காதலிற்கு கற்புண்டா?

காதலிற்கு கற்புண்டா?

உப்பில்லாப் பண்டம் குப்பையிலே என்று சொல்வதைப் போன்று, கற்பில்லா உறவு எப்போதும் நிலைக்காது. அதனால்த் தான் வையகத்தில் வாழ்கின்ற மனிதர்களும் நிலையாக நீண்டநாள், துணையாக இருப்பதில்லை. அதில் காதல் மட்டும் என்ன விதிவிலக்கா? கற்பிழந்த காரணத்தால், காதலுமிங்கு கயிறறுந்த காற்றாடிபோல், காற்றிளுக்கும்  திசைகளில் வழிமாறிச் செல்கின்றது.

காதலிற்கு கற்புண்டா? என்ற கேள்வி உங்களை போல் எனக்கும் எழுந்தது. கேள்விக்குப் பதில் காண வேண்டும் என்ற வேள்வித்  தீ எனக்குள் எழ, காதல் எப்படி உருவாகுகின்றது என்ற காரணத்தை அலசினேன். விஞ்ஞானிகள் சொல்கின்றனர், காதல் ஹார்மோன்களின் கசிவு என்றும். கவிஞர்கள் சொல்கின்றனர் காதல் கடவுளின் வடிவு என்றும். ஆகவே காதல் என்பதைத் தெளிவாக விரிவாக புரிந்துகொள்ளவேண்டும் என்றால், காதல் என்பதன் வரைவிலக்கணத்தைப் பார்க்க வேண்டும். அன்பின் ஒரு வடிவமே காதல். அந்தவகையில் கவிஞர்கள் சொல்வது உண்மையாகின்றது. அன்பே இறைவன் என்று தான் எல்லா மதங்களும் சொல்கின்றன. ஆகவே காதல் கடவுளின் வடிவு தான். குறிப்பிட்ட வயதைத் தாண்டும் போது தான் காதல் மலர்கின்றது, ஆகவே விஞ்ஞானம் சொல்வதைப் போல ஹார்மோன்கள் சுரக்கும் போது காதலும் பிறக்கின்றது என்பதில் உறுதியடையலாம்.

இயற்கையாகச் சுரக்கும் ஹார்மோன்கள் எப்படி எல்லோரிடமும் சுரப்பதில்லை என்ற வினாவும், இறைவனின் வடிவம் தான் காதல் என்றால் ஏன் காதலைக் கடந்து முனிவர்கள் இறைவனைக் காண்கின்றனர் என்ற கேள்விகளும், மீண்டும் இந்தத் தலைப்பில் ஒரு சர்ச்சையை ஏற்படுத்த முனைகின்றன. காதல் என்பது குறிப்பாக ஒருவருக்கு ஒருவர் இடையில் உண்டாகும் மாய உறவு (பெரும்பான்மையாக) ஆகும். காதல் எப்படி உருவாகுகின்றது என்பதை உணர்ந்தால், ஒருவேளை இதற்கான பதில் கிடைக்கலாம்.

காதல் என்பது ஒருவகையான பாதுகாப்புணர்வு. இந்த உலகில் வாழும் மனிதர்கள் பொதுவாக ஆழ்ந்த பயத்தில் வாழ்ந்து வருகின்றனர். உலகில் வாழும் உயிரினங்களின் வாழ்க்கை முறையைப் பாருங்கள், ஒரு உயிரைக் கொன்றால்த் தான் இன்னொரு உயிர் வாழமுடியும் என்ற அமைப்பில்த் தான் இயங்குகின்றது. ஆகவே மனிதனும் அதேபோலத் தான் இருந்து, பிறந்து, பரிணாம வளர்ச்சியில் பண்பாடு அடைந்துள்ளான். இருப்பினும் ஒவ்வொரு உயிருக்குள்ளும் இருக்கும் அந்தத் தனிமை உணர்வு மற்றும் பயம் மனிதனுக்குள்ளும் உண்டு. அதை போக்கவே மனிதன் கூட்டம் கூட்டமாக வாழத் தொடங்கினான். இந்தக் குணம் மற்றய சில உயிரினங்களுக்கும் உண்டு. (உ+ம்- மாடு, ஆடு, யானை ….) ஆனால் மனிதனின் அந்த ஒற்றுமையில் ஒரு விரிசல் ஏற்பட மனிதனுக்குள் பிளவு ஏற்பட்டது. அதனால்தான் மனிதன் தன்னை பிற மனிதரிடம் இருந்து காத்துக்கொள்ளும் எண்ணத்தில் தன் கூட்டத்தில் ஒரு பிணைப்பை   ஏற்படுத்தினான்.

