தஞ்சை பெரிய கோவில் குடமுழுக்கு.

தஞ்சை கோவிலின் தலையில் அஸ்திவாரம்.

தஞ்சாவூர் பிரகதீஸ்வரர் கோவிலில் பிப்ரவரி 5 ஆம் திகதி குடமுழுக்கு நடைபெற இருக்கின்றது. ( திருக்குட நன்னீராட்டுப் பெருவிழா.)

1980 மற்றும் 1997 ஆகிய வருடங்களில் உரிய முறைப்படி சிறப்பாக நடந்ததாக அறியப்படுகின்றது. 23 ஆண்டுகளிற்கு பிறகு இந்த வருடம் பிப்ரவரி 5ஆம் திகதி கும்பாபிஷேகம் நடக்கிறது இதற்காக ஜனவரி 27 முதல் பூர்வாங்க பூஜைகள் நடந்து சிறப்பு பூஜைகள் நடந்து யாகசாலை பிரவேசம் யாகாரம்பம் முதல் காலயாக பூஜை, ஜபம், ஹோமம், பூரணாஹுதி தீபாராதனை போன்றவை நடந்திருக்கின்றன. யாகசாலை பூஜைக்காக நாட்டின் முக்கிய நதிகளான கங்கை, யமுனை, காவிரி உள்ளிட்ட நதிகளில் இருந்து புனித நீர் கொண்டு வரப்பட்டுள்ளது.

கும்பாபிஷேக விழாவிற்காக தஞ்சை பெரிய கோவிலின் பின்புறமாக 11 ஆயிரத்து 900 சதுர அடி பரப்பளவில் யாகசாலை அமைக்கப்பட்டுள்ளது. யாகசாலை பந்தலில் 8 இடங்களில் தீயணைப்பு வீரர்கள் தீயை அணைக்க கூடிய உபகரணங்களுடன் தயார் நிலையில் வைக்கப்பட்டுள்ளதுடன், தீயணைப்பு வாகனங்களும் தயார்நிலையில் நிறுத்தப்பட்டுள்ளன. சுழல் மேசையுடன் கூடிய ஏணி பொருத்தப்பட்ட அதிநவீன வாகனம் பின்லாந்து நாட்டில் இருந்து 11 கோடி ரூபாய்க்கு வாங்கப்பட்டு, மூலவர் விமான கோபுரத்தின் பின்புறம் நிறுத்தப்பட்டுள்ளது. நீரியல் அழுத்தத்தில் செயற்படக்கூடிய இந்த வாகனம் தீயணைப்பு மற்றும் மீட்பு பணியை செய்யக்கூடியது. மூலவர் விமானக் கோபுரம் 216 அடி உயரமுடையது. கோபுரத்திற்கு சிவாச்சாரியார்கள், ஓதுவார்களுடன் தீயணைப்பு வீரர்களும் செல்லவுள்ளனர். தேவை ஏற்படின் சுழல் மேசையுடன் கூடிய ஏணியின் உதவியுடன் கீழே இறக்க முடியும். தண்ணீரை பீச்சி அடிக்கும் வசதியும் இந்த வாகனத்தில் உண்டு. நஞ்சையும் புஞ்சையும் கொஞ்சி விளையாடும் தஞ்சை நகரில், வானத்தைத் தொடும் அளவு உயரமாக எம்மை அண்ணாந்து பார்க்க வைப்பது தஞ்சை பெரியகோவில். உலகப் பாரம்பரிய சின்னங்களில் ஒன்றாக இதை யுனெஸ்கோ அங்கீகரித்துள்ளது. இக்கோவிலை சிறப்பாக பாதுகாத்து பராமரித்து வருவது மத்திய தொல்லியல்த் துறை.

