தனிமைப்படுத்தப்பட்டேன்

எவ்வளவு நேரம் தான் ஜன்னல் ஊடாக வெளி நிலத்தை பார்ப்பது? வெறிச்சோடிய வீதி, வாகன ஓட்டமில்லாது இரைச்சலும் இல்லை. எந்த நேரத்திலாவது ஒன்றிரண்டு வாகனம் ஓடினாலும் வீதியில் நிசப்தம் குடிகொண்டிருந்தது. காக்கை குருவிகள் மட்டும் அங்கொன்றும் இங்கொன்றுமாக பறந்தன. சலிப்புடன் ஜன்னலை விட்டு வீட்டினுள் வந்து புத்தகங்களை புரட்டினேன், ஏற்கனவே படித்த புத்தகங்கள் தான் அவை. பத்திரிகையை விரித்தேன் நான் வாசிக்காத வரிகள் எதுவும் இல்லை. திரும்பவும் ஜன்னல் ஊடாக நோட்டமிட்டேன், மாலை நேரத்தில் பந்து விளையாடும் பையன்கள் வரவே இல்லை, காலையில் பத்திரிகையை போட்ட பையனை நான் ஆசையோடு பார்த்ததை நினைவு கூர்ந்தேன். காதலிக்க தொடங்கினாள் தபால்காரன் தெய்வம் ஆகிவிடுவான், என பாடிய புலவர், அனுபவித்துத்தான் பாடியிருப்பார். கொரோனா வந்ததனால் பத்திரிகை போடுபவன் தெய்வமாக தான் தெரிகின்றான். மனதில் ஓடிய எண்ணங்கள் வாயை மெதுவாக சிரிக்க செய்தன, நல்ல நகைச்சுவை தான் இந்த தனிமைச்சிறையிலும் வருது. ரணகளத்திலும் ஒரு குதூகலம். ஒரு கண நேரம் மகிழ்ச்சிதான் திரும்பவும் மனம் சலித்துக் கொண்டது. மனிதர்களைப் பார்க்க ஆசையாய் இருந்தது ஆனால். 

நான் தனி அறையில் இருக்கின்றேன் என்னுடைய உணவு தேவைகள் உள் ஜன்னல் ஊடாக நிறைவேறியது. இயற்கை உபாதைக்கு அறையுடன் சேர்ந்த குளியலறை உள்ளது. என்னுடைய அறையில் சகல வசதிகளும் உள்ளன. ஆனால் வெறுமையாக உணர்கின்றேன்.   வீட்டுச் சிறை என்பது  இதுதானா? நான் எந்த தவறும் செய்யவில்லை. ஊர் சுற்றிப் பார்க்க அண்டைய நாடு சென்று திரும்பியதனால் எனக்கு இந்த நிலை.

எழுந்து போய் டிவியை முறுக்கினேன், கொரோனா என்றுதான் டிவி சொல்லிக்கொண்டிருந்தது டிவியை நிறுத்தி கம்ப்யூட்டரை இயக்கினேன் அங்கேயும் கொரோனா செய்திதான் எல்லாம் எதிர்மறைச் செய்திகள் மொபைல் போனை எடுத்தேன் என்னுடன் கதைத்த அத்தனை நண்பர்களும் கொரோனாவின் கோரத்தாண்டவத்தை திரும்பத் திரும்பக் கூறினார். மன அழுத்தம் வேகமாக இருந்தது. மாடியில் இருந்து குதித்து விடலாமா, என நினைத்தேன் ஆனால் அறைக்கு வெளியில் போக வழியில்லை. திரும்பவும் ஜன்னலோரம் வந்தேன் எதிர் வீட்டு ஜன்னலில் ஒரு பூஞ்சிட்டு, எனக்கு கை காட்டியது. நானும் ஆர்வமுடன் கை காட்டினேன். என்னுடன் வரும்படி சைகை காட்டினேன். குழந்தை மறுப்பு தெரிவித்த படி உள்ளே ஓடி விட்டது.