அந்தப் பிணைப்புத் தான் அன்பு. அதனால்த்தான் பாருங்கள், எம்மை பாதுகாப்போர் மீது அன்பு வரும். அந்த அன்பு, இரத்த சொந்தத்தில் பாசமாகவும், மற்ற சொந்தத்தில் நட்பாகவும், இரத்தக் கலப்புச் சொந்தத்தில் காதலாகவும் பெயரிடப்பட்டது. இரத்தக் கலப்புச் சொந்தம் என்பது திருமண பந்தம், ஒரு பெண்ணுக்கு தன்னைப் பாதுகாக்கும் தகுதி கொண்ட ஆணைப் பார்க்கும் போதும், ஒரு ஆணுக்கு தன்னை பாதுகாக்கும் குணாதிசயம் கொண்ட பெண்ணைப் பார்க்கும் போதும், இரத்தக் கலப்பு அன்பு உருவாகும் (ஹார்மோன் சுரக்கும்) வண்ணம் எம் உடல் பரிமாண வளர்ச்சி அடைந்துவிட்டது. எப்படி என்றால், மீனாக இருந்த உயிரினம் கடலில் உணவுப் பற்றாக்குறையால் மெதுவாக தரை நோக்கி வந்ததால் முதலையாக மாறியதை போல.

அப்படி என்றால் கற்பென்றால் என்ன? என்ற கேள்விக்கு, இலகுவாக அதன் பெயரிலேயே விடையுண்டு ( கற்பு = காப்பு ). மனிதன் தன் பயத்தைப் போக்க தனிமையைத் தவிர்த்து கூடமாக இருக்க உருவாக்கிய அன்பைப் பாதுகாக்கவே கற்பை வடிவமைத்தான். ஒரு உறவில் உள்ளவர்களுக்குள் போடப்படும் மாயை ஒப்பந்தம் தான் கற்பு. நீ என்னோடு நேர்மையாக இருக்க வேண்டும், உண்மையாக இருக்க வேண்டும், நாம் ஒற்றுமையாக இருக்கவேண்டும் என்பதே கற்பின் கொள்கைகள். ஆகவே காதலிற்கு கற்புண்டா? என்ற கேள்விக்கு பதில் தெரிந்தவர்கள், உங்களுக்கு மிகவும் பிடித்த உங்கள் மீது அன்புகொண்டவர்களிடம் அல்லது நீங்கள் மிகவும் அன்புகொண்டவரிடம் இந்தக் கட்டுரையைப் பகிர்ந்து உங்கள் அன்பைப் புரிந்துகொள்ளுங்கள்.

கற்பு ஒளிந்திருப்பது,
கருவறையில் அல்லை, – உன்
கற்பனையில்த் தான்.
நம்பிக்கை கொண்ட உறவினில் மட்டுமே,
நியாமான கற்புண்டு.

சிந்தனை சிவவினோபன்

2 thoughts on “காதலிற்கு கற்புண்டா?”

  1. Pon Puthisigamany

    “கற்பெனப்படுவது சொற் திறம்பாமை”கற்பு என்பது ஒரு உறுப்பல்ல.அது ஒரு உறுதிப்பாடு அந்த உறுதிப்பாடு மற்றவர்களால் முறியடிக்கின்றபோது எழும் அவமானம் வேதனை கற்பிழந்தமைக்கு ஒப்பாகும்.பெண்கள் தாம் கட்டிக்காத்த மானம் என்று கருதியதை , அடக்குமுறையால் சந்திக்கும் அவமானமே கற்பிழந்ததற்கு ஒப்பானதாகும். அப்படி என நான் கருதுகிறேன்.

    1. நீங்கள் சொன்னது சரி புத்திசிகாமணி அண்ணே, என் கட்டுரையின் முடிவில் கற்பின் ஆரம்பப் புள்ளியை விபரித்துள்ளேன். அதைப் புரிந்தால் பெண்கள் அடிமைப்பட அவசியமில்லை.

Leave a Comment

Your e-mail address will not be published. Required fields are marked *