
காலையில் எழுந்து, காலைக்கடனை முடித்து, முகம் கழுவி சாமி கும்பிட்ட, பின் பேப்பரும் கையுமாக சோபாவில் அமர்ந்திருந்தான் சுந்தரலிங்கம் என்னும் பெயருடைய சுந்தர். வானொலியில் இசையை ரசித்தவண்ணம், பத்திரிகையில் புதினங்களை வாசித்தபடி, கோப்பியை சுவைத்த வண்ணம், சுற்றி நடப்பவற்றையும் அவதானித்துக் கொண்டிருந்தான். சமையல் அறையில் சமையல் வாசம் மூக்கைத் துளைத்தது. அந்த நேரம் பக்கத்து வீட்டுப் பெண் ஓடி வந்தாள். அவனைப் பார்த்து புன்னகைத்த வண்ணம் அவள், அக்கா என அழைத்தபடி சமையலறைக்குள் ஓடினான்.
அக்கா மகளிர் தினத்திற்கு ஒரு கட்டுரை எழுத வேண்டும் பொயின்ஸ் தருவீங்களா? அக்கா இன்றைக்கு வேணும்! வந்தவள் சொல்லி முடிக்கவும், அவன் மனைவி ஜெயா தன் வேலையை கவனித்தபடியே அவளுக்கு உதவினாள். க்ரெட்டா துன்பெர்க் (Greta Thunberg) எனும் சுவீடன் நாட்டைச் சேர்ந்த 15 வயதான பெண் பருவநிலைக்காக போராடிக்கொண்டு உள்ளார். அவர் எப்படி எப்படி போராடினார் என விலாவாரியாக விபரித்த அவன் மனைவி, “வாழ்வாதார உரிமை விருதுக்கு தேர்வு செய்யப்பட்டுள்ளதாக ஸ்வீடன் நாட்டைச் சேர்ந்த மனித உரிமைகள் விருதுக்கான தேர்வு குழு தலைவர் தெரிவித்துள்ளார். அத்துடன் டைம்ஸ் பத்திரிக்கையின் உலகின் நபர் 2019 என்றும் தேர்ந்தெடுக்கப்பட்டுள்ளார் 2019ஏப்ரல், தெற்கில் உள்ள ஐரோப்பிய ஒன்றிய நாடாளுமன்றத்தில் பேசியுள்ளார் இன்னும் சொல்கின்றேன் உலக நாட்டுத் தலைவர்களை கேள்வி கேட்ட, அந்த சிறிய பெண்ணைப் பற்றி இன்னும் இன்னும் விளக்கமாக கூறினாள்.
கேட்டுக்கொண்டிருந்த சுந்தர் பிரமித்துப் போனான் அப்போது அந்தப் பக்கத்து வீட்டுப் பெண் சொன்னதுதான் சுந்தருக்கு எரிச்சலை கூட்டிவிட்டது பொறாமைத் தீ கொழுந்துவிட்டு எரிந்தது. அந்தப் பக்கத்து வீட்டுப் பெண் அக்கா இவ்வளவு விஷயங்களை உங்கள் மூளைக்குள் புதைத்து வைத்துள்ளீர்கள் இன்னும் வேறு விஷயங்களும், அங்கு இருக்கின்றதா? உங்கள் மூளை என்ன கொம்பியூட்டரா?! தேங்க்ஸ்(Thanks) அக்கா என்று சொன்னபடி ஓடிவிட்டாள். “பெரிய படிப்புகாரி :/” சுந்தர் சலித்துக் கொண்டான். அந்த நேரம் பாடசாலை வான் வந்து கோர்ன் அடித்தது.
பிள்ளைகள் இருவரிடமும் சாப்பாட்டு பெட்டி தண்ணீர் போத்தல் எல்லாம் கொடுத்து மிச்சம் வைக்காமல் சாப்பிட வேண்டும்! என்ன? என்று சொல்லிய வண்ணம் பாடசாலை பாக் முதுகில் மாட்டி விட்டு அனுப்பி வைத்தாள். Bye அம்மா! என்றபடி பிள்ளைகள் ஓடிச்சென்று பாடசாலை வேனில் ஏறி போய் விட்டனர். சுந்தருக்கு சுத்தமாக எதுவும் பிடிக்கவில்லை. குத்துக் கல்லாட்டம் இங்கே நான் ஒருத்தன் உட்கார்ந்து இருக்கிறேன். எனக்கு பாய் சொல்ல தோன்றவில்லை !அப்படி பிள்ளைகளை வளர்த்து வைத்திருக்கிறாள். மனதுக்குள் நினைத்த படி, எதுவும் தெரியாத மாதிரி பத்திரிகையில் நோட்டம் விட்டபடியே அமர்ந்திருந்தான் அப்போது, நான்கு ஐந்து பெண்கள் ஜெயா ஜெயா என கூப்பிட்ட படி வந்தனர். ஜெயா வெளியில் வந்தாள், மல்லிகைப்பூ தருவீர்களா? எனக் கேட்டனர், “ஒரு கல்யாண வீட்டிற்கு போறோம் அதுதான் தலைக்கு வைக்க பூமாலை கட்டப் போகிறோம் என்றார்கள்” ஜெயா மல்லிகை பூ பந்தலைக் கை காட்டினாள். கனகாம்பரம் நிறைய பூத்திருக்குது, அதிலும் தருவீர்களா? என அவர்கள் கேட்ட போது மரத்தில் முறிவு, ஏற்படாது ஒவ்வொரு பூவாக கழட்டி எடுங்கள் என்றவண்ணம், மனைவி சமயலறைக்குள் போன பின்பு அந்தப் பெண்களின் சம்பாஷனையை உற்றுக் கேட்டான் சுந்தர்.