தொடர்ந்து வீதியை நோக்கியவண்ணம் நின்றேன். வீதியில் வாகன சத்தம் கேட்டது, வாகனம் நிறுத்தப்பட்டது, அதிலிருந்து ஒரு மனிதன் இறங்கினான், ஆச்சரியப்பட்டுப் போனேன். வேற்றுகிரகவாசியோ! என அவருடைய செய்கையை கவனித்த பின் வாய்விட்டு சிரித்து விட்டேன். முதலில் முகக் கவசத்தை கழட்டினார், பின் தலையில் இருந்து கால்வரை போடப்பட்டிருந்த உடையையும் கழட்டினார், கழட்டிய உடைகளை ஒரு பிளாஸ்டிக் பையினுள் போட்டுக் காருக்குள் வைத்து விட்டார். காலில் உள்ள சப்பாத்துக்களை ஏற்கனவே கழட்டி விட்டார். காலில் செருப்பு அணிந்தபடி நிமிர்ந்தார். அவரை பார்த்த நான், அட நம்ம வைத்தியர் தம்பி. என மெதுவாக சொல்லிக் கொண்டேன். வீட்டின் அழைப்பு மணியை அழுத்திவிட்டு திரும்பிவந்து தூரமாக நின்றார். உள்ளிருந்து யாரோ கதவைத் திறந்தபோது, உள்ளே சென்று குளியல் அறைக்குள் நுழைந்து விட்டார் என நான் கணித்துக் கொண்டேன். குளியலறையில் வெளிச்சம் பாய்ச்சப்பட்டதனால், என் அனுமானம் சரியாக இருந்தது. வெறும் கண்ணுக்குத் தெரியாத கொரோனாவால், சகல வல்லமையும் பொருந்திய மனித உலகமே பயந்து நடுங்குவது வேடிக்கையாகத்தான் இருந்தாலும். தவிர்க்க முடியாத செயல் இது. பூமிப்பந்தில் உள்ளவர்களின் சிந்தனைகள் எல்லாம் கொரோனா என்று ஓடுகின்றது. கொரோனா நோயை எப்படி ஒழிப்பது? கொரோனா நோயை எப்படி சுகப்படுத்துவது? கொரோனாவிலிருந்து இறந்தவர்களை எப்படி அடக்கம் செய்வது? என்பவையே மனித மூளையின்  தேடுதலாக இன்று உள்ளது. உலகமே இன்று ஒரு நேர்கோட்டில் இயங்குகின்றது

எப்படியான உணவு வந்தாலும் நான் உண்பேன், குறை ஏதும் சொல்ல மாட்டேன். இருமல், தும்மல், மூக்கு கூட சிந்தாமல் என்னைக் கட்டுப்படுத்தி வைத்துள்ளேன். மேற்படி விடயம் நடந்துவிட்டால் நோயாளி என கருதி என் சிறை காலம் கூடிவிடலாம். 14 நாட்கள் எப்போது தீரும்? என்று நான் கை விரல்களில் எண்ணி களைத்துப் போய்விட்டேன் நாட்கள் மட்டும் ஊரவில்லை, மணித்தியாலங்கள் நிமிடங்கள் கூட நகர்வதில் சோம்பல்.

வாகன நெரிசலும், இரைச்சல் சத்தம், வெயில் சூடு, என எதை எதையெல்லாம் வெறுப்பாய் நோக்கினோமோ! அவையெல்லாம் வேண்டும் போல் உள்ளது. எனக்கு சாப்பாடு வரும் போது சோப்பு கட்டியும் உடன் சேர்ந்து வருகிது. சோப்புப் போட்டுக் கை கழுவி கழுவி கைரேகையும் அழிஞ்சு போச்சு. கை கழுவுவதற்காக குளியலறைக்கு நடப்பதுவே என்னுடைய நாளாந்த உடற்பயிற்சியானது சீனாக்காரன் சாப்பிட்டதற்கு நான் கைகழுவுகின்றேன்? என்று பாடிப்பாடி நேரத்தை ஓட்டிக் கொண்டு இருக்கின்றேன்

எழுத்து,
மங்கை அரசி.

Leave a Comment

Your e-mail address will not be published. Required fields are marked *