அணுவினுள் ஒரு அகிலம்.

அணுவினுள் ஒரு அகிலம்.

மறையப் போகும் ஒரு சில காலத்தில், உலகையே திரும்பிப் பார்க்க வைத்தது மட்டுமல்லாமல், தான் இருக்கும் துறையில் தன் மறைவின் பின் 20 வருடங்கள் வரை யாராலும் நினைக்கவே முடியாத பல சாதனைகளை நிகழ்த்தி மறைந்த மாபெரும் புத்திசாலி ஸ்டீவ் ஜாப்ஸ் ( Steve Jobs ) அவர்கள் கூறும் தாரக மந்திரம் மாற்றி யோசி (Think different). ஆனால் இப்போது நான் உங்கள் அனைவருக்கும் சொல்ல உள்ள தாரக மந்திரம் “முதலில் யோசி (Think First)”. ஏனென்றால் இவ்வுலகில் சிந்திக்கவும் செயல்படுத்தவும் ஆயிரம் கோடிக்கு  மேற்பட்ட ரகசியங்கள் ஒளிந்துள்ளது. ஆனால் அதைக் கண்டு வியக்குமளவு ஆற்றல் எம்மிடம் குறைந்து கொண்டே வருகின்றது.

எங்களிடம் ஆறாவது அறிவு உண்டு, பகுத்தறிந்து பல ஞானங்களை பெற்றுக்கொண்டுள்ளோம். இன்று ஏழாம் அறிவைப் பற்றிப் பார்க்கப்போகின்றோம். பார்த்ததைக் கொண்டு சிந்தித்து பலதைக் கண்டுபிடிப்பது ஆறமறிவு. பாராமலேயே உணராமலேயே உண்மையை உணரும் ஏழாமறிவைத் தூண்டும் இந்தக் கட்டுரை சற்று குழப்பமானதாக இருப்பதற்கு வாய்ப்புண்டு ஆகவே துல்லியமாக நிறுத்தி நிதானமாக வாசிக்கவும், நானும் எளிமையாக விளங்கப்படுத்த முயல்கின்றேன்.

அணு என்றால் என்ன என்று கேட்டால் எங்கள் மனக்கண்ணில் உடனடியாக ஒரு வட்ட வடிவம் தோன்றும். இன்னும் சற்று உற்றுப் பாரத்தால் அது ஒரு கோளவடிவமாகத் தோன்றும் மற்றும் இலத்திரன்கள் சுற்றிக் கொண்டு இருப்பது போன்று தோன்றும். இவை எல்லாம் நாம் கற்றுக்கொண்ட பள்ளிப்பாடத்தால் உருவாகும் விம்பங்கள். நாம் இதுவரையும் அணுவையும் பார்த்ததில்லை அதைச் சுற்றும் இலத்திரனையும் பார்த்ததில்லை, படித்ததால் மனதில் தோன்றிய ஞானம் அதுவே ஆறாமறிவு. இந்த இலத்திரன் பற்றிய மனத் தோற்றத்தை அப்படியே நினைவில் வைத்துக்கொள்ளுங்கள்.

இப்போது அகிலத்தை எடுத்துக்கொள்வோம், பூமி என்று சொன்னால் உடனடியாக எங்கள் மனதில் ஒரு வட்ட வடிவம் அல்லது கோள வடிவம் தோன்றும், அது சூரியனை மையமாக வைத்து வட்டப் பாதையில் அல்லது நீள்வட்டப் பாதையில் சுற்றுவது போன்று தோன்றும். ஆனால் இதுவரை இந்தக் காட்சியை உங்கள் கண்கள் கண்டதுண்டா? இல்லை. வெறும் சித்தரிக்கப்பட்ட காட்சிகள் தான் விஞ்ஞானிகளாலும் நாசாவாலும் வெளியிடப்பட்டுள்ளது அவர்களுக்கு எப்படி அந்த ஞானம் வந்தது அதுவும் ஆறாமறிவு தந்த கொடைதான்.

தமிழில் பல சொற்கள் இருக்கின்றது, உதாரணத்திற்கு எடுத்துக் கொண்டால் “பார்த்தல், கவனித்தல், உற்றுநோக்கல்” இவற்றின் அர்த்தங்கள் எல்லாம் ஒரே செயலைத்தான் குறிக்கின்றது ஆனால் அதன் விளைவுகள் வேறுவிதமானது. விஞ்ஞானிகள் கவனித்து உற்று நோக்கிய படியால் பல விடயங்கள் கண்டுபிடிக்கப்படுகின்றது, நாம் அதை பார்த்துப் படிக்கின்றோம் அத்தோடு எம் செயல் முடிந்து விடுகின்றது. அது தான் பார்த்தலுக்கும் உற்று நோக்குதலுக்கும் உள்ள வித்தியாசம். அதனால்த் தான் சொன்னேன் இன்று முதல் நாம் அனைவரும் எம்முடைய தாரக மந்திரமாக “முதலில் யோசி (Think First)” என்பதை உள்வாங்குவோம் என்று. சிந்தித்தால் கண்டுபிடிக்க ஆயிரம் விந்தைகள் அகிலத்திலுண்டு. அதில் ஒன்றுதான் ஒருங்கிசைவு.

