சன நடமாட்டமற்ற நிலையில் வீதி வெறிச்சோடி கிடந்தது. மதிவதனியை அணைத்தபடி மணிவண்ணன் கார் பின் சீட்டில் அமர்ந்திருந்தான். மணியண்ணன் காரை ஓட்டிக் கொண்டிருந்தான். எதிரில் போலீஸ் வண்டி இவர்களை மறித்தது. “ஊரடங்கு வேளையில் எங்கே போகின்றீர்கள்? கீழே இறங்குங்கள்.” அதிகாரமாக கட்டளையிட்டார் போலீஸ்காரர். மணி அண்ணன் கீழே இறங்கி “ஐயா பிள்ளைத்தாச்சி பொண்ணு வலியில் துடிக்குது, அவசரமா ஆஸ்பத்திரிக்கு போறம்.” மணியண்ணன் சொல்லி முடிக்க முதலே “சரி சரி போங்க போங்க” என்று போக அனுமதித்தார் அந்த போலீஸ்காரர்

அவர்கள் வேகமாக ஆஸ்பத்திரியினுள் நுழைந்த போது ஆஸ்பத்திரியே ஆள் அரவமற்று இருந்தது. யார் என்னவென்று கேட்க ஆளில்லாததால், மணிவண்ணன் மதிவதனியை நேரே பிரசவ வார்டுக்கே கொண்டு வந்து சேர்த்து விட்டான். மனைவி படும் வேதனையைப் பார்த்து தாங்க முடியாது மணிவண்ணன், குதிரை வேகத்தில் தன் வேகத்தை கூட்டி மனைவியை அழைத்து வந்து விட்டான். வந்துதான் என்னபலன் அவனுடைய மனைவியை கவனிக்க அங்கு யாரும் இல்லையே! என்ன செய்வது என தெரியாமல் புழுவாகத் துடித்தான்.
அங்கும் இங்கும் ஓடி ஓடி, யாராவது மருத்துவர்களோ தாதிமார்களோ தென்படுகின்றனரா என பார்த்தான். மணி அண்ணன் இவ்விடத்திலே அனுபவசாலி. அடிக்கடி நோயாளிகளை வைத்தியசாலையில் கொண்டு வந்து சேர்ப்பவராதலால், வைத்தியசாலையில் வேலை செய்பவர்களை ஓரளவு தெரிந்து வைத்திருந்தார். ஆதலால் மணி அண்ணன் சிவில் உடையில் ஒரு தாதியை தேடி கூட்டி வந்தார். “அண்ணா இவ இந்த ஆஸ்பத்திரியில் தான் தாதியா வேலை செய்கின்றார், வதனி அக்காவுக்கு உதவி செய்ய கூட்டி வந்து இருக்கின்றேன்” மணி அண்ணன் கூறி முடிக்க முதலிலேயே “ஐயையோ அதெல்லாம் முடியாது வேலைநிறுத்த போராட்டம் நடக்குது ,ஊழியர்கள் யாரும் வேலை செய்வதில்லை என சத்தியம் செய்யாத குறையாக சபதம் எடுத்துள்ளோம். அது தெரியும் தானே உங்களுக்கு?” என்று சொல்லிய வண்ணம் அவ்விடத்தை விட்டகல முயன்றாள். தயவுசெய்து மிஸ் எப்படியும் இந்த உதவி செய்யுங்கோ. என்று கையெடுத்து கும்பிட்டான் மணிவண்ணன்.

முடியாது எங்களுடைய கோரிக்கை நிறைவேறும் வரை நாங்கள் வேலை செய்ய மாட்டோம். உறுதியாக தாதி கூறிய போது அவளின் காலில் விழுந்து தொட்டுக் கும்பிட்டு கெஞ்சி கேட்டான், அந்த பாசமிகு கணவன். “ஆ ஐயோ அம்மா” மனைவியின் அலறல் சத்தம் அவனை வதைத்தது மனைவிக்கு எந்த உதவியும் செய்ய முடியாத கையாலாகாத கணவனாக அவன் நின்று கொண்டிருந்தான். நீந்தத் தெரியாத ஒருவன் நட்டாற்றில் தத்தளிக்கும் போது கையில் கிடைத்த மரக்கிளையை பற்றி பிடிப்பது போன்ற நிலையில் தாதியின் காலை பிடித்து கெஞ்சிக்கொண்டே இருந்தான்.
அந்தப் பெண்ணின் அலறல் சத்தம் அந்த தாதியின் மனத்தை இழக வைத்தாலும், அந்தக் கணவனின் கெஞ்சல் தாதியின் மனதை உருக வைத்து விட்டது. அவள் உடனடியாக செயல்படத் தொடங்கிவிட்டாள். மருத்துவத் தாதி செய்யும் வேலையை, சாதாரணமான தாதி அவள் செய்யும் போது மிகவும் சிரமப்பட்டாள். பிரசவமும் மிகவும் சிக்கலாக இருந்தது. குழந்தை வெளிவருவதில் தாமதம் ஏற்பட்டது. அந்த பெண்ணிடம், அழுவதை நிறுத்திவிட்டு குழந்தை வெளியே வருவதற்கு ஒத்துழைக்கும் படி கேட்டுக் கொண்டாள் அந்தத் தாதி, அந்தப் பெண் அலறுவதை நிப்பாட்டியது மட்டுமல்லாமல், மயக்கத்தில் ஆழ்ந்து விட்டாள்.