இந்தக் கோவிலிற்கு தஞ்சை பெரிய கோவில், தஞ்சை பெருவுடையார் கோவில், பிரகதீஸ்வரர் கோவில், ராஜராஜேஸ்வரம் என பல பெயர்கள் உள்ளது. இதைக் கட்டிய அரசனுக்கும் ராஜராஜசோழன், அருண்மொழிவர்மன், மும்முடிச்சோழன், சிவபாத சேகரன், திருமுறைகண்ட சோழன் என பல பெயர்கள் உண்டு. தஞ்சை பெரிய கோவிலின் கோபுர உச்சியை உற்றுப்பார்த்தால், பிரமாந்திரக்கல் எனப்படும் ஸ்தூபிக்கல் தெரியும். இதன் எடை 80 டன். இந்தக் கல்லை தாங்கும் சதுரவடிவக் கல்லும் 80 டன் கொண்டது. அந்தச் சதுர கல்லின் மேல் பக்கத்திற்கு இரண்டாக எட்டு நந்திகளும் ஒவ்வொன்றும் 10 டன் எடை கொண்டதாக, 80 டன் எடையுடன் உள்ளது. இந்த மூன்று 80டன்களும் இந்த பெரியகோவிலின் அஸ்திவாரம். அஸ்திவாரம் அடியில் தான் இருக்கும். ஆனால் இந்த விந்தை இங்கு மட்டுமே உள்ளது. எப்படியெனில் நாம் செங்கற்களை வைத்து வீடு கட்டும்போது கட்டடத்தின் உயரம் 12 அடி என்றால், நான்கு அடிக்காவது அஸ்திவாரம் போட வேண்டும் பெரிய கோவிலின் உயரம் 216 அடி ஆதலால் 50 அடி ஆழம் 50 அடி அகலமாக அஸ்திவாரம் அமைக்க சாத்தியமில்லை. ஏனெனில் 50 அடி ஆழத்தில் தண்ணீர் வந்துவிடும் ஆனால் பெரிய கோவிலின் அஸ்திவாரம் வெறும் 5 அடி மட்டும் தான்.

இங்கு சோழர்களின் அறிவியல் மேம்பாடு தெளிவாக தெரிகின்றது. இலகு இணைப்பு மூலம் கற்கள் இணைக்கப்பட்டுள்ளது. ஒவ்வொரு கல் இணைப்பிற்கும் இடையில் நூலளவு இடைவெளி விட்டு அடுக்கினர். கிராமங்களில் உபயோகிக்கப்படும் கயிற்றுக் கட்டிலில் கயிறுகளின் பிணைப்பு லூசாக தாழ்ந்திருக்கும் அதன் மேல் மனிதர்கள் ஏறி அமரும்போது அனைத்தும் உள்வாங்கி இறுகிவிடும் கயிறுகளின் பிணைப்பு பலமாகிவிடும். இந்த அடிப்படையில் லூசாக கற்களை அடுக்கி சென்று உச்சியில் பிரம்மாண்டமான எடையை அழுத்தச் செய்வதன் மூலம் மொத்த கற்களும் இறுகி மிகப் பலமான இணைப்பாக உருவாகின்றது. கோவிலின் உச்சியில் அஸ்திவாரம் இடம்பெற்ற அதிசயம் இதுதான். எத்தனை பூகம்பம் வந்தாலும் எந்தக் கல்லும் அசையாது. எத்தனை ஆயிரம் ஆண்டுகள் ஆனாலும் நிலையாக நிற்கும். சூரிய சந்திரர் இருக்கும் வரை இக்கோவிலும் இருக்கும் என்று அன்று சோழன், ராஜராஜ மன்னனின் நம்பிக்கை பொய்க்காது என்பது இன்றுவரை நிரூபணமாகி உள்ளது. ஆயிரம் ஆண்டுகட்கு முன் வாழ்ந்த தமிழனின் வீரத்தையும், பக்தியையும், கலை நேர்த்தியையும், அறிவியலையும் பிரதிபலிக்கும் வரலாற்றுக் களஞ்சியமான தஞ்சை பெரிய கோவில் பல்லாண்டு நீடித்து நின்று நம் சந்ததியினரும் அதன் பெருமையுணர நாம் போற்றிப் பாதுகாக்க வேண்டும்.

எழுத்து,
மங்கை அரசி.

Leave a Comment

Your e-mail address will not be published. Required fields are marked *