ஒருங்கிசைவு என்றால் தோற்றத்தில் ஒரே போல் இருக்காது, முற்றிலும் வேறுபட்டதாகக் கூட இருக்கலாம் ஆனால் அதன் இயல்பும் பெளதீக விளைவும் ஒன்றே போல் இருக்கும். இப்போது முதலில் சொன்னேனல்லவா ஞாபகம் வைத்துக் கொள்ளுங்கள் என்று, ஆம் அந்த அணுவைப் பற்றியும் அதைத் தொடர்ந்து பார்த்த அகிலத்தைப் பற்றியும் யோசியுங்கள். அணுவினுள் இலத்திரன் கருவை மையமாக வைத்து சுற்றுகின்றது. அகிலத்தில் கோள்கள் சூரியனை மையமாக வைத்து சுற்றுகின்றன. அணுவினுள் சக்தி இழப்பு என்பது சக்தி மட்டங்களாக வெளிப்படுகின்றன, அகிலத்தில் கோள்களும் சக்தி வட்டங்களாகத் தான் ஒன்றை விட்டு ஒன்று மிக மிக சிறிய அளவில் விட்டு விலகிக் கொண்டுள்ளன.

இப்போது உங்களுடைய ஏழாம் அறிவைத் தூண்டும் விடயத்தை நான் சொல்லப் போகின்றேன், நுணுக்கமாக உற்றுக் கவனியுங்கள். அணு மிகச் சிறிய ஒன்று அகிலம் மிகப் பெரிய ஒன்று இரண்டையும் எங்கள் கண்கள் சாதாரணமாகப் பார்க்கமுடியாது. இரண்டும் ஒத்திசைந்து போகக்கூடியது என்றால் ஆச்சரியமாக இருக்கும் ஆனால் அதுவே உண்மை. அது எப்படி சாத்தியம் என்றால், நீங்கள் ஒரு செயற்கைக்கோளில் ஏறி விண்வெளிக்குச் சென்றால் அங்கிருந்து பூமியைப் பார்க்கும் போது ஒரு சிறிய பந்து போலவே தெரியும், பூமியில் நடக்கும் மக்களோ அல்லது யானையோ அல்லது திமிங்கலமோ அல்லது அதையும் உள்வாங்கியுள்ள கடலோ எதன் அசைவும் கண்களுக்குத் தெரியாது. கண்ணுக்கு பூமி ஒரு சிறிய பந்து போலத் தெரியும். இப்போது உங்கள் வீட்டில் உள்ள ஒரு சிறிய பந்தை எடுத்துக் கொள்ளுங்கள் இந்தப் பந்து ஏன் ஒரு பூமியாக இருக்கக் கூடாது என்று யோசித்துப் பாருங்கள் ஆச்சரியப்படுவீர்கள்.

ஆம், அணுவை ஒரு அண்டவெளியாக எடுத்துக் கொண்டால் அதற்குள் பல பால் வெளிகள் அந்த பால் வெளியில் பல நட்சத்திரங்கள் அந்த நட்சத்திரத்திற்கு கோள்கள், அதில் ஒரு கோள் பூமி, அந்தப் பூமியில் மக்கள் என்று இருந்தால் எப்படி இருக்கும் என்று சிந்தித்துப் பாருங்கள். இதைக் கேட்க சற்று குழப்பமாக இருக்கும் தலை சுற்றும், சில வேளைகளில் முட்டாள்த் தனமாகக் கூட இருக்கும். ஏன் என்றால் நாம் நம்மைத் தாண்டி, புவியைத் தாண்டி செவ்வாய்க்கு கிரகத்தில் ஆராய்ச்சி செய்கின்றோம் ஆனால் எம்முள்ளேயே பல கோடி அகிலங்கள் உருவாகி மறைகின்றதோ என்ற சிந்தனை ஏற்றுக்கொள்ள முடியாததாக இருக்கும். ஆனால் நியூட்டன் புவியீர்ப்பு பற்றி நிறுவும் வரை எங்கள் தலைகளிலும் பல முறை பழங்கள் விழுந்துள்ளது, ஏன் தேங்காய் கூட விழுந்துள்ளது ஆனால் நாம் புவியீர்ப்பைப் பற்றி சிந்திக்கவோ, அதை நிறுவவோ முயலவில்லை. ஆகவே சிந்திக்கத் தொடங்குங்கள், எங்கள் முன்னோர்கள் எத்தனையோ பல ஆற்றலைக் கொடுத்துவிட்டுச் சென்றுள்ளார்கள். அதை தூசிதட்ட, யோசிக்க ஆரம்பியுங்கள்.

கிருஷ்ண பகவான் தன் திருவாயைத் திறந்து அகிலத்திக் காண்பித்தார், சிவன் பிரமாண்ட உருவெடுக்க அவருள் அரக்க குரு அனைத்து அகிலங்களையும் கண்டார் என்ற கற்பனைக் கதைகளுக்கு, யாரோ ஒரு ஆங்கிலேயர் வந்து உயிர் கொடுத்து நிறுவுவதற்கு முன் நாமே சாதிப்போம்.

கற்பனைகள் எல்லாம் விற்பனைக்கு வந்தால்,

சொப்பனத்தின் விலைக்கு உலகில் நிகரேது?

சிந்தனை சிவவினோபன்

1 thought on “அணுவினுள் ஒரு அகிலம்.”

Leave a Comment

Your e-mail address will not be published. Required fields are marked *