செய்வதறியாது திகைத்த தாதி, போதிய அனுபவம் இல்லாததால் மிகவும் சிரமப்பட்டாள். ஆண்டவனை நினைத்து மன்றாடிய வண்ணம் தனது முழு முயற்சியையும் கொடுத்தாலும், என்ன செய்வது என்று தெரியாமல் அவதிப்படடாள். வெளியிலே மனைவியின் கதறல் சத்தம் கேட்க கேட்க தீயில் விழுந்த புழுவாக மணிவண்ணன் துடித்துக் கொண்டிருந்தான். திடீரென அலறல் சத்தம் நின்றது.
அவனது இதயம் ஒரு நிமிடம் துடிப்பை நிறுத்தியது போல் உணர்ந்தான். என் மனைவிக்கு என்னால் எந்த உதவியும் செய்ய முடியவில்லையே என்று கைகளை பிசைந்து கொண்டான். தன்னையே நம்பிய தன் மனைவிக்கு உதவ முடியாத தனது கையாலாகாத தனத்தை எண்ணி கடவுளே கடவுளே என அலறினான். மனிதன் இயலாமையின் போது கடவுளிடம் சரணடைவது சகஜம்தானே மணிவண்ணனும் கைகுவித்து கும்பிட்டு கடவுளிடம் கேட்டு மன்றாடிக்கொண்டிருக்கும் போது தான், பிறந்த குழந்தை அழும் சத்தம் கேட்டது.
கடவுளே நன்றி! என்று திரும்பவும் கைகுவித்தான். பெரும் சிரமத்தின் பின் குழந்தையை வெளியில் எடுத்தாள். குழந்தையை குளிக்க வைத்து, உரிய இடத்தில் படுக்க வைத்த பின், தாய்க்கான மருந்தை ஊசி மூலம் ஏற்றி தாய்க்கான சிகிச்சையையும் சரிவரச் செய்து முடித்தாள். வெளியே வந்த தாதி உங்களுக்கு பெண் குழந்தை பிறந்துள்ளது என்றாள். நான் பார்க்கலாமா? என மணிவண்ணன் கேட்ட போது சிறிது நேரம் பொறுங்கோ என திரும்பவும் உள்ளே சென்றுவிட்டாள்.

தாதியின் மனதில் இனம் தெரியாத உணர்வுகள் போதிய அனுபவம் இல்லாமல், பிரசவம் பார்த்தது, குழந்தை வெளிவரும் சமயத்தில் தாய் மயங்கியது, பெருத்த சிரமத்துடன் குழந்தையை வெளியில் எடுத்தது தாய்க்கான மருந்தைக் கொடுத்து தாயையும் சேயையும் சுகமாக வைத்திருப்பது எல்லாம் தன்னுடைய வெற்றி தான், ஆனாலும் சுகாதார ஊழியர்களின் சங்கத்தினால் ஏற்படுத்தப்பட்ட வேலைநிறுத்தப் போராட்டத்தை மீறியது அவர்களுக்கு கொடுத்த சத்திய வாக்கை மீறி நோயாளியை காப்பாற்றியது அத்தோடு அவளிற்குரிய வேலை இடம் இல்லாத இடத்தில் அனுமதி இன்றி நுழைந்து வேலை செய்தது, என அவள் செய்த பிழைகள் அதிகம் உள்ளது. இருந்தாலும் இரண்டு உயிர்களை காப்பாற்றி விட்டேன், இன்னும் ஐந்து நிமிடங்கள் பிந்தி இருந்தால், ஒரு உயிர் அல்ல இரண்டு உயிர்களும் போயிருக்கும். அந்தக் கணவனும் வேதனையில் துடித்து இருப்பான். மனசாட்சிப்படி நான் செய்ததுதான் சரி என நிம்மதியான தாதி, தாயையும் சேயையும் சாதாரண வார்ட்டுக்கு இடம் மாற்றி, கணவனிடம் ஒப்படைத்தபின், அவள் தன இருப்பிடம் நோக்கிச் சென்றால்.
காலத்தினால் செய்த “உதவி சிறிதெனினும்” “நன்றி சிறிதெனினும்” ஞாலத்தின் மாணப் பெரிது.

எழுத்து,
மங்கை அரசி.