ஜெயா கெட்டிக்காரி எப்படி தோட்டத்தை வைத்திருக்கின்றார். நல்ல கலை உணர்ச்சி உள்ள பெண் என கதைத்தபடி பூக்களை கொய்தனர். திரும்பவும் வயிறு எரிந்தது, பொங்கியது. ஏனோ யார் ஜெயாவை புகழ்ந்தாலும் சுந்தர் கொந்தளித்து தான் போய் விடுகின்றான்.
ஜெயா வந்து காலைச் சாப்பாடு சாப்பிட அழைத்தாள். சுந்தர் மறுத்துவிட்டான், எனக்கு உடல்நிலை சரியில்லை என்று ஆபிசுக்கு லீவு போட்டுவிட்டேன். சோறு சமைத்து ரசமும் வைத்து ஏதாவது பொரியலும் செய்து பால்கறியும் வைத்தால் நல்லது என்றான். நின்று நிமிர்ந்து பார்த்தாள் ஜெயா, என்ன! கண்களால் கேட்ட சுந்தருக்கு ஒன்றும் இல்லை என்று சொன்னபடி, அவள் உள்ளே போய் விட்டாள். ஒரு நமட்டுச் சிரிப்புடன் சுந்தரின் எண்ண ஓட்டம் தொடங்கியது முதலே சொல்லியிருந்தால் காலை சாப்பாட்டை செய்யாமல் மதிய உணவை சமைத்து இருக்கலாம் என எண்ணி இருந்திருப்பாள். நல்லா வேலை செய்யட்டும் எல்லோரும் புகழும்போது சந்தோஷப்படுகிறாள், தானே வேலை செய்து களைக்கட்டும் என மனதில் எண்ணிக் கொண்டான்
கண்ணை மூடி எண்ணக் கடலில் மிதந்த அவன் பத்திரிகை விரித்தபடி இருக்க வானொலியில் இசை தவழ்ந்து வந்து தாலாட்ட அவனை அறியாமல் கண்ணயர்ந்து விட்டான். சுவர் மணிக்கூடு 9 மணி அடித்து ஓய்ந்த போது, ஜெயா சுந்தரை தட்டியெழுப்பி நீங்கள் சொன்ன மாதிரி சோறு ரசம் பொரியல் பால்கறி வைத்துள்ளேன். ப்ளீஸ் போட்டு சாப்பிடுங்க எனக்கு நேரம் போய்விட்டது. என்று சொல்லிய வண்ணம் ஓட்டமாக ஓடிச் சென்று ஸ்கூட்டரை இயக்கத் தொடங்கினார்
சுந்தருக்கு ஏனோ மனசாட்சி குத்தியது “நீர் சாப்பிட்டுவிட்டீரா?” என ஒரு கேள்வி கேட்டான் இல்லை நேரம் போய்விட்டது லஞ்ச் கொண்டு போறேன் தானே வாரேன் என சொன்னவண்ணம் புறப்பட்டு விட்டாள். சுந்தருக்கு குற்ற உணர்ச்சியாக இருந்தது காலையில் எழுந்து இயந்திரமாக வேலை செய்து பிள்ளைகளை ஆயத்தப்படுத்தி பாடசாலைக்கு அனுப்பி வைத்ததுடன் உதவி என்று வந்தவர்களுக்கு முகம் சுழிக்காமல் உதவி செய்து கொடுத்ததுடன் தனது தேவையையும் சரியாக நிறைவேற்றி விட்டு வேலைக்குப் போகின்றாள். ஆனால் தன்னை கவனிக்கவில்லை. மனைவியின் உடல்நிலை சரியில்லை என படுத்துவிட்டால், இவ்வளவு வேலைகளையும் யார் செய்வார்கள்?

நானும் கூடமாட உதவி செய்திருந்தால் அவளுக்கு சிறிதாக நேரம் மிச்சம் இருந்திருக்கும் அவள் தனது காலை உணவை சாப்பிட முடிந்திருக்கும் அவளுடைய நல்ல குணத்தைத்தானே பாராட்டினார்கள் அவள் சமையலில் மட்டுமல்ல அவளுடைய கந்தோர் வேலையிலும் திறமையானவள், என பெயர் எடுத்துள்ளாள். உலக விடயங்கள் அரசியல் விடயங்கள் சிறு சிறு மருத்துவ குறிப்புகள் என பல விடயங்களிலும் தேர்ந்தவளாக தான் இருக்கின்றாள் இதற்காக நான் பெருமைப் பட அல்லவா வேண்டும்? ஏன் பொறாமைப்பட வேண்டும்? நான் ஆண் என்ற மமதையா?
நான் அப்படிப்பட்டவன் அல்லவே?! இன்று ஜெயா வீட்டுக்கு வந்ததும் அவளிடம் சமரசமாக கதைத்து அவளுக்கு உதவியாக இருந்து வாழ்க்கையை சந்தோஷமாக கழிக்க வேண்டும் இரண்டு மாடுகள் சேர்ந்து இழுத்தால் வண்டி சுகமாக போகும் ஒரு மாடு மட்டும் இழுத்தால் வண்டி பழுதுதான் ஆகும், மாடும் செயலிழந்துவிடும் என எண்ணினான் சுந்தர்

எழுத்து,
மங்கை அரசி.