுந்தேன், அதுவரையும் விடியற்காலையில் எழுந்து கொள்ள முடியாத எனக்கு அது ஒரு மிகப் பெரிய சக்தியைக் கொடுத்தது. நான் விடியற்காலையில் எழுந்து விட்டு, அதற்குப் பின்பாக ஒவ்வொரு செயல்பாடுகளை செய்யும் பொழுது ம் இவ்வாறு என்னை நானே ஒரு றாக்கட் ஆக நினைத்து 5 லிருந்து 1 வரை எண்ணி நான் செயல்பட்டேன்.

என் செயல்கள் அனைத்தும் வெற்றி அளித்தது. ஒரு சில மாதங்களிலேயே என் போதைப்பழக்கம் விட்டுப் போனது. உடல் பருமன் குறைந்து. வியாபாரத்திலும் நல்ல வெற்றி கிடைத்தது. நான் இன்று நல்ல ஒரு வாழ்க்கை நிலையில் இருக்கின்றேன், என்று சொல்கின்றார். ஏன் இவ்வாறு நடக்கின்றது என்றால் 5 லிருந்து 1 வரை எண்ணும்பொழுது, அதற்குப் பின்பு எண்ணுவதற்கு எந்த இலக்கமும் கிடையாது.

0 உடன் இலக்கங்கள் மனதில் முடிந்துவிடுகின்றன. ஆகவே இதற்குப் பின்பு இயங்குவதைத் தவிர வேறு வழியில்லை. எழுந்து கொள்ள வேண்டும் என்கின்ற கட்டாயம் உங்கள் மனதில் ஏற்படுகின்றது. அந்த இடத்தில் நீங்கள் உடனடியாக எழுந்து கொள்கின்றீர்கள். அதுமட்டுமில்லாமல், 5,4,3,2,1… என்று சொல்லும் பொழுதே, ஒரு சிறிய அழுத்தத்தைச் சேர்த்து நீங்கள் சொல்லிக் கொண்டு வரும் பொழுது, அந்த வேகம், உங்களை இலக்கம் ஒன்று சொல்லும் பொழுதே இயங்க வைக்கின்றது. அதனால் நீங்கள் மிக வேகமாக உடலில் ஒரு அசைவு ஏற்படுத்துகின்றீர்கள். உடனடியாக உங்களுக்கு ஒரு Motivation கிடைக்கின்றது. அந்த சக்திதான் உங்களை அடுத்த காரியத்தை செய்ய வைக்கின்றது. படிக்க விரும்பினால் படிக்கலாம், வேலை செய்ய விரும்பினால் வேலை செய்யலாம், எதை செய்ய விரும்புகின்றீர்களோ அதை செய்வதற்கான தைரியத்தையும் சக்தியையும் இந்த ஐந்து நொடி ஒழுக்கம் உங்களுக்கு கொடுக்கின்றது. இது உலகத்தில் இருக்கின்ற பலரால் கையாளப்பட்டு, தங்கள் வாழ்க்கையில் வெற்றி அளித்த ஒரு முறையாக பலரும் தங்கள் வெற்றிப் பயணத்தில் பதிவேற்றி வருகின்றார்கள். நீங்களும் உங்களுடைய வாழ்க்கையில் முயற்சி செய்து பாருங்கள். உங்கள் வாழ்க்கையின் வெற்றி பயணத்தில் இந்த ஐந்து நொடி ஒழுக்கம் ஒரு மிகப்பெரிய மைல்கல்லாக இருக்கும் என்பதில் எனக்கு மிகப்பெரிய நம்பிக்கை இருக்கின்றது?


சிந்தனை & எழுத்து,
சி.சிவவினோபன்

Leave a Comment

Your e-mail address will not be published. Required fields are marked *